×

கோடைகால குறிப்புகள்… குழந்தைகள் மற்றும் முதியோர் பராமரிப்பு!

நன்றி குங்குமம் டாக்டர்

100 டிகிரிக்கும் மேலே கொளுத்தும் வெயிலைச் சமாளிக்க முடியாமல், ஆரோக்கியமானவர்களே தடுமாறும்போது, குழந்தைகளும் முதியவர்களும் எப்படி வெப்பத்தின் உக்கிரத்தைத் தாங்குவார்கள்? வெயிலின் கடுமை, குழந்தைகளையும் முதியவர்களையும் தாக்காத அளவுக்கு, அவர்களைப் பாதுகாக்க வேண்டும். உடை, தண்ணீர், உணவு என்று எல்லா விஷயங்களிலுமே, வழக்கத்தைவிடக் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்வது, கோடை நோய்களிலிருந்து குழந்தைகளையும் முதியவர்களையும் பாதுகாக்க உதவும்.

பச்சிளம் குழந்தை (0 – 5 மாதங்கள்)

கோடையில் பிறக்கும் குழந்தைகளுக்கு, சீக்கிரமாகவே தொப்புள்கொடி விழுந்துவிடும். இதற்காகப் பயப்படத் தேவை இல்லை. இது இயல்பான நிகழ்வுதான்.குழந்தையை அதிகத் துணிகள், துண்டுகள் போட்டுச் சுற்றிவைக்கக் கூடாது. அப்படிச் செய்தால், குழந்தையின் உடல் வெப்பநிலை அதிகமாகி, காய்ச்சல் அடிப்பது போல தோன்றும். மிக மிருதுவான ஒரு பருத்தித் துணியால் போர்த்தினால் போதும். குழந்தையைக் காற்றோட்டமான இடத்தில் வைத்திருக்க வேண்டும். ஏ.சி அறை என்றால், குளிர் 27 டிகிரி அளவில் இருப்பது போல் வைக்க வேண்டும். எப்போதும் ஏ.சி அறையிலேயே வைத்திருப்பதும் கூடாது.

தாய்ப்பாலிலேயே 80 சதவிகிதம் தண்ணீர் இருப்பதால், கோடையில் குழந்தைகளுக்குத் தனியாகத் தண்ணீர் தர வேண்டிய அவசியம் இல்லை. உடலில் பலவகையான ‘ராஷஸ்’ உண்டாகும். துணியினால் வருகிறதா எனப் பார்த்து, குழந்தைக்கு உறுத்தாத, சௌகரியமான உடைகளை அணிவிக்க வேண்டும். உடைகள், படுக்கை எல்லாமே மிகத் தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம்.

குழந்தைக்கு வியர்க்குரு பவுடர், சாதாரண பவுடர் எதுவுமே தேவை இல்லை. சுத்தமாக வைத்துக்கொண்டாலே போதும். தேவைப்பட்டால், மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு, கற்றாழை அல்லது காலமைன் லோஷன் தடவலாம்.

6 மாதங்கள் முதல் 2 வயது

குழந்தைகளுக்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு, தாய்ப்பாலுடன் கூழ் உணவு (செமி சாலிட்) ஆரம்பிக்கலாம். அதில், பூசணி, பரங்கி போன்ற நீர்க்காய்களை வேகவைத்து, மசித்துச் சேர்க்கலாம். வெறும் கேரட், உருளைக்கிழங்கை மட்டும்தான் மசித்துத்தர வேண்டும் என்பது இல்லை. குழந்தையின் உடலில் போதுமான அளவு தண்ணீர் இருக்க வேண்டும். ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் ஒரு லிட்டர் அளவு, தண்ணீர் குடிக்கவேண்டும் (பால், ஜூஸ், கூழ் உணவு எல்லாவற்றிலும் இருக்கும் நீரின் அளவைச் சேர்த்து).

நன்றாக சிறுநீர் கழிக்க வேண்டும். சரியான அளவு சிறுநீர் கழிகிறதா என்பதை அறிந்துகொள்ள, சில வழிகள் உள்ளன. குழந்தையின் சருமம் வறட்சியாக இல்லாமல், மிக மிருதுவாக இருக்க வேண்டும். சிறுநீர் மஞ்சளாக இல்லாமல், சாதாரணமாக இருக்கவேண்டும். நாக்கு வறண்டுபோய் இருக்கக் கூடாது. குழந்தைகளுக்கு எல்லா தாய்மார்களும் ஜூஸ் கொடுத்தே பழக்கப்படுத்துகிறார்கள். சாறாகப் பிழிந்து கொடுப்பதைவிட, பழங்களாகக் கொடுப்பதே நல்லது.

கோடை காலத்தில் குழந்தைகள் அனுபவிக்கும் பெரிய பிரச்னையே வியர்க்குருதான். இது, பாக்டீரியா தொற்றினால் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, தினமும் இருமுறை குளிக்கவைக்கலாம். சுத்தமான பருத்தி ஆடைகளை அணிவிக்க வேண்டும். வெளியில் போகும்போது, குழந்தைகளுக்குக் கொடுக்கும் குடிநீரில், மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மாசடைந்த குடிநீர் மூலமாக நோய்த்தொற்று வர வாய்ப்புகள் அதிகம்.

குழந்தைகளுக்கு அதிகமான முடி இருந்தால், வியர்வை காரணமாக, சளி பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. முடியை வெட்டிப் பராமரிக்க வேண்டும். டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் எனர்ஜி பானங்களைவிட, இயற்கையான பானங்கள் நல்லவை.சிறு குழந்தைகள் விளையாடி முடித்து வந்ததும், குளிக்கவைக்க வேண்டும். தலையில் தண்ணீர் இன்றி நன்கு துவட்டிவிட வேண்டும். இதனால், சைனஸ் தொந்தரவு உள்ள குழந்தைகளுக்குப் பிரச்னை வராமல் இருக்கும்.

2 முதல் 5 வயது

இந்த வயதில், வைரஸ் கிருமித் தொற்று அதிகமாக இருக்கும். எனவே, கோடை விடுமுறையில் அதிகக் கூட்டமான இடங்களுக்குச் சென்றால், கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர் இருவரும் வேலைக்குப் போகும் வீடுகளில், குழந்தைகளை க்ரெச்சில் விடும் வழக்கம் உள்ளது. முடிந்த வரை ஏ.சி இல்லாத க்ரெச்சில் விடுவது நல்லது. ஏ.சி இருக்கும் சூழலில், ஒரு குழந்தைக்கு இருக்கும் நோய்த்தொற்று, மற்ற குழந்தைகளுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது. குழந்தைக்கு உடல்நிலை சரி இல்லை என்றால், க்ரெச்சுக்குக் கண்டிப்பாக அனுப்பக் கூடாது. வீட்டில்வைத்து கவனித்துக்கொள்வதே நல்லது.

கோடையில் ஏற்படும் ஒரு வகை வைரஸ் தொற்றால் குழந்தைகளின் விரல்கள், பாதங்கள் மற்றும் வாய் அருகில் சிவந்த படை அல்லது பொரிப் பொரியாகக் காணப்படும். இது பரவும் என்பதால், இந்த நோய்த்தொற்று ஒரு குழந்தைக்கு இருந்தால், மற்ற குழந்தைகளுடன் விளையாட விடாமல் இருப்பது நல்லது.

உணவில் பழங்கள், காய்கறிகளை அதிகம் சேர்க்க வேண்டும். நீர்ச்சத்துள்ள காய்களைக் கட்டாயம் சாப்பிட வேண்டும். குழந்தைகளின் துணிகளைத் துவைப்பதற்கு, மிகக் குறைவான டிடர்ஜென்ட் சேர்க்கப்பட்ட சோப்பைப் பயன்படுத்துவது நல்லது. அதிகக் காட்டமான டிடர்ஜென்ட், அரிப்பை ஏற்படுத்தலாம். குழந்தைக்கு வாந்தி அல்லது பேதி ஏற்பட்டால், உடலில் நீர் வறட்சி ஏற்படாமல் இருக்க, ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சர்க்கரையும் ஒரு சிட்டிகை உப்பும் கலந்து, அடிக்கடி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அதாவது, ஒவ்வொரு முறை பேதியாகும்போதும் ஏற்படும் நீர் இழப்பைச் சரிசெய்ய, வெளியேறும் நீரின் அளவிற்கு, உப்பு, சர்க்கரை கரைசல் கொடுக்க வேண்டும். வயிற்றுப்போக்கு சமயத்தில், அரிசிக் கஞ்சி, அரோரூட் மாவுக் கஞ்சி, தயிர், இட்லி போன்ற உணவுகளைக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு வெயில் காலத்தில் அதிக மசாலா, எண்ணெய், காரம் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. சிறுநீர்த் தொற்றால் ஏற்படும் நீர்க்கடுப்பு பிரச்னையைத் தவிர்க்க, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். சாதாரணத் தண்ணீரைத் தவிர்த்து, பார்லி தண்ணீரும் அருந்தலாம். சிறுநீர் கழிக்கும் உறுப்பை, ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்த பின்னரும், வெதுவெதுப்பான தண்ணீரால் சுத்தப்படுத்த வேண்டும்.

6 முதல் 10 வயது

5 வயது வரையிலான குழந்தைகளுக்குக் கூறி இருக்கும் எல்லா குறிப்புகளுமே இந்த வயதுக் குழந்தைகளுக்கும் பொருந்தும். வைரஸ் தொற்று, சருமப் பிரச்னை, சிவந்த படை, நீர்க்கடுப்பு மற்றும் பேதி எல்லாமே வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நோய்த் தொற்றுக்கு முக்கியமான காரணம் குடிநீர்தான். எனவே, குழந்தைகள் குடிக்கும் தண்ணீர் சுத்தமானதா, மாசடையாமல் உள்ளதா எனப் பார்த்துக் குடிக்க வேண்டும். காய்ச்சி ஆறவைத்துக் குடிப்பது மிகவும் பாதுகாப்பானது.

10 வயதுக்கு மேல்

இந்த வயதுக் குழந்தைகளுக்கு, கல்வி, விளையாட்டு என உடல் உழைப்பு அதிகம் இருக்கும் என்பதால், உணவில் அதிக அளவில் ஊட்டச்சத்துத் தேவை.
வெயிலில் சருமம் பாதிக்கப்படாமல் இருக்க, மைல்டு சன்ஸ்கிரீன் உபயோகிக்கலாம். நீச்சல் பயிற்சிக்குப் போகும்போது, சன்ஸ்கிரீன் போட்டுக்கொள்ளலாம்.
இந்த வயதினருக்குப் பூஞ்சைத் தொற்று மற்றும் உடலில் துர்வாடை இருக்கும். ஒரு நாளைக்கு இருமுறை குளிக்கலாம். வாசனை சேர்த்த சோப்புகளைத் தவிர்த்து, வாசனையற்ற சோப்பை உபயோகிப்பது நல்லது.

முதியோர் பாதுகாப்பு தண்ணீர்… தண்ணீர்…

பருவ வயதில் இருந்து 60 வயதுக்கு இடைபட்டவர்களுக்கு உடலில் 60 சதவிகிதம் தண்ணீர் இருக்கும். ஆனால், முதியவர்களுக்கு உடலின் சதைப்பகுதி, கொழுப்பாக மாறுவதால், 45-50 சதவிகிதம்தான் தண்ணீர் இருக்கும். வெயில் காலத்தில் தோல் வழியாகவும், மூச்சுவிடுவதன் வழியாகவும், மலம் வழியாகவும் கிட்டத்தட்ட 800 மி.லிக்கும் அதிகமான தண்ணீர் உடலை விட்டு வெளியே போய்விடும். மேலும், சிறுநீர் வழியாக 1500 மி.லி. நீர் வெளியேறும். முதியவர்களுக்கு ஐந்து சதவிகிதம் தண்ணீர் குறைந்தாலே, உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். நீர் வெளியேற்றத்தைச் சரிகட்ட, அதிக தண்ணீர் அருந்துவது அவசியம்.

முதியவர்களுக்குத் தாகம் குறைவாகவே இருக்கும். எனினும், அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். கல்லீரல், சிறுநீரகம், இதயம் நன்றாக இயங்கக்கூடிய முதியவர்கள் ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். இதயக் கோளாறுகள், கல்லீரல், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள், மருத்துவர் பரிந்துரைப்படி, ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் தண்ணீர் அருந்தினால் போதுமானது.

சோடியம் அத்தியாவசியம்

உடலுக்கு சோடியம் உப்பு அவசியம். பொதுவாக, ரத்தத்தில் சோடியம் அளவு 135-145 இருக்க வேண்டும். வெயில் காலத்தில் வியர்வை வழியாக சோடியம் உப்பு அதிகளவு வெளியேறிவிடும். முதியவர்களில் பெரும்பான்மையினருக்கு ரத்த அழுத்தம், இதயப் பிரச்னைகள் காரணமாக, மிகக் குறைந்த உப்பைச் சாப்பாட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கும். மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவதால், சிறுநீர் வழியாக சோடியம் வெளியேறும்.

இதனால், முதியவர்களுக்கு சோடியம் அளவு குறைவாக இருக்கும்போது, ஹைப்போநட்ரீமியா (Hyponatremia) எனும் பாதிப்பு ஏற்படும். சோடியம் 125-க்கு கீழ் குறையும்போது, அன்றாட நடவடிக்கைகள் மாறும். மலச்சிக்கல் வரும், குறைவாகச் சாப்பிடுவார்கள். சோடியம் 115க்கு கீழ் குறைந்துவிட்டால் மனநிலை மாறுதல்கள் ஏற்படும். இந்த அறிகுறிகள் இருந்தால், மற்ற பரிசோதனைகள் எடுப்பதற்கு முன்னர், சோடியம் பரிசோதனை மூலமே, கண்டுபிடித்துவிட முடியும். வெயில் காலங்களில் ஒரு நாளைக்கு நான்கு கிராம் அளவுக்கு, உப்பு எடுத்துக்கொள்வது நல்லது. ஆனால், ஊறுகாய், அப்பளம் போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

ஹீட் ஸ்ட்ரோக்

வெயில் காலங்களில் உடல் வெப்பம் 40 டிகிரி செல்சியஸ் அல்லது 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவைவிட அதிகமானால், `ஹைபர்தெர்மியா’ எனப்படும் `ஹீட் ஸ்ட்ரோக்’ ஏற்படும். இந்த நிலையில், முதியவர்களுக்கு மனநிலைக் குழப்பம் தடுமாற்றமான பேச்சு இருக்கும், தோல் வறட்சி ஏற்படும். வயிற்று வலி, வாந்தி போன்றவை வரும். தோலில் ஆங்காங்கே சிவப்பு நிறத்திட்டுகள் உருவாகும், மூச்சுவிடுதலில் சிரமம் இருக்கும். இதயத் துடிப்பு சீராக இருக்காது.

தசைப்பிடிப்பு ஏற்படும். எனவே, `ஹீட் ஸ்ட்ரோக்’ வராமல் தடுக்க, வெயில் காலங்களில் வெளியில் செல்வதை மிகவும் குறைத்துக்கொள்ள வேண்டும். நிழலில் அல்லது குளிர்சாதன வசதி இருக்கும் அறையில் இருப்பது நல்லது. நீர் அதிக அளவு அருந்த வேண்டும். `ஹீட் ஸ்ட்ரோக்’ அறிகுறிகள் இருந்தால், குடும்பத்தினர் முதியவர்களை டாக்டரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். படுக்கையாகவே இருக்கும் முதியவர்களை, வெயில் படும்படி ஜன்னல் அருகில் படுக்கவைக்க வேண்டாம்.

சிறுநீரகச் சிக்கல் தவிர்க்க வெயில் காலத்தில் புற வெப்பத்தில் இருந்து உடலைப் பாதுகாக்க, வியர்வை வழியாகத் தண்ணீர் அதிக அளவு வெளியாகும் என்பதால், அடிக்கடி சிறுநீர் வராது. எனினும், பொதுவாகப் பெரியவர்கள் ஒரு நாளைக்கு நான்கைந்து முறையும், முதியவர்கள் ஆறு முதல் எட்டு முறையும் சிறுநீர் கழிக்க வேண்டியது அவசியம்.முதியவர்கள் சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருந்தாலும், திடீரென சிறுநீர் கழிப்பது குறைந்தாலும், சிறுநீர் அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் வெளிவந்தாலும், உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது. சிறுநீர் நன்றாக வெளியேற, தண்ணீர் அதிக அளவு அருந்த வேண்டும்.

தோல் பராமரிப்பு

வெயில் நேரத்தில் வெளியே போகும்போது, சன்ஸ்கிரீன் லோஷன் தடவிக்கொண்டு செல்லுங்கள். முடிந்தவரை, காலை ஒன்பது முதல் மாலை ஆறு மணி வரையில், வெயில் நேரத்தில் வெளியே தலை காட்டாதீர்கள். வைட்டமின் – டி குறைபாடு உள்ளவர்கள், காலை ஆறு முதல் எட்டு மணிக்குள், மிதமான சூரிய ஒளியில் உடற்பயிற்சி செய்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பிவிடுங்கள்.
படுக்கை, தலையணை, ஆடைகளை அடிக்கடித் துவைப்பது அவசியம்.

வங்கி முதலான இடத்துக்கு அவசியம் செல்ல நேர்ந்தால், தலையில் தொப்பி அணிந்து செல்லுங்கள்.முழுக்கை சட்டை அணிந்து செல்லுங்கள். எப்போதும் கையில் 500 மி.லி அளவுகொண்ட தண்ணீர் பாட்டிலை வைத்திருங்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறை குளியுங்கள்.பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. தடிமனான ஆடைகள் வேண்டாம். மஞ்சள், வெள்ளை, ஆகாய நீலம், பச்சை என வெளிர் நிறங்களில் ஆடை அணியுங்கள். இது, சூரியனிலிருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்களால், சருமம் பாதிப்புக்கு உள்ளாவதைத் தடுக்கும்.

கண்ணைக் கவனி

வெயில் நேரத்தில், விளையாடவோ உடற்பயிற்சி செய்யவோ வேண்டாம். பகல் வேளையில் தரமான கூலிங்கிளாஸ் அணிந்து செல்லுங்கள். வெப்பக் காற்றால் வரும் தூசுகள், கண்களைப் பாதிக்காமல் இருக்கும். ரோட்டோரக் கடைகளில் விற்கப்படும், மலிவான கண்ணாடிகளை அணிய வேண்டாம். வெயில் நேரத்தில் வெளியே சென்றுவிட்டு, வீட்டுக்குத் திரும்பியவுடன், கண்களை நன்றாகத் தூய்மையான நீரால் கழுவுங்கள். கண்களுக்கு அடிக்கடி ஓய்வுகொடுங்கள்.

தொகுப்பு: இளங்கோ

The post கோடைகால குறிப்புகள்… குழந்தைகள் மற்றும் முதியோர் பராமரிப்பு! appeared first on Dinakaran.

Tags : Dr. ,Kumkum ,
× RELATED இளைஞர்களை பாதிக்கும் உயர் ரத்த அழுத்தம்!