×

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: 4ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்

சென்னை: நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. நாளை மறுதினம் காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்படுகிறது. தமிழகத்தில் 39 தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. ஜூன் 4ம் தேதி காலை 9 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியவரும். தற்போதைய 17வது மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன் புதிதாக தேர்தல் நடத்தி, புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதையடுத்து, நாடு முழுவதும் நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். அதன்படி, 1ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதியும், 2வது கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26ம் தேதியும், 3ம் கட்ட வாக்குப்பதிவு மே 7ம் தேதியும், 4ம் கட்ட வாக்குப்பதிவு மே 13ம் தேதியும், 5ம் கட்ட வாக்குப்பதிவு மே 20ம் தேதியும், 6ம் கட்ட வாக்குப்பதிவு மே 25ம் தேதியும், 7ம் கட்ட இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ம் தேதி (நேற்று) நடந்து முடிந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் மற்றும் ஒடிசா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்றத்துக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.

தமிழகத்தில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தேர்தல் முடிந்ததும், வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு 39 தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் துணை ராணுவம், தமிழக சிறப்பு காவல் படை வீரர்கள் 3 அடுக்கு பாதுகாப்பு பணியில் கடந்த 42 நாளாக ஈடுபட்டு வருகின்றனர். இறுதிக்கட்ட தேர்தல் நேற்று (ஜூன் 1ம் தேதி) முடிந்ததுள்ள நிலையில், ஜூன் 4ம் தேதி (நாளை மறுதினம்) காலை 8 மணிக்கு நாடு முழுவதும் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் இந்திய தேர்தல் ஆணையமும், அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தமிழகத்தில் 39 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நாளை மறுதினம் காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி, வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 39 மையங்களில், 43 கட்டிடங்களில் உள்ள 234 அறைகளில் நடைபெறுகிறது. ஒரு வாக்கு எண்ணிக்கை அறையில் 14 மேஜைகள் போடப்பட்டிருக்கும். வாக்காளர்கள் எண்ணிக்கை, பதிவான வாக்குகள் எண்ணிக்கை அடிப்படையில் தேவைப்படும் இடங்களில் கூடுதல் மேஜைகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில், மொத்தமுள்ள 39 மையங்களிலும் வாக்கு எண்ணிக்கைக்காக 3,300 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணியில் 10 ஆயிரம் பணியாளர்கள், அவர்களுக்கு உதவியாக மின்னணு இயந்திரங்கள் எடுத்து வருதல் உள்ளிட்டவற்றுக்காக 24 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்படுத்தப்பட உள்ளனர். நுண் பார்வையாளர்களாக 4,500 பேர் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கான அனைத்துக்கட்ட பயிற்சியும் முடிந்துள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறும்போது, “தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி காலை 8 மணிக்கு அனைத்து மையங்களிலும் தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். இதைத்தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கும். மின்னணு வாக்குகள் எண்ணப்படும் போதே, தபால் வாக்குகள் எண்ணிக்கையும் தொடர்ந்து நடைபெறும். தபால் வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னரே, இறுதி சுற்று வாக்குப்பதிவு விவரங்கள் அறிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஒவ்வொரு மேஜையிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு வாக்கு எண்ணும் பணிகளை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர வாக்கு எண்ணும் மையங்கள் அனைத்திலும் வீடியோ கேமரா மூலமும் சுற்றியுள்ள நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்படும்” என்றார். தமிழகத்தில் நாளை மறுதினம் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கும் நிலையில், அன்றைய தினம் காலை 9 மணிக்கெல்லாம் முன்னணி நிலவரம் வெளிவர தொடங்கி விடும். 4ம் தேதி மாலைக்குள் இறுதி நிலவரம் தெரியும்.

 

The post நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: 4ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Parliamentary Lok Sabha Elections ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...