×

இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி: மல்லிகார்ஜுன கார்கே பேட்டி

டெல்லி: இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி என டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் கார்கே பேட்டியளித்தார். மேலும் பாஜகவின் வெறுப்பு அரசியலை மக்கள் புறக்கணித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது . இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. நடந்து முடிந்த தேர்தலில் பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால், ஆட்சியமைக்க தேவையான 272 என்ற எண்ணிக்கையை விட 32 தொகுதிகள் குறைவாகவே பெற்றுள்ளது. இதையடுத்து டெல்லியில் உள்ள மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

ஆலோசனை கூட்டம் முடிந்த நிலையில் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் பேசியதாவது; “இந்தியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன், ஒரே குரலாக மக்களுடைய தீர்ப்பை வரவேற்கிறோம். தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு கிடைத்த மிகப்பெரிய அடி. இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து பாஜகவின் மக்கள் விரோத போக்கை தொடர்ந்து எதிர்ப்போம்.

இந்தியா கூட்டணி தலைவர்கள் இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினோம். இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்த நாட்டு மக்களுக்கு மனமார்ந்த நன்றி. பாஜகவின் வெறுப்பு மற்றும் ஊழல் அரசியலுக்கு எதிராக மக்கள் வாக்குகள் மூலம் பதில் அளித்துள்ளனர். பாஜகவின் பாசிச அரசியலை எதிர்த்து இந்தியா கூட்டணி தொடர்ந்து போராடும். மக்களின் விருப்பத்தை இந்தியா கூட்டணி பூர்த்தி செய்துள்ளது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்ற பாடுபடுவோம்” என கூறினார்.

The post இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி: மல்லிகார்ஜுன கார்கே பேட்டி appeared first on Dinakaran.

Tags : India Alliance ,Mallikarjuna Karke ,Delhi ,Congress ,President ,Karke ,BJP ,
× RELATED இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளித்த...