×

தமிழ்நாடு திராவிட பூமி என்பதை இந்தத் தேர்தல் நாட்டுக்கு உணர்த்தியுள்ளது: வைகோ அறிக்கை

சென்னை: தமிழ்நாடு திராவிட பூமி என்பதை இந்தத் தேர்தல் நாட்டுக்கு உணர்த்தியுள்ளது. இந்துத்துவ மதவெறி பாசிச சக்திகளுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என்பதை நாடாளுமன்றத் தேர்தல் மூலம் தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் தீர்ப்பளித்து இருக்கிறார்கள் என வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
நடைபெற்று முடிந்த 18 ஆவது மக்களவைத் தேர்தலில், இந்தியத் திருநாட்டு மக்கள் ஜனநாயகத்தை நிலைநிறுத்தியிருக்கிறார்கள். பத்தாண்டு காலம் பாசிச அரசு நடத்திய பா.ஜ.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டியிருக்கிறார்கள். 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று ஆணவமும் அதிகாரத் திமிரும் கொப்பளிக்க தேர்தல் பரப்புரைகளில் மதவெறி ஊட்டி எதேச்சதிகாரப் போக்குடன் நடந்துகொண்டவர்களுக்கு மக்கள் சக்தி என்றால் என்ன என்பதை இந்தத் தேர்தல் உணர்த்தி உள்ளது.

ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே மதம்; ஒரே கலாச்சாரம் என்று ஒற்றை இந்துத்துவ தேசியவாதத்தை நிலைநிறுத்த முயன்றவர்களுக்கு 18ஆவது மக்களவைத் தேர்தலில் சரியான அடி விழுந்திருக்கிறது. பா.ஜ.க.வின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக அமைந்த இந்தியா கூட்டணி இந்திய மக்களின் நம்பிக்கையைப் பெற்று மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது.

பத்தாண்டு கால நரேந்திர மோடி ஆட்சிக்கு எதிராகத்தான் மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்திருக்கிறார்கள். எனவே, மோடி அவர்கள் பிரதமர் பதவியில் நீடிக்கின்ற தார்மீக உரிமையை இழந்திருக்கிறார். ஜனநாயகம் பூத்துக் குலுங்கும் இந்தியாவில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியை அகற்றுவதற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தமிழ்நாட்டில் திராவிட மாடல் நல்லாட்சி நடத்துகின்ற தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த இந்தியா கூட்டணி, அவர் பிரகடனம் செய்தவாறு 40 தொகுதிகளிலும் வெற்றி முரசு கொட்டி தமிழ்நாடு திராவிட பூமி என்பதை இந்தத் தேர்தல் நாட்டுக்கு உணர்த்தியிருக்கிறது. இந்துத்துவ மதவெறி பாசிச சக்திகளுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என்பதை நாடாளுமன்றத் தேர்தல் மூலம் தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் தீர்ப்பளித்து இருக்கிறார்கள்.

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் வெற்றி பெற்றுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட்ட திருச்சிராப்பள்ளி தொகுதியில் மூன்று இலட்சத்து 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் வகையில் உழைத்த தி.மு.கழகத்தின் ஆற்றல் மிக்க அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னோடிகள், கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். என அவர் கூறியுள்ளார்.

The post தமிழ்நாடு திராவிட பூமி என்பதை இந்தத் தேர்தல் நாட்டுக்கு உணர்த்தியுள்ளது: வைகோ அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,VAICO ,Chennai ,Vaiko ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...