×

புதுப்பாக்கம் பகுதியில் தொடர் மின் வெட்டு:எம்எல்ஏவிடம் குடியிருப்புவாசிகள் புகார்

திருப்ேபாரூர், ஜூன் 2: புதுப்பாக்கம் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்எல்ஏ பாலாஜியிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கம் கிராமத்தில், ஜஸ்ராஜ் நகர், சாய்பாபா காலனி, கேத்தரின் அவென்யூ, லட்சுமி அவென்யூ, இந்தியா காலனி, நல்ல தண்ணீர் குளம், கன்னியம்மன் கோயில் தெரு, பெரியார் நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகள் உள்ளன. சிறுசேரி தகவல் தொழில் நுட்ப பூங்காவை ஒட்டி உள்ள பகுதி என்பதால் புதிய வீட்டு மனைப்பிரிவுகள், புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் என அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

இதனால், இப்பகுதியில் மின்தேவை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. மாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் இருந்து புதுப்பாக்கம் கிராமத்திற்கு மின் விநியோகம் வழங்கப்படுகிறது. புதுப்பாக்கத்தை ஒட்டி சிறுசேரி மென்பொருள் பூங்காவில் தனியாக ஒரு மின் வழங்கல் நிலையம் அமைக்கப்பட்டாலும் அதில் புதுப்பாக்கம் இணைக்கப்படவில்லை. புதுப்பாக்கம் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிறிய மின் வழங்கல் நிலையம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் புதுப்பாக்கம் பகுதியில் பெரும்பாலான இடங்களில் தொடர்ச்சியான மின் வெட்டு, அடிக்கடி மின்தடை, குறைந்த மின் அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக அப்பகுதி குடியிருப்புவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து, மாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் ஜஸ்ராஜ் நகர், சாய்பாபா காலனி குடியிருப்பாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், மனுவை வாங்கக்கூட அதிகாரிகள் இல்லை என சங்கத்தின் நிர்வாகிகள் வேதனை தெரிவித்தனர். இதனால், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜியை தொடர்புகொண்டு, தங்கள் பகுதி பிரச்னை குறித்து தெரிவித்தனர். அவற்றை கேட்டுக்கொண்ட எம்எல்ஏ, மின்வாரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, மின்வெட்டு ஏற்படும் பகுதியில் நேரில் பார்வையிட்டு மின்தடை சிக்கலை தீர்ப்பதாக உறுதியளித்தார்.

The post புதுப்பாக்கம் பகுதியில் தொடர் மின் வெட்டு:எம்எல்ஏவிடம் குடியிருப்புவாசிகள் புகார் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,MLA ,Thirupeparur ,Balaji ,Pudupakkam ,Kelambakkam ,Jasraj Nagar ,Saibaba Colony ,Catherine Avenue ,Lakshmi Avenue ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி சிறையில் செல்போன்கள் பறிமுதல்