×

அரசு தொழிற்பயிற்சி மையங்களில் 100% மாணவர் சேர்க்கை : கலெக்டர் அறிவுறுத்தல்

திருவள்ளூர், ஜூன் 1: திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு தொழிற்பயிற்சி மையங்களில் 100 சதவீதம் மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் மாவட்ட அளவிலான திறன் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் அ.சேகர், மாவட்ட திறன் பயிற்சி மைய உதவி இயக்குநர் ரவீந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பி.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது பேசிய கலெக்டர், இந்த மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி மையங்கள் அனைத்து வசதியுடன் செயல்பட்டு வருகிறது. அதோடு இங்கு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறது. அதனால், இந்த ஆண்டில் இந்த தொழிற்பயிற்சி மையங்களில் 100 சதவீதம் மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மகளிர் திட்டம் ஒருங்கிணைத்து மாணவர்கள் சேர்க்கைக்கான பணி மேற்கொள்ள வேண்டும். மேலும் தொழிற்சாலை நிறுவனங்களுடன் சிறந்த திறன் கொண்ட பயிற்சியாளர்களை தேவைக்கேற்ப நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். பல்வேறு தொழிற்சாலை நிறுவனங்களுக்கு நேரில் மாணவர்களை அழைத்துச் சென்று அவர்களுக்கான பணிகளின் தன்மைகள், செயல்பாடுகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்து ஊக்கம் அளிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இதில் ஐடிஐ முதல்வர்கள், பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

The post அரசு தொழிற்பயிற்சி மையங்களில் 100% மாணவர் சேர்க்கை : கலெக்டர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Collector ,T. Prabusankar ,Tiruvallur district ,Tiruvallur ,Dinakaran ,
× RELATED முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி, மாவட்ட...