×

ங போல் வளை….யோகம் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

யோகா ஆசிரியர் செளந்தரராஜன்.ஜி

குவிதலும் மலர்தலும்

நம் காலகட்டத்தின் மிகச்சிறந்த ஹடயோகி ஒருவரை சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் பேட்டி எடுத்தனர். அந்தப் பேட்டியை எடுத்த ஒரு ஊடகவியலாளர், இந்த யோகியின் எதிர்பக்கத்தில் அதேபோல ஒரு நீளமாக நாற்காலியில் அமர்ந்து, யோகியை போலவே உடையணிந்து, நாற்காலியில் தலையணைகளும், விரிப்புகளும் வைத்து, பேட்டி கண்டார்.

அந்த அரைமணி நேரத்தில் ஊடகவியலாளர் இருபது முறை தன்னுடைய உட்காரும் நிலையை மாற்றிக்கொண்டார். பரபரப்பாக தன்னை காட்டிக்கொண்டார். தர்க்கபூர்வமாக கேள்விகளைக் கேட்டு, யோகியை மடக்கும் முயற்சியில் இருந்தார். மறுபுறம் அமர்ந்திருந்த யோகியே ஒரு சிறு சலனம்கூட இல்லாமல், அலட்டிக்கொள்ளாமல், ஒரு குறிப்பிட்ட நிலையில் அமர்ந்து, மடியின் மீது ஒரு துண்டை விரித்து பேட்டி முடியும் வரை பெரிய அசைவுகள் ஏதுமின்றி சிரித்துப்பேசி பேட்டியை முடித்துவிட்டு, புன்முறுவலுடன், ஊடகவியலாளரைப் பார்த்து, ‘இந்த மெத்தை, கட்டில், துண்டு விரிப்பு, உடையலங்காரம், இதையெல்லாம் செய்வதால் மட்டும் ஒருவர் யோகி எனத் தன்னை காட்டிக்கொள்ள முடியாது. நீங்கள் இன்னும் எத்தனை தடவை இந்த அலங்காரங்களைச் செய்து கொண்டாலும், நான் அடைந்திருக்கும் இந்த நிலையை ஒரு பேட்டியில் நீங்கள் அடைந்துவிட முடியாது எனச் சொல்லி சிரிப்பார்.

அதுவே உண்மை. ஊடகவியலாளர் அரைமணி நேரம்கூட ஓய்வாகவும், நிம்மதியாகவும் அமரமுடியாமல் திணறிக்கொண்டு இருக்கையில், இந்த யோகி அடைந்த நிலைதான் என்ன? இந்த சமநிலை எங்கிருந்து பேணப்படுகிறது? பெரும்பாலும் உலகம் முழுவதும் ஏதேனும் ஒரு பயிற்சியில் இருப்பவர்கள், ஒரு இயந்திரத்தனமாகத் தொடர்ந்து ஒரே போல பயிற்சிகளை ஆண்டுக்கணக்காக செய்துகொண்டே இருப்பார்கள். அதன் சிறு பகுதியாக சில பலன்களை அடைவார்கள். ஆனால், மரபார்ந்த யோகக் கல்வித்திட்டம் காலந்தோறும் பயிற்கசிளை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறது. சாதகனை அவனுடைய பாதையின் ஒவ்வொரு சந்திப்பிலும், சிறு மாற்றங்களைச் செய்து கொடுத்து, மேலும் ஒரு சில பயிற்சி முறையை அறிமுகம் செய்து, ஏற்கெனவே இருக்கும் பயிற்சிகள் சிலவற்றை நீக்கி, அப்கிரேட் செய்து கொண்டே இருக்கிறது.

அப்படி மேம்படுத்துவதற்காகவே எண்ணற்ற பயிற்சி முறைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அதனால்தான் யோக பயிற்சிகளை குருகுல முறைப்படி கற்றுத்தேறப் பன்னிரண்டு வருடங்கள் ஆகும் என வகுக்கப்பட்டுள்ளது. ஆகவே, அடிப்படை ஆசனங்கள், பிராணாயாமங்கள், சில தியானப் பயிற்சிகள் செய்பவர்களுக்கு, அடுத்த கட்டமாக முத்திரைகள், பந்த’ங்கள் எனும் மிகுந்த ஆற்றல் மிக்க அதேவேளையில் எளிதாக செய்யக்கூடிய பாடத்தை வகுத்துள்ளது.

சுவாமி நிரஞ்சன் இவற்றை பற்றி கூறுகையில் ‘யோகமரபில் ஆசனங்களையும், பிராணாயாமங்களையும்விட சக்தி வாய்ந்தது, முத்திரைகளும், பந்தங்களும்தான். அவை நேரடியாகவே நமது பிராண மய கோஷம் மற்றும் மனோமய கோஷம் எனும் இரண்டு அடுக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதால், மொத்த உயிராற்றலும் தூண்டப்படுகிறது. எனினும், இது தர்க்கபூர்வமாக புரிந்துகொள்ள கடினமானது. ஆகவே, அனுபவித்து அறியவேண்டியதாகிறது, அதுவும் ஒரு சில சாதகர்களுக்கே சாத்தியமாகிறது என்கிறார்.

உண்மைதான். நாம் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் யோக நிகழ்ச்சிகளிலும், இணைய காணொளிகளிலும் காண்பிக்கப்படும் முத்திரைகள் சார்ந்த அனைத்து தகவல்களும் வெறும் தகவல்களாகவே இருப்பதை காண்கிறோம். சில நிகழ்ச்சிகளில், நீரிழிவு நோய்க்கு மருந்து எடுத்துக்கொண்டிருப்பவர்கள். ஒரு குறிப்பிட்ட விதத்தில் விரல்களை வைத்து முத்திரைகள் செய்தால் மருந்து மாத்திரைகளை நிறுத்திவிடலாம் போன்ற, போலியான தகவல்கள் சொல்லப்படுவதையும் கவனிக்கலாம்.

இந்திய சாஸ்திரிய நடன அசைவுகளில் காண்பிக்கப்படும் முத்திரைகள் என்பது ஒரு உணர்ச்சியை வெளிப்படுத்தும் சமிக்ஞை. கோபம் என்பதை கண்களில் வெளிப்படுத்துவதும், முக பாவங்களில், புருவ அசைவுகளில், விரல்களை விரித்தும் மடக்கியும் வெளிப்படுத்துவதில், இருப்பது போலவே, யோக முத்திரைகள், உடலும் உள்ளமும் ஒரு இசைவில் இயங்க ஒன்றை ஒன்று வெளிப்படுத்த, ஆற்றலை நாடிகளின் வழியாக வேறு தளங்களுக்கு கொண்டு செல்ல, ஆற்றல் குறைவான நரம்பு மண்டலத்தைத் தூண்ட, உயிராற்றலை தேவையான போது மட்டும் செலவழிக்க என பல்வேறு ‘அகவய’ காரணங்களுக்கு யோகமுத்திரைகள் பயன்படுகின்றன.

இவை நாடிகளையும் , பிராணனையும் கருவிகளாகக் கொண்டு செய்யப்படும் பயிற்சி என்றே சொல்ல வேண்டும், யோக முத்திரை பயிற்சிகளை முறைப்படுத்தாமல், ஐம்புலன்களில் ஒருவருக்குக் கட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமே இல்லை. அவர் எப்போதும் ஒரு நுகர்வாளராகவே இருக்க முடியும். யோக முழுமையை, அதன் அதீத பலனை அடைய ஐம்புலன்களின் ‘தொடர் நுகர்வு’ பெரும் தடை என யோக மரபு கருதுகிறது. ஆகவே, இதை சரியாக நிர்வகிக்க யோகமுத்திரைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது முற்றிலும் அகவயமான பயிற்சி என்பதால் எத்தனை வார்த்தைகளால் விளக்க முடிந்தாலும், மேலும் சொல்வதற்கு பல விஷயங்கள் இருக்கும் ஆகவே ‘அனுபவித்து அறிந்து கொள்’ என்கிறது யோகம்.உதாரணமாக, ஷண்முகி முத்ரா’ என்பது கண், காது, மூக்கு , வாய் , ஆசனவாய் என அனைத்தையும் மூடிய நிலையில் செய்யக்கூடிய ஒரு பயிற்சி. வெளிப்புறமாகப் பார்ப்பவர்களுக்கு இது எந்த விதத்திலும் புரிந்துகொள்ள முடியாத பயிற்சியாகவே இருக்கும். ஆனால், இவ்வகை பயிற்சி ஒருவரை தன் உயிரின் ஆழம் வரை அழைத்துச் செல்கிறது. அங்கே நாம் யாரென கண்டு கொள்கிறோம். அதன் பின் வாழ்வு வேறுதலத்தில் இயங்கத்தொடங்குகிறது.

இப்போது இதை படித்துவிட்டு நாளை ஷண்முகி முத்ரா செய்யும் ஒருவருக்கு இது நிகழாமல் போகலாம். ஏனெனில், இதில் நமது பதிவுகள், உடலியல் ஞாபகங்கள், நரம்பியல் தடைகள் என பல படிகள் இருப்பதால், இவற்றை முறைப்படிக் கற்றுக்கொள்வது முழுமையான பலனைத்தரும்.அடுத்ததாக ‘பந்தப்பயிற்சிகள்’ ‘பந்த’ என்பதற்கு முடிச்சு, வலைப்பின்னலின் ஒரு கண்ணி , எனும் பொருளுமுண்டு. அதாவது ஒரு ஹடயோகியானவன் தனது சாதனாவின் மூலம் உள்ளுக்குள் ஒரு குறிப்பிட்ட உயிர் ஆற்றலை திரட்டுகிறான். அவை அவனுள் ஒவ்வொரு தளத்திலும் தங்கியிருக்கின்றன. அவனுடைய மேலான தேவையின் போது அவன் அதை அவிழ்த்து வேறு தளங்களுக்கு அனுப்ப முடியும், அந்த ‘கட்டை’ அவிழ்க்கும் பயிற்சிகளுக்கு தன் பந்தங்கள் என்று பெயர்.

ஹடயோக பிரதீபிகை எனும் நூல் இதை மிக விரிவாகப் பேசுகிறது. நூலாசிரியர் மூன்றாவது அத்தியாயம் முழுவதும், முத்திரைகளும், பந்தங்களும் யோகமரபில் எந்த அளவுக்கு முக்கியம் என விவரிக்கிறார். நாம் முதலில் சொன்ன அந்த யோகி அமர்ந்திருந்த நிலை, இதுபோன்ற முத்திரையும், பந்தமும் ஒருங்கே அமைந்த ஒரு நிலைதான். ஆகவே அவரால் நீண்ட நேரம், அசைவின்றியும் உள்ளே பதற்றமின்றியும் சமநிலையுடன் உரையாட முடிந்தது.

அவரால் தனது உயிராற்றலை குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு குறிப்பிட்ட உடலின் செயலுக்கு அனுப்ப முடிந்தது. யோகமென்பது ஆசனங்கள் என நீண்ட காலமாக நமக்குச் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. ஆசனம் என்பதும் ஒரு சிறு பிரிவுதான். மரபுக்குள் பயிற்சிகளின் தொகுப்பு பிரமாண்டமானது. நல்லாசிரியரின் உதவியுடன் ஓரளவு பயணம் செய்ய முடிந்தாலே நாம் பெரும் நிறைவை அடைவோம்.

நாடி சுத்தி பிராணாயாமம்

இந்தப் பகுதியில் ‘நாடி சுத்தி பிராணாயாமம் ‘ எனும் முறையை காணலாம். ஆசனப் பயிற்சிகளை முடித்து விட்டு ஒருவர் தரையில் அமர்ந்து கைவிரல்களால் மூக்கைப் பிடித்து, இடது புறமாக மூச்சை உள்ளிழுத்து வலது புறமாக வெளியிட வேண்டும். உடனே வலது புறம் மூச்சை எடுத்து இடது புறமாக வெளியிட வேண்டும். இப்படி பத்து நிமிடங்கள் வரை செய்து பலனடையலாம். பிராணமய கோசம் சார்ந்த முதல் கட்ட பயிற்சி இது.

The post ங போல் வளை….யோகம் அறிவோம்! appeared first on Dinakaran.

Tags : Kunkum ,Selandararajan.ji ,
× RELATED பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றக் கோளாறு!