×

சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ஓட்டலில் ஆபாச வீடியோ எடுத்து நடிகைக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது

பூந்தமல்லி, ஜூன் 1: மதுரையை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண், சென்னை மதுரவாயலில் வாடகை வீட்டில் தங்கி, சினிமாவில் துணை நடிகையாக வேலை செய்து வருகிறார். இவர், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது: நான் சினிமா துறையில் துணை நடிகையாக நடித்து வருகிறேன். முன்னதாக, எனது குடும்ப சூழ்நிலை காரணமாக தனியார் நிறுவனத்தில் நான் வேலை செய்து வந்தபோது, அம்பத்தூரை சேர்ந்த கார்த்திக்(39), என்பவர் அறிமுகமானார். அப்போது, தனக்கு தெரிந்த தயாரிப்பாளர் மூலம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக என்னிடம் அவர் கூறினார். அதன்படி, ஒரு தயாரிப்பாளரை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, அவர் தன்னை அனுசரித்து நடந்து கொண்டால் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறினார். அதற்கு நான் மறுத்துவிட்டேன். பின்னர், மருத்துவ துறையை சேர்ந்த ஒருவரை கார்த்திக் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்நிலையில் கார்த்திக், பிரபல இயக்குனர் ஒருவர் எடுக்கும் புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி வாங்கித் தருவதாக கூறினார். இதற்காக என்னை போட்டோ மற்றும் வீடியோவை எடுக்க வேண்டும், என்று கூறி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு, என்னை கட்டாயப்படுத்தி, ஆபாசமாக போட்டோ, வீடியோ எடுத்தார். ஆனால், சொன்னபடி எனக்கு பட வாய்ப்பு வாங்கி தரவில்லை. இந்நிலையில், நான் சொல்வதை கேட்காவிட்டால், என்னிடம் உள்ள உனது ஆபாச வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன், என மிரட்டினார். இதனால், எனது எதிர்காலம் வீணாகிவிடும் என பயந்த நான், அவ்வாறு செய்ய வேண்டாம், என கெஞ்சினேன்.

இதையடுத்து, அந்த ஆபாச வீடியோக்களை அழிக்க ₹1.20 லட்சம் பெற்றுக்கொண்டார். ஆனாலும் அந்த ஆபாச போட்டோ, வீடியோக்களை அழிக்காத கார்த்திக், அதை வைத்து என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறப்பட்டிருந்தது. புகார் மனுவை பெற்றுக்கொண்ட அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து கார்த்திக்கை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளி தீபக் என்பவரை தேடி வருகின்றனர்.

The post சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ஓட்டலில் ஆபாச வீடியோ எடுத்து நடிகைக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Madurai ,Maduravayal, Chennai ,Virugampakkam All Women ,Police Station ,
× RELATED நிர்வாண நிலையில் கை, கால்கள்...