×

ஏஐ மற்றும் டேட்டா சயின்ஸில் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு குறுகிய கால சான்றிதழ் படிப்பு: ஏ.ஐ.சி.டி.இ அறிமுகம்

சென்னை: ஏஐ மற்றும் டேட்டா சயின்ஸ் படிப்புகளில் மாணவர்களின் திறனை ஏற்படுத்த பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு குறுகிய கால சான்றிதழ் படிப்புகளை ஏ.ஐ.சி.டி.இ வழங்க இருக்கிறது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலானது (ஏ.ஐ.சி.டி.இ), முக்கிய பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ), தரவு அறிவியல் (டேட்டா சயின்ஸ்) போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்ப தர மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் பயிற்சி அளிக்க குறுகிய கால படிப்புகளை கொண்டு வந்துள்ளது.

ஏஐ மற்றும் டேட்டா சயின்ஸ் ஆகிய படிப்புகள் இந்த ஆண்டு தமிழகக் கல்லூரிகளில் அதிகம் விரும்பப்படும் பாடமாக இருக்கிறது. தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் மூலம் பல சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுகின்றன. தற்போது ஏஐ போன்றவற்றின் தேவை அதிகரித்து வருவதால், ஏஐ மற்றும் தரவு அறிவியல் பகுப்பாய்வு குறித்த கூடுதல் படிப்புகளை நடத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கு 25 ஆயிரம் இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. ஏஐ, டேட்டா சயின்ஸ், ரோபோட்டிக்ஸ், இன்டெர்நெட் ஆப் திங்க்ஸ், சைபர்-பிசிகல் சிஸ்டம், விர்ச்சுவல் ரியாலிட்டி, மெஷின் லேர்னிங்க் போன்ற பாடங்களுக்கு குறைந்தபட்சம் ஐந்து வருட அனுபவமுள்ள மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஐஐடி வழங்கும் இந்த ஹைபிரிட் பாடங்கள் ஆறு மாதங்களில் இலவசமாக கற்பிக்கப்பட உள்ளன. இதற்கு ஜூன் 6க்குள் விண்ணப்பிக்க வேண்டும். சான்றிதழ் வழங்கும் திட்டத்திற்கு பிறகு கோர் இன்ஜினியரிங் ஆசிரியர்களை, ஏஐ ஆசிரியர்களாக ஏற்றுக்கொள்ளுமாறு பல கல்லூரி நிர்வாகங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும் தங்கள் ஆசிரியர்களை மேம்படுத்துவது முதல் தொழில்துறை நிபுணர்களை பணியமர்த்துவது என கல்லூரி நிர்வாகங்கள் பல்வேறு வழிகளில் முயற்சிகளை செய்து வருகின்றனர்.

The post ஏஐ மற்றும் டேட்டா சயின்ஸில் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு குறுகிய கால சான்றிதழ் படிப்பு: ஏ.ஐ.சி.டி.இ அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : AICTE ,CHENNAI ,All India Council for Technical Education ,Dinakaran ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...