×

வாலாஜாபாத் அருகே மூதாட்டி கொலையில் இருவர் கைது

வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த கட்டவாக்கம் கிராமம், செல்வ விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் சுகுணா (65). தன்னுடைய வீட்டின் முதல் மாடியில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் சுகுணா படுக்க அறையில் உடலின் பல்வேறு பகுதிகளில் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இது குறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

சம்பவம் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் உத்தரவின்பேரில், காஞ்சிபுரம் காவல் துணைக்கண்காணிப்பாளர் முரளி தலைமையில் வாலாஜாபாத் காவல் நிலைய ஆய்வாளர் பிரபாகர், சாலவாக்கம் காவல் உதவி ஆய்வாளர் செந்தில், பாலுசெட்டிசத்திரம் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் ராஜா, பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெய்ஸ்ரீ உட்பட 2 தனிப்படைகள் அமைத்து, கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை பல்வேறு கோணங்களில் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், கட்டவாக்கம் ஏரி மதகு பகுதியில் 2 மர்ம நபர்கள் சுற்றித்திரிவதாக நேற்று தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், 2 மர்ம நபர்களை கைது செய்து நடத்திய விசாரணையில் வேலூர் மாவட்டம், கோவிந்த ரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த மோகன் (26), கும்பகோணம் தாராசுரம் பகுதியை சேர்ந்த பெரியண்ணா பிரபு (எ) பிரபு (24) என்பதும், மோகன் மீது சத்துவாச்சாரி, வேலூர், பாகாயம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

மேலும், மோகன் மற்றும் பிரபு இருவரும் கூட்டாளிகளாக சுகுணா வீட்டின் கீழ் தளத்தில் குடியிருந்து, அதே பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் தொழிற்சாலை பணி பிடிக்காத நிலையில் திருச்சியில் பணிக்காக செல்ல தயாரான நிலையில், சுகுணா வீட்டை நாள்தோறும் நோட்டமிட்டு வந்த இருவரும் திடீரென சுகுணா வீட்டின் உள்ளே புகுந்து படுக்கை அறையில் மறைந்து கொண்டனர்.

இதனை, சற்றும் எதிர்பாராத சுகுணா வழக்கம்போல அன்றாட பணியை முடித்து படுக்க அறைக்கு சென்ற பொழுது திடீரென மறைந்து இருந்த மோகன் மற்றும் பிரபு ஆகிய இருவரும், சுகுணாவை படுக்கையறையில் வைத்து தாக்கியுள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே சுகுணா உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவர் அணிந்திருந்த மூக்குத்தி, செயின், கம்மல் உள்ளிட்ட 10 சவரன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்து, வாலாஜாபாத் வந்து அங்கிருந்து திருச்சி செல்ல இருந்ததும் தெரியவந்தது. அவர்களிடமிருந்த 10 சவரன் தங்க நகைகளை மீட்டனர். இதனையடுத்து போலீசார், கைதான 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

The post வாலாஜாபாத் அருகே மூதாட்டி கொலையில் இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Walajabad ,WALLAZABAD ,Sukuna ,Selva Vinayakar Koil Street ,Next Stage Village, Wallajabad ,
× RELATED சகோதரியுடன் சொத்து தகராறு; தண்ணீர்...