×

மாமல்லபுரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கடலுக்குள் ஆபத்தான நிலையில் இறங்கி குளித்த 50 பேர் பலி: உயிரிழப்பை தடுக்க வலியுறுத்தல்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடலுக்குள் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, ஆபத்தான நிலையில் இறங்கி குளித்த 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகிவிட்டனர். இங்கு உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க, நிரந்தர பாதுகாப்பு சுவர் உள்பட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்தில் புராதன சிற்பங்கள், கடற்கரை மற்றும் தலசயன பெருமாள் கோயில் உள்பட பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்ப்பதற்கு பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இவர்கள் அனைவரும் புராதன சின்னங்களை சுற்றி பார்த்துவிட்டு, பின்னர் அங்குள்ள கடலில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களுடன் இன்றி, ஆபத்தான நிலையில் இறங்கி குளிக்கின்றனர். இதில் ஒருசிலர் ராட்சத அலையில் சிக்கி, கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு பரிதாபமாக பலியாகி வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் இதேபோல் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மாமல்லபுரம் கடலில் இதேபோல் ஆபத்தான நிலையில் இறங்கி குளிப்பதற்கு அனுமதி உள்ளதா என்பதும் தெரியவில்லை. இங்கு பல்வேறு பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்ப கடலுக்குள் சீற்றம் காணப்படுவது வழக்கம். மேலும், கடலுக்கு அடியில் உள்ள மணல் பகுதியில் புதையும் தன்மை உள்ளது. இதில் எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி, உற்சாகமாக கடலுக்குள் இறங்கி ஆபத்தான நிலையில் குளிக்கும் குழந்தைகள், பெண்கள் உள்பட சுற்றுலா பயணிகளில் பலர் நீரோட்டம் உள்பட ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு, நீருக்குள் மூழ்கி பரிதாபமாக பலியாகி வருவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இத்தகைய சூழலில் அங்கு பாதுகாப்பு பணியில் கடலோர காவல்படையினரும் இருப்பதில்லை. இதன் மூலம் பலருக்கு சந்தேகம் ஏற்படுகிறது. எனவே, மாமல்லபுரம் கடலுக்குள் இறங்கி குளிப்பவர்களின் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க, கடற்கரையில் நிரந்தர தடுப்பு வேலி, எச்சரிக்கை பலகை, கடலோர காவல் படையினரின் தொடர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், அங்கு கடலுக்குள் இறங்கி ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடுபவர்களை மீட்பதற்கு சுழற்சி முறையில் பாதுகாப்பு உபகரணங்களுடன் மீனவர்களை தயார்நிலையில் வைத்திருக்கு மாவட்ட கலெக்டர் மற்றும் சமபந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post மாமல்லபுரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கடலுக்குள் ஆபத்தான நிலையில் இறங்கி குளித்த 50 பேர் பலி: உயிரிழப்பை தடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரை கோயில்...