×

101வது பிறந்தநாள் கொண்டாட்டம் கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகள்

சென்னை: முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மறைந்த கலைஞரின் 101வது பிறந்தநாள் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கலைஞரின் பிறந்தநாளை ஒட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கலைஞரின் 101வது பிறந்தநாளை ஒட்டி, நேற்று காலை 9 மணியளவில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அப்போது துணை பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, கனிமொழி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன் மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள் தயாநிதி மாறன், ெஜகத்ரட்சகன், எம்எல்ஏக்கள் மாதவரம் சுதர்சனம், மயிலை த.வேலு, தாயகம் கவி, ஆர்.டி.சேகர், பரந்தாமன், அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, மாவட்ட செயலாளர் சிற்றரசு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம், இணை செயலாளர் பி.டி.பாண்டிச்செல்வம், திமுக அமைப்பு துணை செயலாளர் அன்பகம் கலை, திமுக தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, பகுதி செயலாளர் மதன் மோகன் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் தலைமையில் ஏராளமானோர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் ரெ.தங்கம் தலைமையில் மாநில பொருளாளர் எஸ்.நசீம், வீர.சரவணன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அண்ணா நினைவிடத்திலும், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் திருவுருச்சிலைக்கும் மலர் மாலைகள் வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். முன்னதாக கலைஞரின் கோபாலபுரம் மற்றும் சிஐடி காலனி இல்லத்திற்கு நேரில் சென்று கலைஞரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் சென்னை அண்ணா அறிவாலயம் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞரின் திருவுருவச்சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய முதல்வர், கோடம்பாக்கம் முரசொலி வளாகத்தில் உள்ள கலைஞர் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து வணங்கினார்.

அங்கு தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலர் என்ற சிறப்பு மலரினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, முரசொலி செல்வம் பெற்றுக் கொண்டார். கலைஞர் பிறந்தநாளை ஒட்டி நேற்று தமிழகம் முழுவதும் திமுகவின் கிளை கழகங்கள் தொடங்கி, அனைத்து அமைப்புகளின் சார்பிலும் கலைஞரின் திருவுருவப் படம் வைத்து கட்சியினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தனர். தமிழகம் முழுவதும் திமுக மூத்த முன்னோடிகளுக்குப் பொற்கிழிகள் வழங்கப்பட்டன. ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி ெதாகை, நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும் மருத்துவ முகாம்கள், விளையாட்டு போட்டிகள் என தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

 

The post 101வது பிறந்தநாள் கொண்டாட்டம் கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Tamil Nadu ,Chennai ,DMK ,M.K.Stalin ,
× RELATED தந்தையர் தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து