×

ஐதராபாத் இருமாநில பொதுத்தலைநகரம் என்பது முடிவுக்கு வந்தது ஆந்திராவிற்கு ஜெகன்மோகன் அறிவித்த 3 தலைநகரமா? சந்திரபாபு கூறிய அமராவதியா?: நாளைய தேர்தல் முடிவை எதிர்பார்த்திருக்கும் மக்கள்

திருமலை: ஐதராபாத் இரு மாநிலத்திற்கான பொதுத்தலைநகரம் என்பது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதனால் ஆந்திராவிற்கு ஜெகன்மோகன் அறிவித்த 3 தலைநகர் திட்டம் செயல்படுத்தப்படுமா? அல்லது சந்திரபாபு கூறியபடி அமராவதியே தலைநகராக மாறுமா? என்பதை அறிய நாளை தேர்தல் முடிவை பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் இருந்து 2014ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி தனி தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டது. இதனால் ஆந்திராவிற்கு என தனி தலைநகர் இல்லாததால் தெலங்கானாவில் உள்ள ஐதராபாத் இரு மாநிலத்திற்கான ஒருங்கிணைந்த தலைநகராக பிரிவினை சட்டத்தில் கொண்டு வரப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு ஐதரபாத் ஒருங்கிணைந்த தலைநகராக மாநில பிரிவினை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி 10 ஆண்டுகளாக ஐதரபாத் இருமாநில தலைநகரமாக இருந்தது. இது நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் ஐதராபாத்தில் உள்ள ஆந்திர அரசு அலுவலகங்கள் அனைத்தும் ஆந்திராவுக்கு மாற்றப்பட்டுள்ளது. 2016ல் சந்திரபாபு ஆந்திர முதல்வராக இருந்தபோதே 90 சதவீதம் அலுவலகங்கள் தெலுங்கானாவில் இருந்து ஆந்திராவுக்கு மாற்றப்பட்டன. அமராவதி தலைநகர் என அறிவித்து குண்டூர் மாவட்டத்தில் 34 ஆயிரம் ஏக்கர் நிலம் விவசாயிகளிடம் இருந்து கையப்படுத்தப்பட்டது.

அந்த இடத்தில் தான் தற்போது தலைமை செயலகம், சட்டப்பேரவை, உயர்நீதிமன்றம் ஆகியவை தற்காலிக கட்டிடமாக கட்டி நிர்வாக பணிகள் நடந்து வருகிறது. அதன்பிறகு 2019ம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெகன்மோகன் முதல்வரான பிறகு தற்போதுள்ள அமராவதி சட்டப்பேரவை தலைநகர் மட்டுமாக செயல்படும், விசாகப்பட்டினம் நிர்வாக தலைநகர், கர்னூல் நீதிமன்ற தலைநகர் என அறிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தார்.
அதற்குள் மீண்டும் தேர்தல் நடந்துள்ளது. இந்த தேர்தல் முடிவில் சந்திரபாபு நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஏற்கனவே முடிவு செய்தபடி அமராவதியே தலைநகராக இருக்கும் என தெரிவித்துள்ளார். ஜெகன்மோகன் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மூன்று தலைநகராக செயல்படும் என தெரிவித்துள்ளார். இதற்கிடையே இரு மாநிலங்களின் ஒருங்கிணைந்த தலைநகராக செயல்படும் ஐதராபாத்தில் இருந்து ஜூன் 2ம் தேதிக்கு முன் ஆந்திர அரசு தன் வசம் வைத்துள்ள அனைத்து கட்டிடங்களையும் காலி செய்ய தெலங்கானா அரசு அறிவிப்பு வெளியிட்டு நோட்டீஸ் வழங்கியது.

இதனையடுத்து ஐதராபாத்தில் செயல்பட்டு வந்த ஆந்திரா மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைமை அலுவலகம் அங்கிருந்து நீதிமன்ற தலைநகர் என அறிவிக்கப்பட்டுள்ள கர்னூலுக்கு மாற்ற முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவுகளை வழங்கினார். அதன்படி தற்போது மாற்றப்பட்டு வருகிறது. இது தவிர, அனைத்து கட்டிடங்களையும் தெலங்கானா அரசிடம் ஒப்படைத்து, அலுவலகங்களை ஆந்திராவுக்கு மாற்றுமாறு பொது நிர்வாகத் துறைக்கு (ஜிஏடி) முதல்வர் ஜெகன்மோகன் கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்தார். முதல்வர் ஜெகனின் உத்தரவின்படி, சில சட்டத்துறை அலுவலகங்கள் ஏற்கனவே கர்னூலுக்கு மாற்றப்பட்டுள்ளன, மீதமுள்ள அலுவலகங்கள் விஜயவாடா மற்றும் குண்டூருக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் நாளை வெளியாகும் தேர்தல் முடிவில் யார் வெற்றி பெறுவார்கள் ஆந்திராவிற்கு அமராவதியே தலைநகராக மாறுமா அல்லது மூன்று தலைநகர் திட்டம் செயல்படுத்தப்படுமா என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

 

The post ஐதராபாத் இருமாநில பொதுத்தலைநகரம் என்பது முடிவுக்கு வந்தது ஆந்திராவிற்கு ஜெகன்மோகன் அறிவித்த 3 தலைநகரமா? சந்திரபாபு கூறிய அமராவதியா?: நாளைய தேர்தல் முடிவை எதிர்பார்த்திருக்கும் மக்கள் appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Jagan Mohan ,Andhra ,Amravati ,Chandrababu ,Tirumala ,Jaganmohan ,Pradesh ,Amaravati ,Andhra Pradesh ,
× RELATED ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின்...