×

மறுமணத்திற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்ய வரும் பெண்களை குறிவைத்து நூதன திருட்டில் ஈடுபட்டவர் கைது

குன்றத்தூர்: மாங்காட்டில் மறுமணம் செய்ய திருமண தகவல் மையத்தில் பதிவு செய்யும் பெண்களை குறி வைத்து நூதன திருட்டில் ஈடுபட்டவரை, போலீசார் கைது செய்தனர். கிழக்கு தாம்பரம், ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் காயத்ரி (45). இவரது, கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில், மறுமணம் செய்வதற்காக தனியார் திருமண தகவல் மையத்தில் தனது சுயவிபரம் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்து காத்திருந்தார்.

இதனை பார்த்து கோயம்புத்தூரை சேர்ந்த யுவராஜ் (50) என்பவர், காயத்ரியை தொடர்புகொண்டு தான் உங்களை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக ஆசை வார்த்தை கூறினார். அதனை உண்மை என்று நம்பிய காயத்ரி தனது செல்போன் நம்பரை யுவராஜூக்கு கொடுத்தார். தொடர்ந்து இருவரும் தங்களது எதிர்காலம் குறித்து செல்போனில் நீண்ட நேரம் பேசி வந்தனர். ஒரு கட்டத்தில், திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு காயத்ரிக்கு கண் திருஷ்டி பரிகாரம் செய்ய வேண்டும் எனவும், இதனால் ஒரு கோயிலுக்கு வரவேண்டும் எனவும், வரும்போது 5 சவரன் தங்க நகையை எடுத்து வருமாறு யுவராஜ் கூறினார்.

இதனால், காயத்ரி 5 சவரன் தங்க நகையை எடுத்துக்கொண்டு தாம்பரத்திற்கு வந்தார். அங்கிருந்து காயத்ரியும், யுவராஜூம் மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்த கடையொன்றில் இருந்து ஒரு பாத்திரத்தை வாங்கிய யுவராஜ், அதில் காயத்ரி கொண்டு வந்திருந்த 5 சவரன் தங்க நகையை போடும் படி கூறினார். அதன்பேரில் காயத்ரி தான் கொண்டு வந்திருந்த 5 சவரன் தங்க நகையை அந்த பாத்திரத்தில் போட்டார்.

பின்னர், அந்த பாத்திரத்தை மூடிய யுவராஜ், இந்த பாத்திரத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்துவிட்டு 3 நாட்கள் கழித்து திறந்து பார்க்க வேண்டும். அப்போது, தான் கண் திருஷ்டி முழுமையாக விலகும் என்று கூறியுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய காயத்ரி, அந்த பாத்திரத்தை எடுத்துச்சென்று தனது வீட்டின் பூஜை அறையில் வைத்துவிட்டு, மறுநாள் யுவராஜுக்கு செல்போனில் தொடர்பு கொண்டார்.
அப்போது, அவரது செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது.

இதனால் சந்தேகமடைந்த காயத்ரி அந்த பாத்திரத்தை திறந்து பார்த்தபோது, அதில் தங்க நகைகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் வளையல்கள் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போதுதான் காயத்ரிக்கு, யுவராஜ் தன்னை நூதனமாக ஏமாற்றியது தெரியவந்தது.  இதுகுறித்து, அவர் மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போரூர் காவல் உதவி ஆணையர் ராஜூவ் பிரின்ஸ் ஆரோன், மாங்காடு குற்றப்பிரிவு ஆய்வாளர் அருணாச்சல ராஜா ஆகியோர் தலைமையில் நூதன முறையில் மோசடி செய்த யுவராஜை தேடி வந்தனர்.

மேலும், தலைமறைவாக இருந்த யுவராஜ், மேலும் ஒரு பெண்ணையும் இதேபோன்று ஏமாற்றுவதற்காக சென்னை வந்தபோது, போலீசார் மறைந்திருந்து அவரை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 4 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர், கன்னியாகுமரியிலும் இதே பாணியில் ஒரு பெண்ணை மோசடி செய்த வழக்கில் சிறை சென்றுவிட்டு, சமீபத்தில் வெளியே வந்ததும் மீண்டும் அதேபோன்று காயத்ரியை ஏமாற்றியதும் தெரியவந்தது. கணவரை இழந்து மறுமணம் செய்ய பதிவு செய்யும் பெண்களை குறி வைத்து இதுபோன்று நூதன முறையில் அவர்களிடம் நகைகளை பறித்துச்செல்லும் நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் மாங்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மறுமணத்திற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்ய வரும் பெண்களை குறிவைத்து நூதன திருட்டில் ஈடுபட்டவர் கைது appeared first on Dinakaran.

Tags : information ,Kunradthur ,Nuthana ,Marriage Information Center ,Mangat. Gayatri ,Anandapuram, East Tambaram ,
× RELATED திடீரென டயர் வெடித்ததால் வேன் கவிழ்ந்து ஒருவர் பலி