×

பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் நரேந்திர மோடி

டெல்லி: பிரதமர் பதவியில் இருந்து நரேந்திர மோடி ராஜினாமா செய்தார். 17ஆவது மக்களவையை கலைக்க அமைச்சரவை பரிந்துரைத்த நிலையில் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் அளித்தார். புதிய அமைச்சரவை பதவியேற்கும் வகையில் பதவியில் இருந்து விலகினார். 294 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதில் பாஜக மட்டும் தனித்து 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளை எந்த கட்சியும் தனித்து பெறாததால் கூட்டணி ஆட்சி அமையும் சூழ்நிலை நிலவுகிறது. எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி நாடு முழுவதும் 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 99 இடங்களிலும், சமாஜ்வாதி 39 இடங்களிலும், திரிணாமுல் 29 இடங்களிலும், திமுக 22 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்தியா கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றாலும், அந்த கூட்டணி பெரும்பான்மை பலத்தை பெற வேண்டுமானால் இன்னும் 38 இடங்கள் தேவைப்படுகிறது. இருந்தும் பாஜக கூட்டணியில் பெரும்பான்மை பலத்திற்கு மேல் கூடுதலாக 20 இடங்கள் இருப்பதால் அந்த கூட்டணியே ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது.

இன்று காலை 11.30 மணியளவில் பாஜவின் அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்வது, பின்னர் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க கோரும் கடிதம் கொடுப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது பிரதமர் பதவியை மோடி ராஜினாமா செய்தார். மற்றும் 17வது மக்களவை கலைக்க அமைச்சரவை பரிந்துரை செய்தது, அதன்படி இன்று ராஜினாமா கடிதம் மற்றும் அமைச்சரவை கலைப்பு கடிதம் ஆகியவை குடியரசு தலைவரிடம் மோடி அளித்தார்.

பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்களின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றார். ஒன்றிய அமைச்சரவை கூட்டத்துக்கு பின் குடியரசுத் தலைவரை சந்தித்து மோடி ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

இதன்பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் கூட்டம் ஜூன் 7ஆம் தேதி நடைபெறுகிறது. டெல்லியில் ஜூன் 7ஆம் தேதி நடைபெறும் NDA எம்.பி.க்கள் கூட்டத்தில் மக்களவை குழுத்தலைவராக மோடி தேர்வு செய்யப்படுவார். தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும். மக்களவைக் குழுத் தலைவராக தேர்வான பின் ஜனாதிபதியை சந்தித்து ஆட்சியமைக்க மோடி உரிமை கோருவார்.

NDA எம்.பி.க்கள் கூட்டத்திற்கு பிறகு ஜூன் 8ம் தேதி மீண்டும் பிரதமாக மோடி பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய அரசு அமையும் வரை காபந்து பிரதமராக மோடி நீடிக்க முர்மு அறிவுறுத்தியுள்ளார். டெல்லியில் குடியரசு தலைவரை மோடியுடன் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோரும் சந்தித்தனர்.

The post பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் நரேந்திர மோடி appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,Delhi ,President of the Republic ,17th ,Lok ,Sabha ,Dinakaran ,
× RELATED தேசிய ஜனநாயகக்கூட்டணி மத்தியில்...