×

விஜயதரணி ராஜினாமாவால் இடைத்தேர்தல் நடந்த விளவங்கோட்டில் காங்கிரஸ் வெற்றி

* பாஜவைவிட 40,174 வாக்கு அதிகம், அதிமுக, நாதக டெபாசிட் காலி

நாகர்கோவில்: விஜயதரணி ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் நடந்த விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தாரகை கத்பர்ட் 40,174 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு 2021ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜயதரணி திடீரென்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ கட்சியில் சேர்ந்தார்.

இதனால் கன்னியாகுமரி மக்களவை தொகுதி பொதுத்தேர்தலுடன், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தது. விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் இதுவரை நடந்த 17 தேர்தல்களில் 12 முறை காங்கிரஸ் கட்சியே வென்று உள்ளது. 2011, 2016, 2021ல் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் விஜயதரணி காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்றிருந்தார். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் தாரகை கத்பர்ட் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

பாஜ சார்பில் வி.எஸ்.நந்தினி, அதிமுக வேட்பாளராக ராணி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெமினி உட்பட 10 பேர் போட்டியிட்டனர்.
74,829 ஆண் வாக்காளர்கள், 80,151 பெண் வாக்காளர்கள் என்று 1,54,980 பேர் வாக்களித்தனர். இது 65.19 சதவீதம். பதிவான வாக்குகள் நாகர்கோவில் கோணம் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது.

மொத்தம் 22 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட்டன. முதல் சுற்று முதலே ஒவ்வொரு சுற்றிலும் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்து வந்தார். 22வது சுற்று நிறைவில் தாரகை கத்பர்ட் 91,054 வாக்குகள் பெற்றிருந்தார். பாஜ வேட்பாளர் நந்தினி 50,880 வாக்குகள் பெற்றார்.நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெமினி 8,150 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ராணி 5,267 வாக்குகளும் பெற்று டெபாசிட் இழந்தனர். அந்த வகையில் தாரகை கத்பர்ட் 40,174 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

The post விஜயதரணி ராஜினாமாவால் இடைத்தேர்தல் நடந்த விளவங்கோட்டில் காங்கிரஸ் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Congress ,Vilavankot ,Vijayatharani ,BJP ,AIADMK ,Nathaka ,Galli Nagercoil ,DMK ,Tarakai Cuthbert ,
× RELATED தாரகை கத்பர்ட் வெற்றி உறுதியானதால்...