×

மக்களவை தேர்தல் நிறைவுபெற்றது கடைசிக்கட்டத்தில் 60% வாக்குப்பதிவு: மேற்கு வங்கத்தில் பல இடங்களில் வன்முறை

புதுடெல்லி: பஞ்சாப் உள்ளிட்ட 8 மாநிலங்களில் 57 தொகுதிகளில் நேற்று நடந்த கடைசிக்கட்ட மக்களவை தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. மேற்கு வங்கத்தில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்ததால் பதற்றம் நிலவியது. இத்துடன் நாடு முழுவதும் 7 கட்டமாக நடந்த மக்களவை தேர்தல் நிறைவடைந்தது. நாளை மறுதினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான 18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கியது. முதல் 6 கட்ட தேர்தலில் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 486 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில், 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 57 தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில், உபியின் வாரணாசி தொகுதியில் ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கி பிரதமர் மோடி, டயமண்ட் ஹார்பர் தொகுதியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி, பீகாரின் பாடலிபுத்ராவில் முன்னாள் முதல்வர் லாலுவின் மகள் மிசா பார்தி, இமாச்சலின் மண்டியில் பாஜ வேட்பாளர் நடிகை கங்கனா ரனாவத், ஒன்றிய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர் (ஹமிர்பூர், இமாச்சல்), ஆர்.கே.சிங் (அராக், பீகார்) உள்ளிட்டோர் நட்சத்திர வேட்பாளர்களாக போட்டியிட்டனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பஞ்சாப், உபி உள்ளிட்ட வடமாநிலங்களில் நேற்றும் கடும் வெயில் நிலவியதால் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. ஆனாலும், வெயிலுக்கு முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

மேற்கு வங்கத்தில் 9, இமாச்சலில் 4, உபியில் 13, பீகாரில் 8, ஒடிசாவில் 6, ஜார்க்கண்ட்டில் 3, சண்டிகரில் 1, பஞ்சாப்பில் 13 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இதில், கொல்கத்தாவில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, அபிஷேக் பானர்ஜி, பாட்னாவில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ரப்ரி தேவி, மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரசாத் யாதவ், இமாச்சலில் மண்டி தொகுதியில் வாக்களித்த அத்தொகுதி பாஜ வேட்பாளர் கங்கனா ரனாவத், உபியின் கோரக்பூரில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றினர். வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் தனது வாக்கை செலுத்திய பின் அளித்த பேட்டியில், ‘‘பிரதமர் மோடி காசியில் தோல்வி பெறுவோம் என்பதை தெரிந்து கொண்டதால் கன்னியாகுமரிக்கு தியானம் செய்ய சென்றுள்ளார்’’ என்றார். மேற்கு வங்கம் தவிர மற்ற மாநிலங்களில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. மேற்கு வங்க மாநிலத்தின் ஜாதவ்பூர் தொகுதிக்கு உட்பட்ட பான்கரின் சதுலியா பகுதியில் வாக்குப்பதிவுக்கு முன்பாக திரிணாமுல் காங்கிரஸ், ஐஎஸ்எப், கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அப்பகுதியில் பெட்ரோல் குண்டுகள் கைப்பற்றப்பட்டதால் பதற்றம் நிலவியது.

தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தின் குல்தாலி பகுதியில் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகுந்த கும்பல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தையும், விவிபேட் கருவியையும் பறித்துக் கொண்டு, அருகில் இருந்த குளத்தில் வீசிச் சென்றனர். அவை வாக்குப்பதிவில் பயன்படுத்த கொண்டு வரப்படவில்லை எனவும், மாற்று இயந்திரமாக பயன்படுத்த வைத்திருந்ததாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல டயமண்ட் ஹார்பர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜ கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. பஷிர்ஹத் தொகுதிக்கு உட்பட்ட சந்தேஷ்காலியில் பல்வேறு தேர்தல் முறைகேடுகள் நடந்ததாக திரிணாமுல் காங்கிரஸ், பாஜ தொண்டர்கள் இடையே மோதல் நடந்தது. இதுதவிர, ஒடிசாவில் 42 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இறுதிக்கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இறுதியில், மாலை 6 மணி வரை நடந்த வாக்குப்பதிவில் மொத்தம் 60 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 7 கட்ட மக்களவை தேர்தல் முடிவடைந்துள்ளது. அடுத்ததாக வாக்கு எண்ணிக்கைக்கான கவுன்ட்டவுன் தொடங்கி உள்ளது. 7 கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுதினம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. முதல் முறையாக 44 நாட்கள் நடந்துள்ள நீண்ட மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று, மத்தியில் அடுத்ததாக யார் ஆட்சி அமைக்கப் போவது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

The post மக்களவை தேர்தல் நிறைவுபெற்றது கடைசிக்கட்டத்தில் 60% வாக்குப்பதிவு: மேற்கு வங்கத்தில் பல இடங்களில் வன்முறை appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Elections ,Bengal ,New Delhi ,Lok Sabha elections ,Punjab ,West Bengal ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தலில் இஸ்லாமிய...