×

செங்கல்பட்டு மாவட்டத்தில் 25 இடங்களில் தானியங்கி மழைமானிகள் அமைக்கும் பணி: வருவாய்துறை அதிகாரிகள் தகவல்

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 தாலுகாக்களில் அடங்கிய 25 இடங்களில் தானியங்கி மழைமானி அமைக்கும் பணிகளில் தனியார் நிறுவன ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 தாலுகாவில் அடங்கிய 25 இடங்களில் தானியங்கி மழைமானிகள் அமைக்கும் பணிகளில் தனியார் நிறுவன ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தானியங்கி மழைமானி என்பது, ஒரு யூனிட் பகுதிக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் பெய்யும் மழையை அளவிடும் வானிலை கருவியாகும். இவை உடோமீட்டர் அல்லது ஓம்ப்ரோமீட்டர் என அழைக்கப்படுகிறது. இதில் பதிவாகும் மழைநீரை பொறுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் பெய்த மழையின் அளவு வெளியிடப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை மழையளவு கணக்கிடும் கருவியானது, ஒவ்வொரு தாலுகாவிலும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. இவற்றை கணக்கிட்டு மழையளவு வெளியிடப்படும். இந்நிலையில், தமிழ்நாடு வருவாய் நிர்வாக ஆணையரகம் சார்பில், புதிய தானியங்கி மழைமானிகள், தானியங்கி வானிலை மையங்கள் அமைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, காட்டாங்கொளத்தூர், பாலூர், சிங்கபெருமாள் கோயில், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், திருப்போரூர், பையனூர், மானாம்பதி, செய்யூர், கொக்கரதங்கல், கூவத்தூர், பவுஞ்சூர், சித்தாமூர், ஜமீன் எண்டத்தூர், கருங்குழி, ஓனம்பாக்கம், கூவத்தூர், பெரும்பாக்கம், மாமண்டூர், காவாத்தூர், தாம்பரம், மேடவாக்கம், வேங்கை வாசல், மாம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா ஒன்று வீதம் மொத்தம் 25 தானியங்கி மழைமானிகள் அமைக்கும் பணிகளில் தனியார் நிறுவன ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல், மாமல்லபுரம் உள்ள பொதுப்பணித் துறை அலுவலக நுழைவு வாயிலுக்கு எதிரே நேற்று ஒரு தானியங்கி மழைமானி அமைக்கும் பணிகளில் தனியார் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும், ஒருசில இடங்களில் மட்டும் தானியங்கி மழைமானிகள் அமைக்கும் பணி இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்துவிடும் என்று தனியார் நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வருவாய்துறை அதிகாரிகள் கூறுகையில், ஒவ்வொரு தாலுகாவிலும் தானியங்கி மழைமானி பொருத்தப்பட்டால், அப்பகுதியில் பெய்யும் மழை விவரங்கள், வானிலை முன்னறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

வெப்பம், குளிர் போன்ற தகவல்களும் கிடைக்கும். இந்த தானியங்கி மழைமானிகள் மூலம் பெறப்படும் மழையளவு நேரடியாக கணினியில் பதிவேற்றும் வகையில் மென்பொருள் மூலம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் அவை நேரடியாக பதிவாவதால், நாம் தனித்து மழை அளவை கணக்கிட வேண்டியதில்லை. இதேபோல் ஒவ்வொரு தாலுகாவிலும் தானியங்கி வானிலை மையங்களும் அமைக்கப்படுகின்றன. இதில் காற்றின் வேகத்தை அறியும் வகையில் நவீன கருவிகள் பொருத்தப்படுகின்றன. இதற்காக இடம் தேர்வு செய்யப்படுகிறது. ஏற்கனவே, மேனுவல் மழைமானிகள் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் இவற்றை அமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புதிதாக தானியங்கி மழைமானிகள் அமைக்கப்படுகின்றன. இதில் பதிவாகும் மழைநீரின் அளவை நேரடியாக வருவாய் நிர்வாக ஆணையரகமும், மாவட்ட கலெக்டர்களும் இருக்கும் இடத்தில் இருந்தே கனிணி மூலம் துல்லியமாக தெரிந்து கொள்ளலாம் என்று வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் 25 இடங்களில் தானியங்கி மழைமானிகள் அமைக்கும் பணி: வருவாய்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu district ,Mamallapuram ,Revenue Department ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு கடன் சங்கத்தின் லாப தொகை அளிப்பு