×

வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் தோற்றம்: நாளையும் பொது மக்கள் காணலாம்

சென்னை: நிலவோடு சேர்த்து சூரிய குடும்பத்தைச் சேர்ந்த 6 கோள்கள் ஜூன் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வானில் தெரியும் என்றும், அவற்றை யார் வேண்டுமானாலும் நேரடியாகப் பார்க்க முடியும் என்றும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது. வானில் சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களில் பொதுவாக சிலவற்றைத்தான் நாம் கண்ணால் காண முடியும், அதன்படி சுக்கிரன், வியாழன், சூரியன், நிலவு, சில நேரங்களில் செவ்வாய், சனி போன்ற கோள்களைத்தான் நாம் பார்க்க முடியும். ஒரே நேரத்தில் பார்க்க முடியுமா என்றால் முடியாது. எப்போதாவது அரிதாக அதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது உண்டு. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் இன்றும் நாளையும் வானில் நிகழ உள்ளது.

ஜூன் 3, 4 ஆகிய இரண்டு நாட்களில் அதிகாலை நேரத்தில் சூரியன் உதிப்பதற்கு முன்பு நிலவோடு சேர்த்து சூரிய குடும்பத்தைச் சேர்ந்த புதன், வியாழன், சனி, நெப்டியூன், செவ்வாய், யுரேனஸ் ஆகிய 6 கோள்கள் வானத்தில் தோன்றும் என்று தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது. இதில் ஒரு சில கோள்களை வெற்றுக் கண்ணால் பார்க்கலாம் எனவும், ஒரு சில கோள்களைப் பெரிய தொலைநோக்கி மூலமே பார்க்க முடியும்.  எதனால் இந்த நிகழ்வு நடக்கிறது, இது ஒரு அரிய நிகழ்வா என்பது குறித்து தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழிநுட்ப மையத்தின் இயக்குநர் லெனின் தமிழ்க்கோவன் கூறியதாவது:

“இது அவ்வப்போது நடக்கும் ஒரு நிகழ்வுதான். சுற்றுப்பாதையில் சுற்றி வரும் 8 கோள்களும் தொடர்ந்து சுற்றிக்கொண்டிருக்கும் நிலையில், அதன் சுழற்சியின் ஒரு கட்டத்தில் அனைத்துக் கோள்களும் ஒரே நேர்கோட்டில் சந்தித்துக் கொள்ளும் நிகழ்வே இது, இப்படியான நிகழ்வின்போது குறிப்பிட்ட எல்லா கோள்களையும் நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு நமக்கு அமையும். நிலவு மற்றும் 6 கோள்களும் ஒரே நேர்கோட்டில் காட்சியளித்தாலும், எல்லா கோள்களையும் மனிதர்களால் நேரடியாகப் பார்த்துவிட முடியாது. சூரிய உதயத்தைப் பொறுத்தே அது சாத்தியப்படும். அடிவானத்தில் தோன்றும் இந்தக் கோள்களை மேடான இடத்தில் நின்று பார்க்கலாம். ஆனால், தற்போது பருவகாலம் என்பதாலும் இவற்றைப் பார்ப்பதில் இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது. சூரிய ஒளியின் வெளிச்சம் வந்துவிட்டாலும் இந்தக் கோள்கள் தெரியாமல் போக வாய்ப்புள்ளது.

மேலும், இவற்றில் புதன் கோள் சூரியனுடன் சுற்றிக் கொண்டிருக்கும் என்பதால் அதைக் கண்டுபிடிப்பது கடினம். நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்கள் 300 கோடி கி.மீ. தொலைவில் இருப்பதால், அவற்றை மிகப்பெரிய தொலைநோக்கிகள் கொண்டு மட்டுமே பார்க்க முடியும். சாதாரணமாக வெறும் கண்ணுக்கோ அல்லது பைனாகுலருக்கோ தெரியாது. இதற்கடுத்து வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் இதே போன்ற நிகழ்வு நடைபெறும். அதற்கடுத்து 2025ம் ஆண்டும் இதே போன்ற நிகழ்வு ஏற்படும். அப்படியே வருகின்ற காலத்தில் அடிக்கடி இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கலாம். பொதுவாகவே இதுபோன்ற வானியல் நிகழ்வுகள் நடைபெறும்போது தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் மற்றும் இதர அறிவியல் அமைப்புகள் அந்த நிகழ்வைப் பார்க்க ஏற்பாடுகளைச் செய்வார்கள். ஆனால், இந்த நிகழ்விற்கு அப்படி எதுவும் ஏற்பாடு செய்யவில்லை.

அதற்குக் காரணம், “இது மிகக் குறுகிய நேரமே நடக்கும் நிகழ்வு என்பதாலும், சூரிய வெளிச்சத்தைப் பொறுத்தே இந்தக் கோள்களைப் பார்க்க இயலும் என்பதாலும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் சார்பில் எந்தவிதமான நிகழ்ச்சிகளும் ஒருங்கிணைக்கப்படவில்லை. ஆனால், மக்கள் தாங்களே நேரடியாக இதைப் பார்த்துக் கொள்ளலாம். ஜூன் 3ம் தேதி , கிழக்கு திசையில் சூரிய உதயத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன், வியாழன், புதன், யுரேனஸ், செவ்வாய், நெப்டியூன், சனி என்ற வரிசையில், ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வருவதை, பூமியில் இருந்து பார்க்கலாம். இதில் யுரேனஸ், நெப்டியூன், புதன் சற்று தூரமாக இருப்பதால், பைனாகுலர் மூலம் தெளிவாக பார்க்கலாம்.

அவ்வாறு ஒரே வரிசையிலும் ஒரே நேர்கோட்டிலும் அணிவகுத்து வருவது மிக அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதேநேரம், கோள்கள் ஒரே நேர்கோட்டில் காணப்படவில்லை. மாறாக பூமியில் இருந்து பார்க்கும்போது இந்த கோள்கள் ஒரே நேர்கோட்டில் இருப்பதுபோல ஒரு மாயத் தோற்றத்தை நமக்கு தருகிறது. இதனை காற்று மற்றும் ஒளி மாசுபாடு இல்லாத, அடிவானம் மறைக்காத சற்று உயரமான இடத்தில் அமர்ந்துகொண்டு பார்ப்பது மிகவும் சிறந்தது. செவ்வாய், சனி வெறும் கண்ணுக்கு மங்கலாக தெரியும் என்கிறார் லெனின் தமிழ்க்கோவன். இந்நிலையில், இன்று சனிக்கோளுக்கு கீழேயும், நாளை, செவ்வாய் கோளுக்கு கீழேயும் பிறைச் சந்திரனையும் காணலாம் என்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையம் தெரிவித்துள்ளது.

The post வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் தோற்றம்: நாளையும் பொது மக்கள் காணலாம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu Science and Technology Centre ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...