×

கடைஞாயிறு விழாவை முன்னிட்டு விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வர் கோயிலில் குவிந்த பெண்கள்: குழந்தை வரம் வேண்டி ஈரஆடையுடன் பிரார்த்தனை

பள்ளிகொண்டா: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த விரிஞ்சிபுரத்தில் மரகதாம்பிகை உடனுறை மார்கபந்தீஸ்வரர் கோயில் கார்த்திகை கடைஞாயிறு விழாவை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு வழக்கமாக சிம்மக்குளம் திறக்கப்பட்டது. இந்த சிம்மக்குளத்தில் ஒவ்வொரு ஆண்டும் நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை வரம் வேண்டி வரும் பெண்கள் நீரில் மூழ்கி கோயில் பிரகாரத்தில் படுத்துறங்குவர். அப்போது அவர்களது கனவில் மலர், குங்குமம் என்று ஏதாவது மங்கள பொருட்கள் வந்தால் குழந்தை நிச்சயம் என்பது நம்பிக்கை.இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குளத்தில் நீராட தடை இருந்து வந்தது. தற்போது, தொற்று குறைந்து வருவதால் இந்த ஆண்டாவது குளத்தில் நீராட அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் இருந்தனர். ஆனால், உருமாறிய புதிய வகை ஒமிக்ரான் வைரசால் இந்த ஆண்டும் தடை நீட்டிக்கப்பட்டது. இதனால், பக்தர்கள் குளத்தில் நீராட முடியாமல் வேதனைக்குள்ளாகினர். ஆனாலும், ஆன்லைன் முன்பதிவு செய்திருந்தவர்கள் காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்க அறநிலையத்துறை ஏற்பாடு செய்திருந்தது.அதற்கேற்ப சிம்மக்குளம் திறப்பு நேற்று நள்ளிரவு 12 மணியளவில் நடந்தது. இதில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோர் பங்கேற்று சிறப்பு பூஜை செய்து, சிம்மக்குளத்தை திறந்து வைத்தனர். தொடர்ந்து, மார்கபந்தீஸ்வர் மற்றும் மரகதாம்பிகை தாயாருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதில், அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாபு, விரிஞ்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் குணசுந்தரி பாலு, இந்து அறநிலையத்துறை வேலூர் மண்டல இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் விஜயா, வேலூர் சரக ஆய்வாளர் ரவிக்குமார், கோயில் செயல் அலுவலர் சசிகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டது. ஆனாலும் பக்தர்கள் கோயில் வெளியில் காத்திருந்தனர். தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்கள் 1 மணி நேரத்திற்கு 180 பக்தர்கள் வீதம் அனுமதிக்கப்பட்டனர். குளத்தில் பக்தர்கள் நீராட தடை உள்ளதால் தரிசனத்துக்கு செல்லும் முன்பு குளத்தில் இருக்கும் தண்ணீரை ஷவரில் வரவழைத்து குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனைக்கு வந்த பெண்கள் மீது தெளித்தனர்.இதையடுத்து ஈரஆடையுடன் பெண்கள் கோயில் பிரகாரத்தில் படுத்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்னர் தங்கள் கணவர் மற்றும் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்து அங்குள்ள மரத்தில் தொட்டில் கட்டினர். தொடர்ந்து இரவு 8 மணி வரை பக்தர்கள் கோயிலில் அனுமதிக்கப்படுவர் என்றும், முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. …

The post கடைஞாயிறு விழாவை முன்னிட்டு விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வர் கோயிலில் குவிந்த பெண்கள்: குழந்தை வரம் வேண்டி ஈரஆடையுடன் பிரார்த்தனை appeared first on Dinakaran.

Tags : Virinchipuram Markabandeeswar temple ,Pallikonda ,Maragathambikai Udanurai Markabandeeswarar ,Temple ,Virinchipuram ,Pallikonda, Vellore district ,Karthikai Kartika Sunday festival ,Virinchipuram Markabandeeswarar temple ,
× RELATED பள்ளிகொண்டா அருகே முந்தி செல்ல முயன்ற...