×

கேரளாவில் சீசன் களைகட்டிய நிலையில் தமிழகத்தில் பலாப்பழம் விற்பனை படு‘ஜோர்’: ரூ.200 முதல் 400 வரை விற்பனை

செங்கோட்டை: தமிழகத்தில் ‘கேரள பலாப்பழம்’ விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. ஒரு பலாப்பழம் ரூ.200 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது.மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளும் பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் பூ பூத்து குலுங்கி காய் காய்ப்பது வழக்கம். முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் ருசியில் தனிச்சிறப்புடையது. செம்பருத்தி பலா, மஞ்சள் வர்க்கை, வெள்ளை வர்க்கை, வேர்பலா என பல வகைகளில் பலாபழம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மா, பலா, வாழை, தென்னை மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. குறிப்பாக, பலாப்பழம் கேரளாவில் ஆரியங்காவு, தென்மலா, கழுதுருட்டி, புனலூர், கொட்டாரக்கரை, பத்தனாபுரம், குளத்துப்புழா, பாலதோட் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் உள்ளது.

தற்போது பலாப்பழ சீசன் காலம் என்பதால் இங்கிருந்து அதிகளவில் பலா பழங்கள் தமிழகத்திற்கு லாரிகளில் ஏற்றி செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சராசரியாக ஒரு முழு பலாப்பழத்திற்கு ரூ.20 முதல் ரூ.30 மட்டுமே கேரளாவில் விலையாக உள்ளது. ஆனால் இதே பழங்கள் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து வந்து விற்பனை செய்யப்படும் போது ரூ.200 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு பழத்திற்கு சுமார் ரூ.150 முதல் ரூ.200 வரை லாபம் பார்க்கின்றனர். மேலும் தற்போது கேரளாவில் பருவமழை தொடங்கியுள்ளதால் பழங்களை பறிக்க முடியாமல் அங்குள்ள பலாப்பழ விவசாயிகள் திணறி வருகின்றனர்.தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் பலாப்பழம் ஒரு சுளை ரூ.5க்கும் முழு பழம் ரூ.200 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது. கேரளாவில் பலாப்பழ சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், தமிழகத்தில் பலாப்பழத்தின் விலை அதிகமாக உள்ளது.

குற்றால சீசன் வருவதையொட்டி, கேரள எல்லையில் தமிழகத்தில் இருந்து வியாபாரிகள் பலாப்பழ தோட்டங்களை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து பழங்களை பறித்து சென்று தமிழகத்தில் விற்பனை செய்கின்றனர். இதனால் வியாபாரிகள் பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கின்றனர். அதே நேரத்தில் விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருகின்றனர். எனவே, அடுத்த சீசனில் கேரளாவின் எல்லையோர ஊராட்சிகளில் பலாப்பழங்களை இருப்பு வைத்து, சிறு தொழில்களை ஊக்குவிக்க வேண்டும் என்று கேரளா மாநில விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

The post கேரளாவில் சீசன் களைகட்டிய நிலையில் தமிழகத்தில் பலாப்பழம் விற்பனை படு‘ஜோர்’: ரூ.200 முதல் 400 வரை விற்பனை appeared first on Dinakaran.

Tags : Kerala ,Tamil Nadu ,
× RELATED கேரளாவில் விற்பனை செய்வதற்காக ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது