×

நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்த தமாகா: கூட்டணியை உருவாக்கியவருக்கு செல்வாக்கு இல்லாத தொகுதிகளை ஒதுக்கியதால் வந்த வினை; போட்டியிட்ட 3 தொகுதியிலும் டெபாசிட் போனதால் விரக்தி

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியை தமாகா சந்தித்த நிலையில், பாஜ கூட்டணியை உருவாக்கியவருக்கு செல்வாக்கு இல்லாத தொகுதிகளை ஒதுக்கியதால்தான் இந்த நிலை ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே தமாகா போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் டெபாசிட்டை இழக்க நேரிட்டுள்ளதாக தமாகாவினர் விரக்தியடைந்துள்ளனர். ஜி.கே.மூப்பனார் மறைவுக்கு பிறகு தமாக காங்கிரஸ் கட்சியுடன் மீண்டும் ஐக்கியமானது. பின்னர் மீண்டும் 2014ம் ஆண்டு அவரது மகன் ஜி.கே.வாசனால் தமாகா உதயமாகியது. அப்போது அவருடன் பீட்டர் அல்போன்ஸ் உள்பட காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வந்தனர். ஆனால் 2016ம் ஆண்டு ஜி.கே.வாசன் எடுத்த முடிவால் பல நிர்வாகிகள் கூட்டணியை விட்டு வெளியேறினர்.

திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருந்ததால் அங்கும் தமாகா இணையவில்லை. கடைசியில் விஜயகாந்த் தலைமையிலான மக்கள் நலக் கூட்டணியில் தமாகா இணைந்தது. இதில் தமாகா 26 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அதன் பின்பு 2019ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தமாகா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தஞ்சாவூர் என்ற ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட்டது. ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட்டதால் தங்கள் சின்னமான சைக்கிளையும் இழந்தது.

தற்போது 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜ கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. முதல் கட்டமாக பாஜ கூட்டணியில் இணையுமாறு ஜி.கே.வாசன்தான், எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இது தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து பாஜ கூட்டணியில் இடம்பெற்ற கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய முக்கிய தலைவர்களில் ஒருவராக ஜி.கே.வாசன் இருந்தார். இதனால் பாஜ கூட்டணியில் அவருக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமாகா கேட்ட தொகுதிகள் எதையும் பாஜ தலைமை ஒதுக்க முன்வரவில்லை. இறுதியாக தூத்துக்குடி, ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் என தமாகாவுக்கு செல்வாக்கு இல்லாத 3 தொகுதிகளை பாஜ ஒதுக்கியது.

தூத்துக்குடியை அவர் கேட்கவே இல்லை. இந்த தொகுதியில் கலைஞரின் மகளான கனிமொழி எம்பி போட்டியிட்டார். அவரை எதிர்த்து நிற்கக்கூடிய அளவுக்கு தமாகாவில் சரியான வேட்பாளர் கூட யாரும் இல்லை. அதேபோன்று ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும் இதே நிலைமைதான். இதனால் வேறு வழியில்லாமல் இந்த தொகுதிகளிலும் ஏனோ தானோ என்று தமாகா வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். அதன் எதிரொலியாக தமாகா போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட தமாகா வேட்பாளர் விஜயசீலன் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகளை விட குறைந்த வாக்குகளை பெற்று 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அதேபோன்று, ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட விஜயகுமார் வெறும் 43000 வாக்குகளை மட்டுமே பெற்று டெபாசிட்டை இழந்துள்ளார். அடுத்ததாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட வேணுகோபால் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். தமாகா வேட்பாளர்கள் பிரச்சாரத்துக்கு பாஜ நிர்வாகிகளும் பெரிய அளவில் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால்தான் பாஜ இந்த தேர்தலில் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டு படுதோல்வியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தமாகாவினர் புலம்பி வருகின்றனர்.

The post நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்த தமாகா: கூட்டணியை உருவாக்கியவருக்கு செல்வாக்கு இல்லாத தொகுதிகளை ஒதுக்கியதால் வந்த வினை; போட்டியிட்ட 3 தொகுதியிலும் டெபாசிட் போனதால் விரக்தி appeared first on Dinakaran.

Tags : Tamaka ,CHENNAI ,BJP ,GK Moopanar ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடிக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து