×

குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின்சாதன பொருட்கள் பழுதடைவதால் பொதுமக்கள் மறியல் போராட்டம்: மின்வாரிய ஊழியர்களிடம் வாக்குவாதம்

 

திருவள்ளூர், ஜூன் 3: திருவள்ளூர் ஒன்றியம், புட்லூர் ராமாபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக வீடுகளுக்கு வழங்கப்படும் மின்மாற்றியில் இருந்து தனியார் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் மாற்றி வழங்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குறைந்த மின் அழுத்த மின்சாரம் வருவதால் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்களான டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி ஆகிய மின் சதன பொருட்கள் பழுதடைவதாக தெரிகிறது.

மேலும் புட்லூர், ராமாபுரம் பகுதியைச் சுற்றி சாலையின் குறுக்கே உயர் அழுத்த மின் ஒயர்கள் கைக்கு எட்டும் தூரத்திலேயே இருப்பதாகவும், அடிக்கடி அறுந்து விழுவதால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் குறைந்த மின்னழுத்தம் காரணமாக தண்ணீர் சரிவர வராததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு குழந்தைகள் முதல் முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து காக்களூர் மின்வாரிய அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தங்கள் பகுதிக்கு உடனடியாக முறையான மின்சாரம் வழங்க வேண்டும், சாலையில் கைக்கு எட்டும் உயரத்தில் உள்ள மின் ஒயர்களை சீரமைக்க வேண்டும் எனக்கூறி சிட்கோ தொழிற்பேட்டை சாலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த சாலை மறியல் ஆர்ப்பாட்டமானது தொடர்ந்தது. இந்நிலையில் மின்வாரிய உயர் அதிகாரிகள், திருவள்ளூர் தாலுகா காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பாக காணப்பட்டது.

The post குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின்சாதன பொருட்கள் பழுதடைவதால் பொதுமக்கள் மறியல் போராட்டம்: மின்வாரிய ஊழியர்களிடம் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Ramapuram ,Putlur, Thiruvallur Union ,Dinakaran ,
× RELATED தமிழகத்திலேயே அதிக வாக்கு...