×

மாமல்லபுரம் இசிஆர் நுழைவுவாயில் சாலையில் ஆபத்தான நிலையில் ராட்சத விளம்பர பேனர்: அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை

மாமல்லபுரம்: சென்னை – புதுச்சேரி செல்லும் இசிஆர் சாலை வழியாக தினமும் அதிகப்படியான வாகனங்கள் சென்று வருகிறது. சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் ஓட்டல், ரிசார்ட் நிர்வாகங்கள், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தனியார் பிளாட் விற்பனை நிர்வாகங்கள் சார்பில் ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அது, காற்றில் கிழிந்து வாகன ஓட்டிகள் மீது விழுவதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

சில பேனர்கள் எந்த ஒரு பிடிமானமும் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மீது விழுந்து உயிர் பலி ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் கடந்து செல்கின்றனர். கடந்த 2019ம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பேனர் விழுந்து ஒரு பெண் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, பொது இடங்களில் விளம்பர பேனர்கள் வைப்பதற்கு தமிழகம் முழுவதும் ஐகோர்ட் தடை விதித்துள்ளது. இதனால், பேனர்கள் வைப்பது ஓரளவு தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில், ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு மாமல்லபுரம் இசிஆர் நுழைவு வாயிலுக்கு அருகே 60 அடி உயரம் கொண்ட ஒரு ராட்சத பேனர் வைக்கப்பட்டது. அது, நாளடைவில் காற்றில் கிழிந்து காணாமல் போய்விட்டது. இருப்பினும், அதன் இரும்பு தூண் மற்றும் இரும்பு கம்பிகள் துருப்பிடித்து முழுமையாக வலுவிழந்து ஆபத்தை ஏற்படுத்தும் அபாய நிலையில் அந்தரத்தில் தொங்குகிறது. சாதாரண, காற்று அடித்தால் வாகன ஓட்டிகள் மீது சாய்ந்து விழும் நிலையில் உள்ளது.

மேலும், தனியார் மூலமாகவே ராட்சத பேனர்கள் வைத்து விட்டார்கள் என சில அரசியல் கட்சியினர் தங்களுக்கு சாதகமான சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு அரசியல் சம்பந்தமான பேனர்கள் வைப்பது, சிலர் சுய விளம்பரத்திற்காக பொதுமக்கள் நடமாடக் கூடிய இடங்களிலும், போக்குவரத்து அதிகம் உள்ள இடங்களிலும் பொதுமக்களுக்கு இடையூறாக மாமல்லபுரம் டவுன் முழுவதும் பல பேனர்களை வைத்திருக்கின்றனர்.

இதில், குறிப்பாக மாமல்லபுரம் பேரூராட்சிக்குட்பட்ட தேவனேரி இசிஆர் சாலையொட்டி 150 அடி நீளம் கொண்ட ராட்சத பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியான, விளம்பர பேனர்களை அகற்ற வேண்டிய அதிகாரிகள் கையூட்டு பெற்றுக்கொண்டு கண்டும் காணாதது போல் மெத்தமனமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. எனவே, மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் ராட்சத பேனர் இரும்பு தூணை போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மாமல்லபுரம் இசிஆர் நுழைவுவாயில் சாலையில் ஆபத்தான நிலையில் ராட்சத விளம்பர பேனர்: அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,ECR ,Chennai ,Puducherry ,Mamallapuram ECR ,
× RELATED மாமல்லபுரம் இசிஆர் சாலையில்...