×

ஆந்திராவில் ஆட்சி அமைகிறதா சந்திரபாபு நாயுடுவின் கட்சி?

ஆந்திர: ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிகமான இடங்களில் தெலுங்கு தேசம் கட்சி (116) முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் YSRCP கட்சி 22 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிப்பு. (ஜனசேனா 15 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. காலை 11மணி நிலவரப்படி ஆந்திராவின் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா 5640 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு. பித்தாபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் 7997 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. 175 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ஆந்திராவில் ஆட்சியை பிடிக்க 88-இடங்களில் வெற்றி பெறுவது அவசியம். நமது நாட்டில் 18-வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி முதல் கடந்த 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு தொடர் ஓட்டம்போல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துவிட்டது. குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில அரசுகளின் பதவிக்காலம் 2-ம் தேதி முடிவடைந்ததால், அந்த 2 மாநிலங்களுக்கும் 2-ம் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்பட்டன. ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தெலுங்கு தேசம் கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி முன்னிலை வகிக்கிறது.

ஆந்திராவில் உள்ள மொத்த சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை 175 ஆகும். இதில் 88 இடங்களை வெல்லும் கட்சி ஆட்சியை பிடிக்கும். இந்த தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி கட்சி அனைத்து இடங்களிலும் தனித்துப் போட்டியிட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி 144 இடங்களிலும், ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பாஜக 10 இடங்களிலும் போட்டியிட்டது.

 

The post ஆந்திராவில் ஆட்சி அமைகிறதா சந்திரபாபு நாயுடுவின் கட்சி? appeared first on Dinakaran.

Tags : Chandrababu Naidu ,Andhra Pradesh ,AP ,Telugu Desam Party ,YSRCP party ,Janasena ,BJP ,
× RELATED ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு...