×

மாடு முட்டி பெண் படுகாயம்; 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் கிராம தெருவில் நேற்று முன்தினம் சுற்றித் திரிந்த எருமை மாடு ஒன்று, அந்த வழியாக நடந்து சென்ற பொதுமக்கள் மீது பாய்ந்தது. இதில் அம்சா தோட்டம் தெருவை சேர்ந்த மதுமதி என்ற பெண்ணை முட்டியது. கொம்பில் சிக்கிய அவரை சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றது. இதில் அவர் படுகாயமடைந்தார். பொதுமக்கள் போராடி அவரை மீட்டனர். இபோல், சிவசங்கரன் என்பவர் உள்பட பலருக்கு சிராய்ப்புகள் ஏற்பட்டது. இதையடுத்து படுகாயமடைந்த மதுமதியை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள், அந்த எருமை மாட்டை பிடித்து வாகனத்தில் ஏற்றி பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டு தொழுவத்தில் ஒப்படைத்தனர். பின்னர் கால்நடை மருத்துவர்கள் அந்த எருமை மாட்டுக்கு தெரு நாய் கடித்து அதனால் வெறிபிடித்து பொதுமக்களை முட்டி தள்ளியதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே இந்த எருமை மாட்டு உரிமையாளர் யார் என்பது குறித்து திருவொற்றியூர் போலீசார் விசாரித்தனர். ஆனால் யாரும் உரிமை கொண்டாடவில்லை. இதையடுத்து காயமடைந்த மதுமதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இரண்டு பிரிவு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், தெருக்களில் மாடுகளை சுற்றி திரிய விட்டால் சம்பந்தப்பட்ட மாட்டின் உரிமையாளர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்ட மதுமதியின் குடும்பத்திற்கு நிவாரண உதவிகள் வழங்க கோரி அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு வந்த மண்டலக்குழு தலைவர் தனியரசு முற்றுகையிட்டவர்களிடம் சமாதானம் செய்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

The post மாடு முட்டி பெண் படுகாயம்; 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Tiruvotiyur ,Madhumati ,Amsa Garden Street ,
× RELATED மாடு முட்டி பெண் படுகாயம்; 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு