×

எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை பாஜ கூட்டணி ஆட்சியை பிடித்தது: 290 இடங்களை கைப்பற்றியது; காங்கிரஸ் கூட்டணி 235 இடங்களில் வெற்றி

புதுடெல்லி: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில், எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290 தொகுதிகளில் வெற்றி பெற்று ஒன்றியத்தில் 3வது முறையாக ஆட்சி அமைக்க தகுதி பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு 235 இடங்கள் கிடைத்துள்ளன. வாக்கு எண்ணிக்கை: நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான 18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடந்தது. இதில், குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜ வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதுதவிர ஆந்திரா, ஒடிசா மாநில சட்டப்பேரவைகளுக்கும், 25 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் சேர்த்து நடத்தப்பட்டது. இவற்றில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது.

கணிப்புகள் தவிடுபொடி: வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும், அனைத்து கருத்துக்கணிப்புகளும் தவிடுபொடியாகின. அனைத்து மாநிலங்களிலும் ஆரம்பத்தில் இருந்தே பாஜ கூட்டணிக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் போட்டியாக இருந்தன. குறிப்பாக, அதிக தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் அட்டகாசமான வெற்றியை பதிவு செய்தன. அங்கு 80 தொகுதிகளில் பாஜ வெறும் 32 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற முடிந்தது. சமாஜ்வாடி 38, காங்கிரஸ் 6 என மொத்தம் 44 தொகுதிகளை கைப்பற்றி பாஜவுக்கு முதல் அதிர்ச்சியை தந்தன. கடந்த 2 மக்களவை தேர்தலிலும் பாஜவின் கோட்டையாக இருந்த உபி இம்முறை தகர்க்கப்பட்டது.

மே.வங்கத்தில் அதிர்ச்சி: அடுத்ததாக பாஜ பெரிதும் நம்பிக் கொண்டிருந்த மேற்கு வங்கத்திலும் அதிர்ச்சி முடிவே கிடைத்தது. அங்கு பலவிதத்திலும் பாஜவால் பல குடைச்சலை சந்தித்த மம்தா பானர்ஜி, தனது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மகத்தான வெற்றி தேடித் தந்துள்ளார். மொத்தமுள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 29 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. பாஜவால் வெறும் 12ல் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இது பாஜவின் அடுத்த பின்னடைவாக அமைந்தது.

மகாராஷ்டிராவில் வீழ்ச்சி: இதே போல, 48 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவிலும் பாஜ பெரிய அளவில் வெற்றியை எட்ட முடியவில்லை. இங்கு பாஜ 10 தொகுதியிலும், அதன் கூட்டணியான ஷிண்டே தலைலையிலான சிவசேனா 6 தொகுதியிலும், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 1 தொகுதியிலும் முன்னிலை பெற்றன. அதே சமயம், இந்தியா கூட்டணியில் இணைந்துள்ள உத்தவ் அணியின் சிவசேனா 10, காங்கிரஸ் 13, தேசியவாத காங்கிரஸ் 7 என மகாவிகாஸ் அகாடி கூட்டணி 30 இடங்களை கைப்பற்றியது.

இந்தியா கூட்டணி எழுச்சி: கடந்த 2019ல் 25 தொகுதிகளையும் கைப்பற்றி பாஜ மாபெரும் வெற்றி பெற்ற ராஜஸ்தானில் இம்முறை அக்கட்சியால் 14 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற முடிந்தது. காங்கிரஸ் 8, மார்க்சிஸ்ட் 1 தொகுதியில் முன்னிலையுடன் இந்தியா கூட்டணி புதிய எழுச்சி பெற்றது. அரியானாவிலும் கடந்த முறை 10 தொகுதிகளை வென்ற பாஜவால் இம்முறை 5 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. மீதமுள்ள 5 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மணிப்பூரில் கடும் வன்முறையால் அங்குள்ள 2 தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியது. கேரளாவில் 20 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 14 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்களும் கிடைத்தன. மார்க்சிஸ்ட் ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. திருச்சூரில் நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றதன் மூலம் பாஜ கேரளாவில் தனது கணக்கை தொடங்கியது.

40ம் திமுகவுக்கே: தமிழ்நாட்டை பொறுத்த வரையிலும் இந்தியா கூட்டணிக்கு 100 சதவீத வெற்றி கிடைத்தது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் கைப்பற்றிய திமுக கூட்டணி, புதுச்சேரியில் 1 தொகுதியையும் வென்று 40க்கு 40 வெற்றி பெற்றது. இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் முழு தொகுதியையும் ஒரே கூட்டணி கைப்பற்றியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கைகொடுத்த மாநிலங்கள்: இவற்றை தவிர பிற மாநிலங்கள் பாஜவுக்கு கைகொடுத்தன. டெல்லியில் 7 தொகுதிகளையும் 3வது முறையாக பாஜ வசப்படுத்தியது. குஜராத்தில் 26 தொகுதிகளில் பாஜ 25, காங்கிரஸ் 1 தொகுதியை வென்றன. பீகாரில் 40 தொகுதிகளில் பாஜ 12, நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் 12, ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி 5, மஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 1 தொகுதியில் வென்றன. காங்கிரஸ் 3, ஆர்ஜேடி 4, மார்க்சிஸ்ட் 2 இடங்களை கைப்பற்றின. ஆந்திராவில் சந்திரபாபுவின் தெலுங்கு தேசத்துடன் கூட்டணி வைத்ததால் பாஜவுக்கு நல்ல பலன் கிடைத்தது. 25 தொகுதிகளில் அங்கு தெலுங்கு தேசம் 16, பாஜ 3, ஜனசேனா 2 தொகுதிகளை கைப்பற்றி உள்ளன. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 4 இடங்களில் வென்றுள்ளது. கர்நாடகாவில் கடந்த முறை 25ல் 17 இடங்களை பிடித்த பாஜ இம்முறையும் 17 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் 9 இடங்களில் வென்றது.

மீண்டும் பாஜ ஆட்சி: இதன் மூலம் 543 தொகுதிகளில் பாஜ கூட்டணி 290 இடங்களை கைப்பற்றியது. எனவே, ஒன்றியத்தில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜவுக்கு 240 தொகுதியில் மட்டுமே வெற்றி கிடைக்கும் நிலை உள்ளது. இதனால், இந்த முறை கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு 3வது முறையாக ஒன்றியத்தில் பாஜ ஆட்சி அமைக்க உள்ளது. கடந்த 2 மக்களவை தேர்தலிலும் பாஜ தனிப்பெரும்பான்மையுடன் அசுர பலத்துடன் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்தது. ஆனால் இம்முறை எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்தியா கூட்டணிக்கு 235 இடங்கள் கிடைத்துள்ளன. சுயேச்சை உட்பட மற்ற கட்சிகள் 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இந்த வெற்றியை தொடர்ந்து தனது கட்சி தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, 3வது முறையாக பிரதமராக வரும் 9ம் தேதிக்குள் பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. சட்டப்பேரவை தேர்தலைப் பொறுத்த வரையிலும், ஆந்திராவில் தெலுங்கு தேசம் கூட்டணியும், ஒடிசாவில் முதல் முறையாக பாஜவும் ஆட்சியை கைப்பற்றி உள்ளன.

இந்தியா கூட்டணி
காங்கிரஸ் 99
சமாஜ்வாடி 38
திரிணாமுல் 29
திமுக 22
சிவசேனா (உத்தவ்) 10
என்சிபி 7
ஆர்ஜேடி 4
மார்க்சிஸ்ட் 4
ஜேஎம்எம் 3
ஐயுஎம்எல் 3
ஆம் ஆத்மி 3
விசிக 2
சிபிஐ 1
சிபிஐ (எம்எல்) (எல்) 2
என்சி 2
எம்டிஎம்கே 1
ஆர்எஸ்பி 1
கேசி 1
ஆர்எல்டிபி 1
பிஏடிவிபி 1

மக்களவை
தேர்தல் முடிவு
மொத்த இடங்கள் 543
பாஜ கூட்டணி 290
இந்தியா கூட்டணி 235
மற்றவை 18

பாஜ கூட்டணி
பாஜ 239
தெலுங்கு தேசம் 16
ஐக்கிய ஜனதா தளம் 12
சிவசேனா (ஷிண்டே) 6
லோக் ஜனசக்தி 5
ஆர்எல்டி 2
ஜேஎஸ்பி 2
ஜேடிஎஸ் 2
என்சிபி 1
எச்ஏஎம் (எஸ்) 1
ஏடிஏஎல் 1
ஏஜிபி 1
யுபிபிஎல் 1
ஏஜெஎஸ்யுபி 1

* பாஜவின் வாக்குவங்கி சரிந்தது; காங், சமாஜ்வாடி அமோகம்
2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளை விட அதிக வாக்குகளைப் பெற்ற பாஜவின் வாக்கு வங்கி இந்த முறை சரிவைச் சந்தித்துள்ளதாக தேர்தல் ஆணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019ம் ஆண்டை விட இந்த முறை அதிக இடங்களில் போட்டியிட்ட பா.ஜவால் தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. மொத்த வாக்குகளில் 36.91 சதவீதத்தைப் பெற்றது. இது 2019 தேர்தலை விட சுமார் 0.39 சதவீதப் புள்ளிகள் குறைவு. அதே சமயம் காங்கிரஸின் வாக்குகள் 2.22 சதவீத புள்ளிகள் அதிகரித்து 21.68 சதவீதத்தை எட்டியது. உபியில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி தனது வாக்கு வங்கியை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கி 4.66 சதவீதமாக அதிகரித்தது. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 2019 தேர்தலில் 4.06 சதவீதமாக இருந்த வாக்கு சதவீதத்தை இந்த முறை 4.25 சதவீதமாக அதிகரித்துள்ளது.

The post எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை பாஜ கூட்டணி ஆட்சியை பிடித்தது: 290 இடங்களை கைப்பற்றியது; காங்கிரஸ் கூட்டணி 235 இடங்களில் வெற்றி appeared first on Dinakaran.

Tags : BJP ,Congress alliance ,New Delhi ,Lok Sabha elections ,National Democratic Alliance ,BJP alliance ,Dinakaran ,
× RELATED நீட் போலி விடைத்தாள் மாணவி வீடியோ...