×

மப்பேடு அருகே ரூ.1200 கோடி மதிப்பீட்டில் சரக்கு வாகன போக்குவரத்து பூங்கா பணியை நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே மப்பேடு பகுதியில் ரூ.1200 கோடி திட்ட மதிப்பில் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்கும் பணிகளை கண்காணிக்கவும் மற்றும் விரைவுபடுத்தவும் மத்திய அரசு துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் செயலாளர் டி.கே.ராமச்சந்திரன், சென்னை துறைமுக ஆணையத்தின் தலைவர் சுனில் பாலிவால் மற்றும் அரசு செயலாளர் தொழில்துறை அருண் ராய் ஆகியோர் மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதன் மூலம் சர்வதேச தரம் வாய்ந்த பல்வேறு வாய்ப்பு வசதிகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வசதி ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் பாரத் மாலா பரியோஜனா திட்டம் மூலம் முதன்மையான திட்டமாக திருவள்ளூர் அருகே மப்பேடு அருகே பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா அமைய உள்ளது. இதேபோல் நாடு முழுவதும் 35 இடங்களில் அமைக்கப்பட உள்ளன. இதனால் சரக்கு போக்குவரத்து செயல்திறன் மேம்பாட்டுக்கான செலவுகள் குறையும்.

மேலும், நவீன சரக்கு அமைப்பு மேலாண்மை மூலம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் சரக்கு போக்குவரத்திற்கு தடையின்றி வழிவகை செய்கிறது. அதன்படி திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், மப்பேடு ஊராட்சியில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம், நேஷனல் ஹைவே லாஜிஸ்டிக்ஸ் மேலாண்மை நிறுவனம், சென்னை துறைமுகம் ஆகியவைகள் இணைந்து பொது மற்றும் தனியார் பங்களிப்போடு 141 ஏக்கர் பரப்பளவில் ரூ.1200 கோடி திட்ட மதிப்பில் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்க கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

காணொலி காட்சி மூலம் நடந்த நிகழ்ச்சியில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வர் ஸ்டாலின் மற்றும் புதுதில்லியில் இருந்து மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், சாலை போக்குவரத்து இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.

தமிழக தொழில்துறை வரலாற்றில் இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகும். தமிழக அரசுடன் இணைந்து பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காவை மத்திய அரசு அமைப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அப்போது முதல்வர் குறிப்பிட்டார். இந்திய அளவில் 35 இடங்களில் கல்முனை சரக்கு பூங்கா அமையவுள்ள நிலையில், தமிழகத்தில் அமையும் முதலாவது பல்முனை சரக்கு பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு இப்பூங்கா அமையவுள்ள பகுதியில் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் நிரம்பிய ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், ஒரகடம் ஆகிய இடங்களுக்கு அருகே அமைகிறது. மேலும், இப்பூங்கா சென்னை எல்லை சுற்று வட்டச்சாலைக்கருகே அமைந்துள்ளது. சென்னை துறைமுகம், விமான நிலையம், காமராஜர் துறைமுகம், ஆகியவைகளையும் இணைக்கவும் வழிவகை செய்கிறது. அதனால், சர்வதேச அளவிலான அனைத்து வசதிகளுடன் இப்பூங்கா அமைய உள்ளது என பல்முனை சரக்கு பூங்கா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த பூங்காவை சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, சென்னை எல்லை சுற்றுச்சாலையுடன் இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் பேரில் முதல் கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் மண்ணூர் முதல் சரக்கு பெட்டக பூங்கா அமையவுள்ள 3.4 கி.மீ. தூரம் உள்ள சாலை ரூ.58 கோடியில் விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சாலையோர மழைநீர் கால்வாய்கள், சாலை விரிவாக்கம், சாலை தடுப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதில், கொட்டையூர் கிராமத்திற்கு மாற்றுப்பாதை பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளன. இப்பூங்கா பணிகள் 3 கட்டங்களாக நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இந்த பூங்காவிலிருந்து 10 கி.மீ. தூரம் உள்ள கடம்பத்தூர் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் நிலங்களை கையகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்கா மூலம் சரக்கு போக்குவரத்து செலவு குறையும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

டிட்கோ, சென்னை துறைமுக பொறுப்புக்கழகம், ரயில் நிகாஸ் நிகாம் நிறுவனம், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், இணைந்து செயல்படுத்தும் புதுமையான முயற்சியின் காரணமாக தமிழக இளைஞர்கள் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதற்கு முன்னதாக கடம்பத்தூர் ரயில் நிலையத்திலிருந்து ரயில் பாதை அமைத்தவுடன் இப்பூங்கா செயல்பாட்டுக்கு வரும் என அவர் தெரிவித்தார்.

The post மப்பேடு அருகே ரூ.1200 கோடி மதிப்பீட்டில் சரக்கு வாகன போக்குவரத்து பூங்கா பணியை நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள் appeared first on Dinakaran.

Tags : Mapedu ,Thiruvallur ,Central government ,
× RELATED திருவள்ளூர் கலெக்டர் தலைமையில் சட்டம், ஒழுங்கு ஆலோசனை கூட்டம்