×

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சென்னை, ஜூன் 1: திருவான்மியூரில் உள்ள மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில், 36 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா, வரும் ஜூலை 12ம் தேதி வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது, என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட அறிக்கை: திருவான்மியூர், மயூரபுரம், மத் பாம்பன் குமரகுருதாசர் கோயில் 3 ஏக்கர் 11 சென்ட் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த சொத்தும், இதில் அமைந்துள்ள திருக்கோயிலும் நிர்வகிக்க மத் பாம்பன் சுவாமிகள், தமது உயிலில் தேஜோ மண்டல்சபா என்ற அமைப்பினை ஏற்படுத்தியிருந்தார். அதன் காரியதரிசி ஜிஜி.குப்புசாமி செட்டியார் என்பவரால் கடந்த 1984ம் ஆண்டு செப். 9ம் தேதி தாமாக முன்வந்து இந்து சமய அறநிலையத்துறை வசம் கோயில் ஒப்படைக்கப்பட்டது.

அன்று முதல் தொடர்ச்சியாக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இந்த கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 1985ம் ஆண்டு முதல் மகா தேஜோ மண்டலத்தாரால் இது கோயில் அல்ல சமாதி என விளம்புகை செய்திட பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. சென்னை உயர் நீதிமன்ற 2 நீதிபதிகளை கொண்ட அமர்வு, வழக்குகளின் இறுதி தீர்ப்பை கடந்த மார்ச் 27ம் தேதி வழங்கியது. அதில் மத் பாம்பன் குமரகுருதாசர் கோயில் எனவும் அதன் நிர்வாகம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை உறுதி செய்து வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சின்னசாமி சமாதி நிலையத்தில் கோயில் நிர்வாகத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லாத உழவாரப்பணிக் குழு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ராஜா என்பவர் அருண், முருகேசன், சிவா மற்றும் ரமேஷ் ஆகியோர் ஆதரவுடன் தொடர்ந்து சட்ட விரோதமான ஆக்கிரமிப்பு செய்து உள்ளார். இது சட்ட விரோதமான செயலாகும். மேலும் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிமுறைகளுக்கு புறம்பானதாகும்.

எனவே, மேற்குறிப்பிட்ட சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படியும், இந்து சமய அறநிலையத்துறை சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டும் கோயில் நிர்வாகம் நடைபெறுவதற்கு ஏதுவாக கோயில் நிர்வாகத்துக்கு விரோதமாக செயல்பட்டு வரும் அமைப்பினை சின்னசாமி சமாதி நிலையத்திலிருந்து வெளியேற்றி மத் பாம்பன் குமரகுருதாசர் கோயில் நேரடி ஆளுகையின் கீழ் கொண்டுவரப்பட்டது. மேலும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவினை அடுத்து, சுமார் 36 ஆண்டுகளாக பக்தர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் மத் பாம்பன் குமரகுருதாசர் கோயில் குடமுழுக்கு வெகு விமரிசையாக வரும் ஜூலை 12ம் தேதி அன்று நடத்தப்படவுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Math Pamban Kumaragurudasar Temple Immersion Ceremony ,Charity Department ,Chennai, ,Math Pampan Kumaragurudasar Temple ,Thiruvanmiyur ,Department of Hindu Religious Charities ,Kudamuzku ceremony ,Math Pamban Kumaragurudasar Temple ,Charities Department ,Dinakaran ,
× RELATED திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு...