×

ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கீழக்கரை: கீழக்கரை அருகே, ஏர்வாடியில் பிரசித்தி பெற்ற சமூக நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா ஊர்வலம் கோலாகலமாக இன்று அதிகாலை நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே, ஏர்வாடியில் பிரசித்தி பெற்ற மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லாஹ் பாதுஷா நாயகம் தர்ஹா உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சமூக நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.

இந்தாண்டு சந்தனக்கூடு திருவிழா கடந்த மே 9ம் தேதி மவ்லீது ஷரீப் ஓதப்பட்டு, மே 19ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு திருவிழா ஊர்வலம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் முஜாவீர் நல்ல இபுராஹீம் மஹாவில் இருந்து துவங்கியது. அலங்கார ரதத்துடன் சந்தனக்கூடு யானை, குதிரை நடனம், பாரம்பரிய சம்பிரதாயப்படி தீப்பந்தம் ஏந்தியவாறு இஸ்லாமிய மார்க்கப் பாடல் பாடியவாறு ஊர்வலம் புறப்பட்டு அதிகாலை 5 மணிக்கு தர்ஹா வந்தடைந்தது. தர்ஹாவை 3 முறை சந்தனக்கூடு வலம் வந்து சிறப்பு பிரார்த்தனைக்கு பின் மக்பராவில் சந்தனம் பூசப்பட்டது.

உலக அமைதி, சமூக நல்லிணக்கம், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டி நடந்த பிரார்த்தனையில் தமிழகம், கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விழாவையொட்டி வண்ண மின்விளக்கு அலங்காரத்தில் தர்ஹா ஜொலித்தது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ராமநாதபுரம், சாயல்குடி, பெரியபட்டணம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏர்வாடி தர்ஹாவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஜூன் 7ம் தேதி மாலை 5.30க்கு கொடியிறக்கம் நடைபெற்று நெய் சோறு வழங்கப்படுகிறது.

The post ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Sandanakudu Festival Kolakalam ,Airwadi ,Thousands Attend ,Allakkarai ,Sandanakku festival ,Erwadi ,Allakkar ,Ramanathapuram district ,Sultan Mahan Kudbu ,Sandanakudu Festival ,Kolakalam: Thousands Attend ,
× RELATED நாங்குநேரி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொழிலாளி மீது போக்சோ வழக்கு