×

மாநிலம் உருவாகி 10 ஆண்டுகள் நிறைவு விழா தெலங்கானா 3 மண்டலங்களாக பிரிப்பு: முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவிப்பு

திருமலை: தெலங்கானா 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது என மாநிலம் உருவாகி 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி நடந்த விழாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்தார். தெலங்கானா மாநிலம் உருவாகி 10 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இதைகொண்டாடும் விதமாக நேற்று ஐதராபாத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடந்த விழாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டு தெலங்கானா போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த தியாகிகளின் வீரத்தூணில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். பின்னர் போலீசாரின் மரியாதை ஏற்றுக்கொண்டு பேசியதாவது: தெலங்கானா மாநிலம் ஏற்பாடு செய்யப்பட்ட போது 10 ஆண்டுகள் ஐதராபாத், ஆந்திரா, தெலங்கானா மாநிலத்திற்கு ஒருங்கிணைந்த தலைநகராக அறிவிக்கப்பட்டது. தற்போது 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதால் இரு மாநிலத்திற்கான பிரிவினையில் உள்ள நிலுவை பணிகளை விரைந்து சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டு பிரிக்கப்படும். தெலங்கானா மாநிலம் மூன்று மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஐதராபாத் அவுட்டர் ரிங் ரோடு கீழ் உள்ள பகுதி நகர்ப்புற தெலங்கானாவாகவும், அவுட்டர் ரிங் ரோடு முதல் பிராந்திய ரிங் ரோடு பகுதி வரை துணை நகர்ப்புற தெலங்கானாவாகவும், பிராந்திய ரிங் ரோட்டில் இருந்து தெலங்கானா எல்லை வரை கிராமப்புற தெலங்கானாவாகவும் அமைக்கப்படுகிறது.

மூன்று பகுதிகளுக்கும் விரைவில் வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்படும். நாங்கள் ஆட்சிக்கு வந்த உடனே அடிமைத்தனத்தை உடைத்து மக்கள் ஆட்சியை வழங்கி வருகிறோம். தெலங்கானா பொது தெலங்கானாவாக மாற்றப்பட்டுள்ளது. மக்களின் விருப்பங்களை பிரதிபலிக்கும் வகையில் தெலங்கானா சின்னம் மாற்றி அமைக்கப்படும். முசி நதி அழகுபடுத்தும் திட்டம் மூலம் ஆயிரம் கோடியில் நீர்பிடிப்பு பகுதி வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் மண்டலமாக மாற்றப்படும். ஐதராபாத் நகரை உலக வரைபடத்தில் நிலை நிறுத்தும் வகையில் வளர்ச்சியில் சமரசமற்ற முயற்சிகளை மேற்கொள்வோம். தெலங்கானா மாநில மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள்.
தெலங்கானாவின் இருப்புக்கும் சுயமரியாதைக்கும் மகுடம் சூட்டி இன்றுடன் 4 கோடி மக்களின் இதயங்கள் மகிழ்ச்சியில் திளைக்கும் நாள். இதற்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 60 ஆண்டு கால கனவை நனவாக்கிய சோனியா காந்திக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

 

The post மாநிலம் உருவாகி 10 ஆண்டுகள் நிறைவு விழா தெலங்கானா 3 மண்டலங்களாக பிரிப்பு: முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Telangana ,Chief Minister ,Revanth Reddy ,Tirumala ,Hyderabad ,
× RELATED தெலங்கானாவில் 10 தொகுதியில் காங்கிரஸ்...