×

விஐபிக்களை களம் இறக்கியும், 9 முறை மோடி பொதுக்கூட்டம், ரோடு ஷோ நடத்தியும் தமிழ்நாட்டில் ‘ஜீரோ’இடம்பிடித்த பாஜ

* இரண்டாம் இடம் பிடித்த இடங்கள் அனைத்திலும் லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி
* பாஜ தொண்டர்கள் கடும் அதிர்ச்சி

சென்னை: விஐபிக்களை களம் இறக்கியும் தமிழ்நாட்டில் ஜீரோ இடத்தை தான் பாஜவால் பிடிக்க முடிந்தது. அதே நேரத்தில் பாஜ 2ம் இடம் பிடித்த அனைத்து இடங்களும், திமுக லட்சக்கணக்கில் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் பாஜ தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு அதிமுக கூட்டணியில் இருந்து பாஜ வெளியேறியது. தொடர்ந்து நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனித்து களம் இறங்கியது. அதன் பிறகு ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் தனித்து களம் இறங்க பாஜ முடிவு செய்தது. அதற்குள் எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோர் நாங்கள் போட்டியிடுகிறோம் என்று கூறி தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்தனர். இதை தொடர்ந்து பாஜ சார்பில் வேட்பாளரை களம் இறக்கும் முடிவில் இருந்து அண்ணாமலை பின்வாங்கினார். அதே நேரத்தில் ஓபிஎஸ்சுக்கு ஆதரவு அளிக்க அண்ணாமலை முடிவு செய்து இருந்தார்.

இந்நிலையில் எடப்பாடிக்கு ஆதரவு அளியுங்கள் என்று டெல்லி மேலிடம் அண்ணாமலைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கடும் இழுபறிக்கு மத்தியில் கடைசியில் அதிமுகவுக்கு பாஜ ஆதரவு அளிப்பதாக அண்ணாமலை அறிவித்தார். அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தன்னை அவமானப்படுத்தி வருவதாக அண்ணாமலை கருத தொடங்கினார். இதையடுத்தே மக்களவை தேர்தலில் தனித்து போட்டி என்ற முடிவை அண்ணாமலை எடுத்தார். ஏனென்றால் மக்களவை தேர்தலில் திமுக பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்னிறுத்தி பிரசாரத்தில் ஈடுபடும்.

எடப்பாடியால் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முன்னிறுத்தி பிரசாரம் செய்ய முடியாது. அதே நேரத்தில் நாம் பிரதமர் மோடியை முன்னிறுத்தி பிரசாரத்தில் ஈடுபடலாம். இதனால் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்று கருதினார். அதனால் தனித்து போட்டி என்ற முடிவுக்கு வந்தார். மேலும் சமூக வலைத்தளங்களான வாட்ஸ் அப், டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட உலகை நம்பி தனித்து போட்டி என்ற நடவடிக்கையில் இறங்கினார். அதேசமயம், தனித்து போட்டி என்ற முடிவு இருக்கட்டும். மோடி, அமித்ஷா ஆகியோர் பாஜவில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களான ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், தேவநாதன் யாதவ், ஜான்பாண்டியன் போன்றவர்களை களம் இறக்க வேண்டும். பாமகவில் சவுமியா அன்புமணி, தங்கர்பச்சான் உள்ளிட்ட பிரபலங்களை போட்டியிட வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அதன்படி அவர்களும் களம் இறங்கினர். இதனால், சாதி தலைவர்கள், பின்புலம் உள்ளவர்கள், பணம் கொட்டி கிடப்பவர்கள் அனைவரும் களம் இறங்கினர். இதேபோல பாஜ தலைவர்களான அண்ணாமலை, எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் போன்றவர்களும் களம் இறக்கப்பட்டனர். இதுதவிர பாஜவில் அண்மையில் கட்சியை இணைத்த சரத்குமாரின் மனைவி ராதிகா சரத்குமாரும் களம் கண்டார். மக்களவை தேர்தலை சந்திக்கும் வகையில் தமிழகத்திற்காக 9 முறை பிரதமர் மோடி பிரசாரத்திற்காக வந்தார். கோவை, சென்னை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோடு ஷோக்களும் நடத்தினார். மேலும் அமித்ஷா முதல் அனைத்து ஒன்றிய அமைச்சர்களும் தமிழகத்தில் முகாமிட்டு பிரசாரம் செய்தனர்.

தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தொடங்கி அனைத்து மாநில பாஜ தலைவர்கள், பாஜ ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் வரை தமிழகத்தில் பிரசாரத்திற்காக வரிந்து கட்டிக்கொண்டு வந்தனர். இவ்வளவு பேர் படையெடுத்தும் தமிழகத்தில் பாஜவுக்கு எந்த பிரோஜனமும் ஏற்படவில்லை. ஒரு சீட் கூட வாங்க முடியாமல் போனது தான் மிச்சம். தலைவர்கள் மட்டுமே இரண்டாம் இடத்துக்கு வர முடிந்தது. அதாவது அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், வினோஜ் பி.செல்வம், ராமசீனிவாசன் என பலர் 2வது இடத்துக்கு வந்தனர்.

இரண்டாம் இடத்துக்கு வந்தும் எந்த பலனும் இல்லை. அந்த இடங்களில் எல்லாம் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. பாஜ இரண்டாம் இடத்துக்கு வந்த அனைத்து இடங்களிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். மற்ற இடங்களில் எல்லாம் பாஜ படுதோல்வியை சந்தித்தது. விஐபிக்கள் அனைவரும் களம் இறக்கப்பட்டு பாஜ ஜீரோ இடத்தை பிடித்தது தொண்டர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post விஐபிக்களை களம் இறக்கியும், 9 முறை மோடி பொதுக்கூட்டம், ரோடு ஷோ நடத்தியும் தமிழ்நாட்டில் ‘ஜீரோ’இடம்பிடித்த பாஜ appeared first on Dinakaran.

Tags : BJP ,Tamil Nadu ,Modi ,DMK ,Chennai ,
× RELATED குற்றம்சாட்டப்பட்டவர்கள் தமிழக...