×

அண்ணாமலை பேச்சு… வீணாப்போச்சு… தலையில் அடித்துக்கொண்ட கட்சியினர்

கோவை: அண்ணாமலை பேச்சால் எல்லாம் வீணாப்போச்சு என்று கட்சியினர் தலையில் அடித்து கொண்டனர். ‘பொய்யிலே பிறந்து.. பொய்யிலே வளர்ந்தவர்..’ என்று எதிர்க்கட்சிகளால் அன்போடு அழைக்கப்படுபவர் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை. இவர் தினமும் ஒரு பொய்யை சொல்லி மாட்டி கொள்வார். அதுகுறித்து பத்திரிகையாளர் கேள்வி கேட்டால், ‘சப்ஜெக்ட்ட நீங்க நல்லா படிச்சிட்டு வாங்க…’ என்பார். சப்ஜெக்ட்டையே நீங்க புரியாமல் பேசுறீங்க என்று பதிலுக்கு கேள்வி கேட்டா அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நிருபர்களை பேசவிடாமல் செய்ததுபோல் ஒரு பிம்பத்தை உருவாக்குவார்.

குறிப்பாக தேர்தல் நேரங்களில் அவர் அடித்துவிட்ட கதை ஏராளம். மதுரையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை பேசும்போது, ‘‘ஐயா இன்னைக்கு நான் சொல்றேன். குறிச்சி வச்சுக்கோங்க. லோக்சபா தேர்தலுக்கு பின் தென்மண்டலத்தில் ஒரு திராவிட கட்சியும் இருக்காது. தேர்தல் முடிந்த பின் கேளுங்கள். நானும் எங்கேயும் செல்ல மாட்டேன். நீங்களும் எங்கேயும் செல்ல மாட்டீர்கள். நான் சும்மா சொல்லவில்லை. குறிச்சி வச்சுக்கோங்க. அரசியல் களத்தை நன்றாக ஆராய்ந்து சொல்கிறேன், கேட்டுக்கொள்ளுங்கள்’’ என்று சவால் விட்டிருந்தார். அத்துடன், ஆங்கில ஊடகம் ஒன்றில் பேசிய அண்ணாமலை, ‘‘நான் சொல்கிறேன், உறுதியாக சொல்கிறேன்.

பாஜ 25 சதவீத வாக்குகளை வெல்லும். நான் ஒரு மாநில தலைவர். இது தேசிய ஊடகம். லைவில் பேசிக்கொண்டு இருக்கின்றேன். சும்மா சொல்லவில்லை. நான் பேசுவது ரெக்கார்ட் ஆகும். நான் போகிற போக்கில் சொல்ல முடியாது. சொல்லக்கூடாது. நாங்கள் 25 சதவீதம் வாக்குகள் எடுப்போம். 500 சதவீத வளர்ச்சி. நான் சொல்வதை நீங்கள் தேர்தலுக்கு பிறகு உணர்வீர்கள்’’ என்று பேசி இருந்தார். இவ்வாறு அவர் விட்ட பல பிளடப்புகள் எல்லாம் வீணாப்போச்சு. குறிப்பாக அவர் அரசியல் நாகரீகம் தெரியாத அண்ணாமலையின் பேச்சுக்கள், இந்த தேர்தலில், மிக மோசமான பின்னடைவையே பரிசாக கொடுத்துள்ளன.

அந்த கட்சி, தமிழ்நாட்டில் ஒரு இடத்தில்கூட ஜெயிக்கவில்லை. பாஜ கூட்டணியில், ஏ.சி.சண்முகம், சவுமியா அன்புமணி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், பாரிவேந்தர், நயினார் நாகேந்திரன் என பெரிய தலைவர்கள் எல்லாம் மண்ணை கவ்வினர். அண்ணாமலை உள்பட ஒருவர்கூட வெற்றிபெறவில்லை. திராவிட கட்சியான திமுக எப்போதும்போல் கம்பீரமாக எழுந்து நின்றது. கோவை தொகுதி ஓட்டு எண்ணிக்கை துவங்கிய ஒரு மணி நேரத்தில் திமுக அதிக ஓட்டு முன்னிலையில் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அதிமுக ஏஜென்டுகள் தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கையை கவனிக்காமல் விரக்தியில் இருந்தனர்.

மதிய நேரம் உணவு சாப்பிட்டு பெரும்பாலான ஏஜென்டுகள், ‘‘அட போங்கப்பா… இனி என்னத்த பாக்குறது… வீட்டுக்கு போலாம்…’’ என கிளம்பிவிட்டார்கள். இதை பார்த்த பாஜ ஏஜென்டுகளும், ‘‘நாம மட்டும் எவ்வளவு நேரம் இருக்க… நாமும் கிளம்பி போலாம்…’’ எனக் கூறி பெரும்பாலானவர்கள் கிளம்பிவிட்டார்கள். திமுக ஏஜென்டுகள் மட்டும் ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை காத்திருந்தனர். அண்ணாமலை பேச்சால் எல்லாம் வீணாப்போச்சு என்று கட்சியினர் தலையில் அடித்துக்கொண்டனர்.

* கவுன்டிங் சென்டரை எட்டி பார்க்காத அண்ணாமலை
கோவை தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை பார்க்க பாஜ வேட்பாளர் அண்ணாமலை கோவை வந்தார். ஆனால் தொடக்கம் முதலே திமுக வேட்பாளர் முன்னிலையில் இருந்ததால் கவுன்டிங் சென்டர் பக்கமே அண்ணாமலை கால் வைக்கவில்லை. கடைசி வரை அவர் வராததால் பாஜ கட்சியினர் விரக்தி அடைந்தனர். ‘‘எழுதி வச்சுக்கோங்க… நாங்கதான் ஜெயிப்போம்…’’ என சவால்விட்ட தலைவர் வாக்கு எண்ணிக்கை மையத்தை எட்டிக்கூட பார்க்கவில்லையே’’ என பாஜவினர் புலம்பியபடி சென்றனர்.

The post அண்ணாமலை பேச்சு… வீணாப்போச்சு… தலையில் அடித்துக்கொண்ட கட்சியினர் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Coimbatore ,BJP ,president ,
× RELATED ‘பாத்ரூமிற்கு போகும்போதும்,...