×

பதவி என்பது மக்களுக்கு பணியாற்ற ஒரு பாதை தேர்தல் முடிவுகள் அதிமுகவை சோர்வடைய செய்யாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் முடிவுகள் நாம் எதிர்பார்த்தது போலவே அதிகார பலமும், பண பலமும், அறத்திற்கு அப்பாற்பட்ட சூழ்ச்சி பலமும் மிகுந்தவர்களுக்கு சாதகமாக வந்திருக்கின்றன. `கொள்கைக்காக வாழ்வோம்; எது வந்தாலும் ஏற்போம்’ என்று இந்த தேர்தலில் களம் இறங்கியது அதிமுக. `காட்டிலே ஓடும் முயலை குறி தவறாது கொன்ற அம்பைவிட, யானையின் மேல் குறி வைத்து தவறிப்போன வேலை தாங்குதல் வீரனுக்கு அழகாகும்’ என்ற திருவள்ளுவரின் பொது வாழ்வு இலக்கணத்திற்கு ஏற்ப, இந்த தேர்தலை கனநேர சிறிய வெற்றிக்காக அல்லாமல், ஏற்றுக்கொண்ட கொள்கையின் வெற்றிக்காக துணிவுடன் எதிர்கொண்டது அதிமுக.

இந்த தேர்தல் முடிவுகள் நம்மை சோர்வடைய செய்யாது. எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், இதுநாள்வரை அதிமுக மக்களுக்கு ஆற்றிய தொண்டுகளை மனதில் கொண்டு நம் கூட்டணிக்கு வாக்களித்த தமிழக வாக்காள பெருமக்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நன்றி. தேர்தலின்போது அல்லும், பகலும் அயராது உழைத்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களின் திருப்பாதம் பணிகிறேன். `உங்கள் உழைப்புக்கும், தியாகத்திற்கும் என்ன கைமாறு செய்யப்போகிறேன்’ என்று கண் கலங்குகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பதவி என்பது மக்களுக்கு பணியாற்ற ஒரு பாதை தேர்தல் முடிவுகள் அதிமுகவை சோர்வடைய செய்யாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Edappadi Palaniswami ,CHENNAI ,General Secretary ,Lok Sabha general election ,Dinakaran ,
× RELATED வலுவில்லாத கூட்டணியால் தோல்வி: ஆலோசனை...