×

மின்னல் தாக்கி 4 கடைகளில் தீ விபத்து பல லட்சம் பொருட்கள் சேதம் திருவண்ணாமலையில் பரபரப்பு

திருவண்ணாமலை, ஜூன் 4: திருவண்ணாமலையில் கனமழையின்போது தென்னை மரங்களின் மீது மின்னல் தாக்கியதில் 4 கடைகள் தீப்பிடித்து எரிந்தன. இதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கருகியது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் நிறைவடைந்த பிறகும் வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தொடர்ந்து, கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெளியிலின் தாக்கம் ஓரளவு குறைந்துள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் பகல் வெயில் சுட்டெரித்த நிலையில் இரவு 11 மணியளவில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், காந்தி சிலை அருகே 2 தென்னை மரங்கள் மீது மின்னல் தாக்கியது. இதில், மரம் தீப்பிடித்து எரிந்தது. அப்போது, அதில் இருந்து விழுந்த தீப்பொறி அங்குள்ள கடைகள் மீது விழுந்து தீப்பிடித்தது. இதில், சைக்கிள் விற்பனை கடை, பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடை உள்பட 4 கடைகள் தீப்பிடித்து எரிந்தது.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் அருகில் இருந்த மொபைல் ஷோரூம் கடை உள்பட பல்வேறு கடைகள் தப்பியது. இந்த விபத்தில் 4 கடைகளில் இருந்த பல லட்சம் மதிப்பிலான சைக்கிள்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்நிலையில், நேற்று காலை தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை திமுக மருத்துவர் அணி மாநில துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், எம்பி அண்ணாதுரை ஆகியோர் நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். அப்போது, தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.தரன், நகராட்சி தலைவர் நிர்மலா வேல்மாறன், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன் ஆகியோர் உடனிருந்தனர்.

The post மின்னல் தாக்கி 4 கடைகளில் தீ விபத்து பல லட்சம் பொருட்கள் சேதம் திருவண்ணாமலையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Agni Nakshatra ,Tamil Nadu ,
× RELATED தஞ்சாவூர் ரயில்வே கீழ்பாலத்தில்...