×

மயிலாடுதுறை துப்புரவு ஆய்வாளர் மீது தாக்குதல்: திருவேற்காடு நகராட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

 

பூந்தமல்லி, ஜூன் 3: மயிலாடுதுறையில் துப்புரவு ஆய்வாளர் தாக்கப்பட்டதை கண்டித்து திருவேற்காடு நகராட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை நகராட்சி கச்சேரி சாலையில் உள்ள பிரியாணி கடையில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பிருந்தா மற்றும் ஊழியர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கடையில் இருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.

அப்போது கடை உரிமையாளர் மற்றும் 20 பேர் கொண்ட கும்பல், துப்புரவு ஆய்வாளர் பிருந்தாவிடமிருந்து பிளாஸ்டிக் பைகளை பறித்ததுடன் அவரைத் தாக்கி அவதூறாக பேசினர். இதுகுறித்து நகராட்சி சார்பில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்த நிலையில், துப்புரவு ஆய்வாளரை தாக்கியோர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரிகள் கடைக்கும் சீல் வைக்கவில்லை.

இதனை கண்டித்து திருவேற்காடு நகராட்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நகராட்சி மற்றும் மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவு அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாநிலத் தலைவர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.

அப்போது, மயிலாடுதுறை துப்புரவு ஆய்வாளரை தாக்கிய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாநகராட்சி துப்புரவு அலுவலர் குமார், நகராட்சி துப்புரவு அலுவலர்கள் வெயில்முத்து(பூந்தமல்லி), நாகராஜ்(திருவேற்காடு) மற்றும் துப்புரவு பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.

The post மயிலாடுதுறை துப்புரவு ஆய்வாளர் மீது தாக்குதல்: திருவேற்காடு நகராட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Tiruvekadu Municipality ,Poontamalli ,Municipal Sanitation ,Inspector ,Brinda ,Kacheri Road ,
× RELATED மயிலாடுதுறை மாவட்டத்தில் சந்தை...