×

உடலில் அதிசயங்களை நிகழ்த்தும் ஆவாரம்பூ!

நன்றி குங்குமம் தோழி

‘‘ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ’’ என்ற பழமொழி நமக்குத் தெரியும். ஆவாரம் பூவில் நமக்கு தெரிந்திருக்கும் மருத்துவ குணங்களை விட, நமக்குத் தெரியாமல் இருக்கும் பலன்கள்தான் அதிகம். சர்க்கரை நோய்க்கு மருந்தாக பயன்படுத்துவது முதல் குளியலுக்கு தேவையான நலங்கு மாவு அரைப்பது வரை ஆவாரம் பூவின் பயன்பாடு அதிகம். அப்படிப் பட்ட ஆவாரம் பூவை வீடுகளில் வளர்ப்பது அரிதானது.

ஆனால் இந்தச் செடி சாலைகளில் காட்டுப் பகுதிகளில் கேட்பாரற்றுக் கிடைக்கும். தன் கிராமத்தின் சாலை எங்கும் பூத்துக்குலுங்கிய ஆவாரம் பூவைக் கொண்டு வீட்டிற்குத் தேவையான டீ, சோப்பு, தைலம் போன்ற பொருட்களை தயாரிப்பதோடு தலை முடி பிரச்னைகளுக்கும் சிறப்பு எண்ணெயை தயாரித்து வியாபாரம் செய்து வருகிறார் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ கௌரி ஆனந்த்.

‘‘பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்த நான் தற்போது சித்த வைத்தியம் சார்ந்த ஒரு துறையை எடுத்து அதில் பட்டப்படிப்பை முடிக்கப் போகிறேன். இதற்கெல்லாம் காரணம் எனக்கு ஆவாரம் பூவின் மேல் இருக்கும் அபரிமிதமான ஆசைதான். அது நமக்காகவே படைக்கப்பட்ட பூ என்று கூட சொல்லலாம்’’ என்று புன்னகையுடன் பேசத் துவங்கினார் கௌரி.

‘‘எங்க வீட்டில் பெண்கள் படிக்கக் கூடாது. அதனால் நான் பள்ளிப் படிப்பை முடித்த உடன் நிறுத்திட்டாங்க. பள்ளி முடிஞ்சதும், எங்க ஊரில் உள்ள சின்னச் சின்ன வேலையில் ஈடுபட்டேன். இதற்கிடையில் எனக்கு கல்யாணமானது. அதன் பிறகும் நான் பார்த்து வந்த அந்த வேலையினை தொடர்ந்து வந்தேன். குழந்தைகள் பிறந்தார்கள். அதன் பிறகு ஒரு தனியார் கன்சல்டன்சியில் வேலை பார்த்து வந்தேன். நான் வேலைக்குப் போய்கிட்டே குழந்தைக்ளைப் பார்த்துக்க முடியலை.அதனால நான் வீட்டில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அப்போது வீட்டில் இருந்தபடியே என்ன செய்யலாம்னு யோசித்தேன். சின்னச் சின்ன வேலைகளை வீட்டிலிருந்தபடியே செய்து வந்தேன். எங்க கிராமத்தில் சாலை ஓரம் எல்லாம் ஆவாரம் பூக்கள் வளர்ந்து இருக்கும். அதில் நிறைய மருத்துவ குணம் இருப்பதால், என் கணவர் ஆவாரம் பூவில் டீ போட்டு தரச்சொல்வார். இப்படித் தான் ஆவாரம் பூ எனக்கு பரிச்சயமானது. தேனீருக்காக மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த ஆவாரம் பூவை வைத்து நாம் ஏதேனும் வித்தியாசமா செய்யலாம் என்று யோசிக்கும் போதுதான், எண்ணெய் காய்ச்ச ஆரம்பித்தேன்.

2019ல் முதல் முறையாக தயாரித்த எண்ணெயை என் அக்கா மற்றும் எனக்கு தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்து அவர்களை பயன்படுத்த சொன்னேன். நாங்க எதிர்பார்க்காத அளவிற்கு அவர்களிடம் இருந்து எங்களுக்கு நல்லபடியாக விமர்சனங்கள் வந்தது. அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு பரிந்துரைக்க, மற்றவர்களும் என்னிடம் ஆவாரம் பூ எண்ணெயை வாங்க ஆரம்பித்தார்கள். ஆனால் என்னிடம் எண்ணெய் வாங்கியவர்கள் அனைவரிடம் இருந்தும் இந்த எண்ணெய் பற்றிய கருத்துக்கள் வெவ்வேறாக இருந்தது.

ஒருவருக்கு முடி உதிர்தல் குறைந்து, முடி வளர ஆரம்பித்தது. சிலருக்கு உடல் வலிக்கு மருந்தானது, ரத்தக்கட்டுகள், வெட்டுக் காயங்கள் போன்றவற்றுக்கும் இந்த எண்ணெய் மருந்தாக மாறியதாக குறிப்பிட்டு இருந்தார்கள். குறிப்பாக மலேசியாவில் உள்ள என்னுடைய வாடிக்கையாளர் இப்போது எங்களின் பொருட்களை மலேசியாவில் விற்பதற்கான விநியோகஸ்தராக செயல்பட்டு வருகிறார்’’ என்றவர், ஆவாரம் பூவை பற்றியும், அதிலிருந்து தயாரிக்கும் இதர பொருட்களைப் பற்றியும் விவரித்தார்.

‘‘பொதுவாக, ஆவாரம் பூ பற்றிய விழிப்புணர்வு ஒரு சிலருக்குதான் தெரியும். அவர்கள்தான் அதனை முறையாக பயன் படுத்துவார்கள். அவர்கள் அதை தேடிப் போய் வாங்குவார்கள். இதனை பற்றி தெரியாதவர்களுக்கு இது வெறும் பூதான். என்று கடந்து விடுவார்கள். அவர்களுக்காகவே தலை முடி எண்ணெய் முதல் குளியலுக்கு தேவையான அனைத்துவிதமான பொருட்களையும் ஆவாரம் பூவை மட்டுமே அடிப்படையாக வைத்து தயாரித்து வருகிறேன். என்னுடைய தயாரிப்பிற்கு ‘கோஜஸ்’ என்று பெயர் வைத்து தமிழ்நாடு மட்டுமில்லாமல் மலேசியா, குவைத், குஜராத் என விற்பனை செய்து வருகிறேன்.

ஆரம்பத்தில் வீட்டில் இருப்பவர்களுக்காக மட்டுமே எண்ணெய் தயாரித்து வந்தோம். வியாபாரமாக மாற்ற நினைத்த போது என் மகளின் ஆலோசனையின் அடிப்படையில் அதில் பல பொருட்களை தயாரிக்க ஆரம்பித்தேன். தலைமுடி, சருமம், உடல் வலி என ஒவ்ெவாரு பிரச்னைக்கு ஏற்ப தனிப்பட்ட முறையில் தயாரிக்க துவங்கினேன். இதனைத் தொடர்ந்து பேஸ் மாஸ்க், சோப்பு, குளியல் பவுடர் மற்றும் சீயக்காய் போன்றவற்றையும் தயாரிக்கிறேன். அதனையும் கூடிய விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறேன். இவை அனைத்திற்கும் அடித்தளம் ஆவாரம் பூ மட்டுமே’’ என்றவர், எண்ணெயின் பயன்பாடு குறித்து விவரித்தார்.

‘‘ஒரு ஸ்டாக் எண்ணெய் தயாரிக்க அதிகபட்சம் 15 நாட்களாகும். அதனால் வீட்டில் எப்போதும் ஸ்டாக் இருக்கும். வெளிநாடுகளில் இருந்து வரும் ஆர்டர்களுக்கு குறைந்தபட்சம் 20 முதல் 25 நாட்கள் எடுக்கும். இதுவரை இதனை நான் மட்டுமே தனி ஆளாக தயாரித்து வருகிறேன். பூக்களை பறித்து எண்ணெயை தயாரிக்கும் வேலை என்னுடையது. அதனை பாட்டிலில் பேக் செய்வது, டெலிவரி தருவது போன்ற வேலைகளை என் கணவரும் மகள்களும் பார்த்துக் கொள்வார்கள்.

இந்த எண்ணெயை நான் பலமுறை என் தேவைக்கே பயன்படுத்தி இருக்கேன். கீழே விழுந்து அடிபட்ட காயங்களுக்கு ரத்தக்கட்டு ஏற்பட்டால் நான் இதைத்தான் பயன்படுத்துவேன். இந்தப் பொருட்களை மக்கள் பயன்படுத்துவதால் ஆய்வகங்களில் பரிசோதனை செய்து அதிலிருக்கும் மருத்துவ குணங்களை முழுமையாகதெரிந்து கொண்ட பிறகுதான் விற்பனையே செய்ய துவங்கினேன்.

வெளி தேகத்துக்கு ஆவாரம் பூவினால் எந்த அளவிற்கு பலன் கிடைக்கிறது என்று கண்கூடாகப் பார்த்து தெரிந்து கொண்டதால், இதனை உணவாக எடுத்தால் அதில் இருந்து பல நன்மைகளை நாம் அனுபவிக்க முடியும். அதனால் இதனைக் கொண்டு ஊறுகாய், பொடி போன்று உணவு வகை களை தயாரிக்கும்முயற்சிகளை எடுத்து வருகிறேன். இல்லத்தரசிகளாக வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு அடையாளம் கிடைக்க இந்த வியாபாரத்தை பெருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள மூலிகைகளை கொண்டு தொழில் துவங்க வேண்டும். அதற்கு பெண்கள் முன்வர வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்’’ என்றவர், வீட்டிற்கு ஒரு ஆவாரம்பூ செடி வைக்குமாறு வேண்டுகோள் வைக்கிறார்.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post உடலில் அதிசயங்களை நிகழ்த்தும் ஆவாரம்பூ! appeared first on Dinakaran.

Tags : Nadtundo ,
× RELATED பாதங்களைப் பராமரிக்க எளிய வழிகள்!