×

‘சரித்திரத்தை யாராலும் அழிக்க முடியாது’ ஆயிரம் ஆண்டு வாழ்வோம் என நினைக்கும் பிரதமர் மோடி: நடிகர் பிரகாஷ்ராஜ் தாக்கு

புதுச்சேரி: புதுச்சேரி ராஜீவ்காந்தி அறக்கட்டளை சார்பில் நேருவின் 50வது நினைவு நாளையொட்டி ‘நேருவின் தேசிய கொள்கைகள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் 100அடி சாலையில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ரவிக்குமார் எம்.பி., நடிகர் பிரகாஷ்ராஜ், சமூக நல்லிணக்க முன்னணி தலைமை ஆலோசகர் ராஜன், ஏஐடியுசி தேசிய செயலாளர் வஹிதா நிஜாம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்கில் நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியதாவது: இங்கு நாம் நாட்டின் முதல் பிரதமரை பற்றி பேசிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இன்றைய பிரதமர் மோடி, தான் ஆயிரம் ஆண்டு வாழும் பிரதமர் என நினைத்து தேர்தல் முடிவுக்காக காத்திருக்கிறார். நேரு கல்வி, தொழில், அறிவியல் தான் முக்கியம் என கூறினார். ஆனால் தற்போது கடவுளுக்கு கோயில் கட்டிவிட்டு வாக்கு கேட்கிறார்கள். இந்திய நாட்டின் சரித்திரம் மிகப்பெரியது. அதை யாராலும் அழிக்கமுடியாது. நான் அரசியல் தான் செய்கிறேன். ஆனால் எந்த அரசியல் கட்சிகளிலும் இல்லை. மக்களின் பயம் தான்… எதிரியின் பலம். மக்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பது எனக்கு நன்கு தெரியும். அதைத்தான் நான் பேசுகிறேன்.

தமிழகத்தை பொறுத்தவரை சாதி, மதம் பிரச்னைகள் என்பது அரசியலில் எடுபடாது. தமிழகத்தில் 69 சதவீதம் இடஒதுக்கீடு பெற்று தந்ததில் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என அனைவருக்கும் பங்கு இருக்கிறது. காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னைக்கு மத்திய அரசு சரியான தீர்வு காண வேண்டும். அற்புதமான எதிர்காலம் கண்ணுக்கு தெரிகிறது. ஒரே கட்சி, ஒரே தலைவர் என்பது ஜனநாயகத்திற்கு ஆபத்து. நமது நாட்டில் வெவ்வேறு கலாசாரங்களை கொண்டுள்ளது. நாட்டின் வளர்ச்சிப்பாதையை கொண்டு செல்ல இந்தியா கூட்டணியில் திறமை மிக்கவர்கள் இணைந்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

The post ‘சரித்திரத்தை யாராலும் அழிக்க முடியாது’ ஆயிரம் ஆண்டு வாழ்வோம் என நினைக்கும் பிரதமர் மோடி: நடிகர் பிரகாஷ்ராஜ் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Modi ,Prakashraj Thakku ,Puducherry ,Nehru ,Rajiv Gandhi Foundation ,Chief Minister ,Narayanasamy ,Ravikumar ,
× RELATED கங்கை மாதா என்னை மடியில் ஏந்திக் கொண்டார் : பிரதமர் மோடி