கூடலூர்: தேனி மாவட்டத்தில் முதல்போக சாகுபடிக்காக பெரியாறு அணையிலிருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள 14,707 ஏக்கர் நிலப்பரப்பில் பெரியாறு அணை பாசனம் மூலம் இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இவ்விளைநிலங்களுக்கு, ஆண்டுதோறும் முதல் போக சாகுபடி நாற்று நடவுக்காக, ஜூன் முதல் வாரம் தண்ணீர் திறப்பது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால், முதல் போகத்திற்கு ஜூன் மாதம் திறக்க வேண்டிய தண்ணீர் தாமதமானது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற உடன் 2021ல் முதல் 2023 வரை மூன்றாண்டுகளும் ஜூன் 1ம் தேதி அணையிலிருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து நீர்வரத்து உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, முதல்போக சாகுபடிக்கு பெரியாறு அணையிலிருந்து நேற்று (ஜூன் 1) தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, நேற்று பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.15 அடியாக இருந்தநிலையில், தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி, தேக்கடியில் தமிழக பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே உள்ள சுரங்க வாய்க்கால் ஷட்டர் பகுதியில் நடைபெற்றது. மதுரை நீர்வளத்துறை, பெரியாறு வைகை வடிநில கோட்ட செயற்பொறியாளர் அன்புச்செல்வம், தேனி மாவட்ட முதல்போக சாகுபடிக்கு 14,707 ஏக்கர் நிலங்களுக்கு 200 கனஅடி, தேனி மாவட்ட குடிநீர் தேவைக்கு 100 கன அடி, என மொத்தம் விநாடிக்கு 300 கன அடி தண்ணீரை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர்கள் குமார், மயில்வாகனன், பொறியாளர்கள் ராஜகோபால், நவீன்குமார், பிரேம்ராஜ்குமார், பிரவீன்குமார், விவசாயிகள் டாக்டர் சதீஷ்பாபு, கொடியரசன் மற்றும் சிலர் கலந்து கொண்டனர். இதையடுத்து அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீரில் மலர் தூவி வரவேற்றனர். தேர்தல் நடத்தை விதிகள் தற்போதும் அமலில் உள்ளதால், தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சியில், அமைச்சர், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாவட்ட கலெக்டர், விவசாய சங்கத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The post தேனி மாவட்ட முதல் போக சாகுபடிக்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.