×

கன்னியாகுமரியில் 3 நாட்களாக இருந்த 45 மணி நேர தியானத்தை முடித்தார் மோடி: திருவள்ளுவர் சிலைக்கு மாலை வைத்து மரியாதை

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் பிரதமர் மோடி 3 நாட்களாக மேற்கொண்ட 45 மணி நேர தியானத்தை நேற்று நிறைவு செய்தார். பின்னர் அவர் அங்குள்ள திருவள்ளுவர் சிலைக்கு சென்று பாதங்களில் மலர் மாலை வைத்து வணங்கினார். பின்னர் தனது பயணத்தை முடித்து புறப்பட்டு சென்றார். 18 வது மக்களவை தேர்தலுக்கான வாக்கு பதிவு கடந்த ஏப்ரல் 19 ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடந்தது. தேர்தல் பிரசாரம் நிறைவடைந்ததை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் தியானத்துக்காக கடந்த 30ம் தேதி மாலை சிறப்பு விமானத்தில் திருவனந்தபுரம் வந்தார். பின்னர் கன்னியாகுமரி வந்த அவர் பகவதி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து கடல் நடுவே அமையப்பெற்றுள்ள சுவாமி விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்றார். காவி வேஷ்டி, சட்டை, துண்டு என்று முற்றிலும் காவி உடை தரித்து, துறவி போல் நெற்றியில் சந்தனத்தால் பட்டையிட்டு நடுவே குங்கும பொட்டு வைத்து கையில் ருத்ராட்ச மாலையுடன் 3 நாள் தியானத்தை தொடர்ந்தார். மவுன விரதத்தை கடைபிடித்த அவர், உதவியாளர்களிடம் சைகை மூலமே பேசினார். நேற்று (1ம் தேதி) 3வது நாளாக அவர் தியானத்தை தொடர்ந்தார். நேற்று காலை 5.25 மணிக்கு தியான மண்டபத்தில் இருந்து பிரதமர் மோடி வெளியே வந்தார்.

அவர் காவி உடை தான் அணிந்திருந்தார். தியான மண்டபத்தில் இருந்து வெளியே வந்த அவர் நேராக சூரிய உதயத்தை பார்வையிட்டார். பின்னர் கமண்டலத்தில் உள்ள நீரை ஊற்றி சூரிய நமஸ்காரம் செய்தார். சிறிது நேரம் சூரியனை வணங்கியபடி நின்ற அவர் அங்கிருந்து விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்று மலர் தூவி வணங்கினார். பின்னர்  பாதம் மண்டபத்திற்கும் சென்று தரிசனம் செய்த அவர் மண்டபத்துக்கு வெளியே தரையில் அமர்ந்து கடல் அழகை ரசித்தார். பின்னர் சிறிது நேரம் நடைபயிற்சியில் இருந்தார். மூச்சு பயிற்சியும் செய்தார். காலை 7.30க்கு மீண்டும் தியான மண்டபத்துக்குள் சென்று தியானத்தை தொடர்ந்தார். மதியம் 2.45க்கு தியான மண்டபத்தில் இருந்து பிரதமர் மோடி வெளியே வந்தார். தியான மண்டபத்தில் இருந்து வந்த அவர், விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு வெளியே, அங்கிருந்த பணியாளர்களுடன் குழு போட்டோ எடுத்துக் கொண்டார். அங்கிருந்து விவேகானந்தா படகில், திருவள்ளுவர் சிலைக்கு வந்தார். மதியம் 2.55க்கு திருவள்ளுவர் சிலைக்கு வந்த பிரதமர், மண்டபத்துக்குள் சென்று பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து திருவள்ளுவரின் பாதங்களில் ரோஜா பூ மாலை வைத்தும், மலர் தூவியும் வணங்கினார். பின்னர், திருவள்ளுவர் சிலையை சுற்றி வந்தார். பின்னர் அங்கிருந்து, மாலை 3.12 க்கு படகில் புறப்பட்டார். மாலை 3.17க்கு படகு தளத்தை வந்தடைந்தார். படகில் இருந்து இறங்கிய பிரதமர் மாலை 3.30க்கு அரசு விருந்தினர் மாளிகை வந்தார். மாளிகையில் உள்ள ஓய்வு அறைக்குள் சென்ற அவர், அங்கு விவேகானந்தா கேந்திரா நிர்வாகிகள் சிலரை சந்தித்து பேசினார். மாலை 3.50க்கு, காரில் ஹெலிபேடு வந்தார். மாலை 3.56க்கு பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார். அவருடன் மேலும் 2 ஹெலிகாப்டரில் பாதுகாப்பு படை அதிகாரிகள் சென்றனர். பிரதமர் புறப்பட்டு சென்ற பின், அங்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பியது.

 

The post கன்னியாகுமரியில் 3 நாட்களாக இருந்த 45 மணி நேர தியானத்தை முடித்தார் மோடி: திருவள்ளுவர் சிலைக்கு மாலை வைத்து மரியாதை appeared first on Dinakaran.

Tags : Modi ,Kanyakumari ,Nagercoil ,Thiruvalluvar ,
× RELATED கன்னியாகுமரி- களியக்காவிளை...