×

மீண்டும் தமிழ்நாட்டில் மழை 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக வட மாநிலங்களை வாட்டி வதைக்கும் வெயிலானது இந்த ஆண்டு தமிழ்நாட்டிலும் கால்பதித்துள்ளது. வழக்கத்திற்கு மாறான கோடை வெயிலை தாங்க முடியாமல் பொதுமக்களும், உயிர்ப் பிராணிகளும் தவித்து வருகின்றனர். கத்திரி வெயில் முடிந்தாலும், சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் சற்றும் குறையவில்லை. இதனால் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்றய தினம் பொருத்தவரையில் ஒருசில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இந்நிலையில் இன்றய தினம் 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 3 மற்றும் 4ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை பொருத்தவரை அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் (1-3° செல்சியஸ்) குறைந்து, இயல்பை ஒட்டியும், இயல்பை விட சற்று அதிகமாகவும் இருக்கக்கூடும்.
சென்னையை பொருத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று மற்றும் நாளை சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The post மீண்டும் தமிழ்நாட்டில் மழை 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai Meteorological Department ,Chennai ,
× RELATED தமிழ்நாட்டில் 24ம் தேதி வரை மழை நீடிக்கும் வாய்ப்பு