×

தனியார் பள்ளிக்கு இணையாக மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சீருடை: முதல் நாளிலேயே வழங்க ஏற்பாடு

சென்னை, ஜூன் 1: தனியார் பள்ளிக்கு இணையாக சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சீருடை, பள்ளி திறக்கப்படும் முதல் நாளிலேயே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 119 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் 98,633 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 3,013 ஆசியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், சென்னை மாநகராட்சி எல்லை விரிவாக்கத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 139 பள்ளிகள் சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பள்ளிகள் அனைத்தையும் சீரமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

அதேபோல் 12 மற்றும் 11ம், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சென்னை மாநகராட்சி மாணவர்கள் அதிகளவில் மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். அதன்படி கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளது. அதேபோல் காலை சிற்றுண்டி திட்டம், ஸ்மார்ட் வகுப்புகள் போன்ற திட்டங்கள் மாணவர்களை மேலும் ஊக்கப்படுத்தி படிப்பு மட்டுமின்றி பல திறன்களை வெளிக்கொண்டு வருகிறது. தனியார் பள்ளிகளில் உள்ள அனைத்து வசதிகளும் மாநகராட்சி அரசு பள்ளிகளில் உள்ளதாக பெற்றோர்களின் கவனம் தற்போது திரும்பியுள்ளது. மாணவர்கள் சேர்க்கையும் கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் இலவசமாக சீருடை வழங்கப்படுகிறது. பள்ளி பாடப்புத்தங்கள், நோட்டு புத்தகங்கள், புத்தகப்பை, காலணி போன்ற மாணவர்களுக்கு தேவையான உபகணரங்களை அரசு வழங்கிவருகிறது.

இந்நிலையில் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவ, மாணவிகளுக்கு முதல் நாளிலேயே பாடப்புத்தகம் உள்ளிட்ட அனைத்து உபகரணங்கள் வழங்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதேபோல் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை முன்கூட்டியே தைத்து வைக்கப்பட்டு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தாண்டு மாணவர்களின் அளவுகளை எடுத்து அதற்கு ஏற்ப தைக்கப்பட்ட உள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்படும் முதல் நாளிலேயே பாடப்புத்தகம் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் சில நாட்களில் அனைத்து பொருட்களும் சென்றடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மாணவர்களின் இலவச சீருடை அவர்களின் அளவிற்கு தைத்து வழங்கப்பட உள்ளது. சீருடை தைப்பதற்கு முன்பு ஒவ்வொரு பள்ளி மாணவர்களின் அளவு தனித்தனியாக கணக்கீடு செய்யப்பட்டு தைக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால் இதுவரை வழங்கப்பட்ட பொது அளவான சீருடைகள் மாணவர்களுக்கு சரியாக இல்லாமல் இருந்தது. இதனால் இந்தாண்டு மாணவர்களின் அளவிற்கு ஏற்ப தைக்கப்பட்டுள்ளது.

அதன்படி 1 முதல் 5ம் வகுப்பிற்கு டவுசர்-சட்டை, 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பேண்ட்-சட்டை, 1 முதல் 4ம் வகுப்பு மாணவிகளுக்கு முட்டிகால் பாவாடை- சட்டை, 5ம் வகுப்பு மாணவிகளுக்கு முழுபாவாடை-சட்டை, 6 முதல் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு கோர்ட் சுடிதார் தைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே சமூக நலத்துறை சார்பில் தொடங்கியது. இதனால் தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்கள் சீருடை வழங்கப்படுகிறது. இந்த சீருடைகள் பள்ளி திறக்கப்பட உள்ள முதல் நாளிலேயே வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தனியார் பள்ளிக்கு இணையாக மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சீருடை: முதல் நாளிலேயே வழங்க ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Municipal Corporation schools ,Chennai Corporation Education Department ,Dinakaran ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...