×

திருவண்ணாமலையில் நள்ளிரவில் பரபரப்பு; மின்னல் தாக்கியதில் 4 கடைகளில் பயங்கர தீ: 4 வாலிபர்கள் காயம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நேற்றிரவு இடியுடன் பெய்த பலத்த மழையின்போது தென்னை மரங்களின் மீது மின்னல் தாக்கியது. இதில் அங்கிருந்த 4 கடைகள் தீப்பிடித்து எரிந்தது. திருவண்ணாமலையில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் இரவு 11மணியளவில் இடியுடன் கூடிய கனமழைபெய்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது காந்தி சிலை அருகே 2 தென்னை மரங்கள் மீது மின்னல் தாக்கியது. இதில் மரம் தீப்பிடித்து எரிந்தது. அப்போது அதில் இருந்து விழுந்த தீப்பொறி அங்குள்ள கடைகள் மீது விழுந்து தீப்பிடித்தது.

இதில் சைக்கிள் விற்பனை கடை, பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடை உள்பட 4 கடைகள் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் அருகில் இருந்த மொபைல் ஷோ ரூம் கடை உள்பட பல்வேறு கடைகள் தப்பியது. இதில் 4 கடைகளில் இருந்த பல லட்சம் மதிப்பிலான சைக்கிள்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதேபோல் திருவண்ணாமலை அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு மகன் அரவிந்தன்(21). இவர் புதூர் ஒட்டகுடிசல் விஜிபி நகர் அருகே உள்ள விவசாய நிலத்தில் வைக்கோல் போர் ஏற்றிய டிராக்டரை நிறுத்தி வைத்திருந்தார். இரவு பலத்த மழை பெய்ததால் அரவிந்தன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் சதீஷ்குமார்(19), சிவக்குமார் மகன் முத்துக்குமரன்(19), சோ. பள்ளம் கிராமத்தை சேர்ந்த பழனி மகன் பவுன்குமார்(30) ஆகியோர் வைக்கோல் போர் நனையாமல் இருக்க தார்பாய் கொண்டு மூடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது எதிர்பாராமல் மின்னல் தாக்கியதில் 4பேரும் காயம் அடைந்தனர். வைக்கோல் போரும் தீப்பிடித்து எரிந்தது. படுகாயம் அடைந்த 4பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மழை ெபய்து கொண்டிருந்ததால் வைக்கோல் போர் தானாக அணைந்துவிட்டது. இருப்பினும் டிராக்டர் சேதமானது. இதுகுறித்து திருவண்ணாமலை மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருவண்ணாமலையில் நள்ளிரவில் பரபரப்பு; மின்னல் தாக்கியதில் 4 கடைகளில் பயங்கர தீ: 4 வாலிபர்கள் காயம் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Thiruvannamalai ,
× RELATED அவமதிப்பு வழக்கில் திருவண்ணாமலை ஆட்சியர் ஆஜராக ஐகோர்ட் ஆணை..!!