×

நடிகர் சல்மான்கானை கொல்ல சதி ரவுடி கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது: பாகிஸ்தானில் இருந்து ஏகே 47 துப்பாக்கி வாங்க முயற்சித்தது அம்பலம்

மும்பை: நடிகர் சல்மான் கானை சுட்டுக்கொல்ல சதி திட்டம் தீட்டியதாக பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த 4 பேரை மும்பை அருகே போலீசார் கைது செய்தனர். கடந்த 1998ம் ஆண்டு படப்பிடிப்புக்காக ராஜ்ஸ்தான் சென்ற நடிகர் சல்மான்கான், மான் ஒன்றை சுட்டுக்கொன்றார். தாங்கள் வழிபட்டு வந்த மானை சுட்டுக் கொன்றதால், சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் மிரட்டல் விடுத்தது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி பைக்கில் வந்த ஆசாமிகள்,மும்பை பாந்திராவில் உள்ள சல்மான்கான் வீட்டை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் சல்மான் கானை சுட்டு கொல்ல ஒரு கும்பல் சதி திட்டம் தீட்டியதாக பன்வெல் துணை போலீஸ் கமிஷனர் விவேக் பன்சாரே தெரிவித்தார்.

இதற்காக 17 பேர் பன்வெல்லில் உள்ள சல்மானின் பண்ணை வீட்டை பிப்ரவரி மாதம் நோட்டம் விட்டனர். இது தொடர்பாக அஜய் காஷ்யப் என்ற தனஞ்சய் தப்பேசிங், நஹ்வி என்ற கவுரவ் பாட்டியா, வாசீம் சிக்னா என்ற வாப்சி கான் மற்றும் ரிஸ்வான்கான் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சல்மான் கானின் பண்ணை வீட்டை லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தான் நோட்டம் விடுவதாக கிடைத்த தகவலை தெடர்ந்து இந்த 4 பேரும் கைது செய்யப்பட்டதாக பன்வெல் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிதின் தாக்கரே தெரிவித்தார். கைது செய்யபட்டவர்களுள் ஒருவரான காஷ்யப், சல்மானை கொலை செய்வதற்காக ஏகே 47 ரக துப்பாக்கியை வாங்குவதற்காக பாகிஸ்தானை சேர்ந்த டோகர் என்பவருடன் தொடர்பு கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், தாக்குதலுக்குப் பிறகு தலைமறைவாக திட்டமிட்ட அவர்கள், தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் சந்திக்க முடிவு செய்ததாகவும், அங்கிருந்து இலங்கைக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

The post நடிகர் சல்மான்கானை கொல்ல சதி ரவுடி கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது: பாகிஸ்தானில் இருந்து ஏகே 47 துப்பாக்கி வாங்க முயற்சித்தது அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Salman Khan ,Pakistan ,Mumbai ,Lawrence Bishnoi ,Rajasthan ,Ambalam ,
× RELATED சல்மான் கான் வீட்டின் மீது...