×

சரும பளபளப்புக்கு சில எளிய வழிகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

உடல் ஆரோக்கியம் எனும்போது சருமத்தின் ஆரோக்கியமும் முக்கியமான ஒன்று. சத்தான உணவை சாப்பிடுவதன் மூலமாகதான் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். பெண்கள் ஒவ்வொருவருமே அழகான பளபளக்கும் சருமம் வேண்டுமென்றே ஆசைப்படுவர். இதற்காக, அழகு நிலையங்கள் சென்று சிகிச்சைகள் செய்வதையும் வழக்கமாக வைத்திருப்பர். ஆனால், இதனால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் பற்றிய புரிதல் பலருக்கும் இருப்பதில்லை.

அழகு நிலையங்களில் பயன்படுத்தப்படும் அழகு சாதனப் பொருள்களில் கலந்திருக்கும் ரசாயனப் பொருட்கள் சருமத்துக்கு தீங்கு விளைவிக்கின்றன. எனவே, இயற்கையான பொருள்களைக் கொண்டு சருமத்தை பாதுகாக்கும் சில எளிய வழிகளை தெரிந்து கொள்வோம்.

வாழைப்பழ கிளிசரின் பேக்

வாழைப்பழம், கிளிசரின், சந்தனம் இவற்றை பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்களையும், எப்படி பயன்படுத்துவது என்பதையும் பார்ப்போம். வாழைப்பழத்தில் வைட்டமின் சி உள்ளது. இது தோல் சுருக்க பிரச்சனையை சரிசெய்ய பயன்படுகிறது. இதனில் இருக்கும் ஆக்சிஜனேற்ற பண்பு, சருமத்தின் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்கிறது. மேலும், சருமத்தை இறுக வைத்திருக்க பயன்படுவதோடு, சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது. வாழைப்பழம் முகத்தின் தோல் நெகிழ்திறனுக்கு உதவி சுருக்கத்தை சரி செய்கிறது. அதுபோன்று கிளிசரினும் சருமத்தை பாதுகாக்கிறது. சரும நிறத்துக்கும் கிளிசரின் உதவுகிறது.

சந்தனம், சரும வீக்கத்துக்கு நிவாரணம் அளிக்கிறது. மேலும், முகத்தில் ஏற்படும் எரிச்சலுக்கு நன்மருந்தாக அமைகிறது. சந்தனத்தில் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு உள்ளது. இது சருமத் தொற்று வராமல் பாதுகாக்க பயன்படுகிறது. மேலும், சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும் உதவுகிறது.

வாழைப்பழ பேஸ்பேக் தயாரிக்கும்முறை:

ஒரு வாழைப்பழத்தை எடுத்து நன்கு மசித்துக் கொண்டு அதனுடன், 2 தேக்கரண்டி சுத்தமான சந்தனப்பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி கிளிசரின் சேர்த்து குழைத்து முகத்தில் தடவவும். 20 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருக்கவும். பிறகு சுத்தமான நீரைக்கொண்டு முகத்தை நன்றாக அலசவும். இதனை வாரத்திற்கு 2 முதல் 3 முறை செய்யலாம். இதனால் உங்கள் முகம் பளபளவென இருக்கும்.

சரும பாதுகாப்புக்கு உதவும் நெய்

நெய்யை பயன்படுத்தி முகத்தை எப்படி பளபளப்பாக வைத்துக் கொள்ள முடியும் என்று பார்ப்போம். சருமத்தை மென்மையாக்கி முகத்தில் உள்ள கருவளையம், பருக்கள், தழும்புகள் போன்றவற்றை நீக்கும் ஊட்டச்சத்துக்கள் நெய்யில் நிறைந்துள்ளது. ஒருசிலருக்கு முகப்பரு வந்தால் அது எளிதில் போகாது. அந்த முகப்பரு நாளடைவில் முகத்திலேயே தங்கிவிடுகிறது. நாளடைவில் அது தழும்புகளாகவும் மாறிவிடும். இதற்கு, முகத்தில் நெய்யை தடவி வரலாம். நெய்யில் நிறைந்திருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மற்றும் வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் முகத்தில் உள்ள தழும்புகளை நீக்கி சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.

மேலும், நெய்யில் ஆன்டிஆக்சிடென்ட்கள் அதிக அளவு நிறைந்துள்ளது. இது சரும ஆரோக்கியத்தை பாதுகாத்து பளபளப்பான சருமத்தை அளிக்க உதவுகிறது. அதேபோல நம் உடலில் உள்ள தோல் சுருக்கங்களை நீக்குவதற்கும் நெய்யில் உள்ள வைட்டமின்கள் பெரிதும் உதவுகிறது. இதனால் வயதானாலும் இளமையான தோற்றத்திலேயே இருக்க நெய் உதவும்.

உளுந்து “பேஸ் பேக்

உளுந்தம்பருப்பைக் கொண்டு பேஸ் மாஸ்க் தயாரித்து முகத்தில் தடவலாம். உளுந்தில் ஆன்டி-பாக்டீரியல், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே, இது முகத்திற்கு பொலிவைக் கொண்டுவர உதவுகிறது. உளுந்து மாவு சருமத்தின் நிறத்தை அதிகரிக்கவும் பயன்படுகிறது. இது அதிக பயனுள்ள குணங்களைக் கொண்டுள்ளது. இதன் பயன்பாடு சருமத்திற்கு இயற்கையான பொலிவைத் தருகிறது. இது பருக்கள், முகப்பரு மற்றும் தழும்புகளை அகற்றவும் உதவுகிறது. உளுந்து மாவை சருமத்திற்கு பல வழிகளில் பயன்படுத்தலாம்.

உளுந்து மாவு ஃபேஸ் பேக் செய்யும் முறை:

ஒரு கிண்ணத்தில் மூன்று தேக்கரண்டி உளுத்தம்பருப்பு மாவு எடுத்துக் கொண்டு, அதனுடன் ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் மற்றும் ஒரு தேக்கரண்டி காய்ச்சாத பால் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாக கலந்து முகத்தில் தடவவும். இந்த கலவையை முகத்தில் தடவும் முன், முகத்தை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர், “பேஸ் மாஸ்க்கை முகத்தில் தடவி, 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு முகத்தை சுத்தம் செய்யவும். இந்த ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்திய பிறகு, முகம் பளபளப்பாக இருப்பதை நன்கு உணர முடியும்.

தொகுப்பு: ரிஷி

The post சரும பளபளப்புக்கு சில எளிய வழிகள்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED முகப்பருக்கள் உணர்த்தும் பிரச்னைகள்!