×

வரும் 4ம் தேதி 39 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை சட்டம் – ஒழுங்கு தொடர்பாக தலைமை செயலாளர் ஆலோசனை: டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பு

சென்னை: தமிழகத்தில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் வருகிற 4ம் தேதி எண்ணப்பட உள்ளது. இதையொட்டி சட்டம்-ஒழுங்கு தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கடந்த ஏப். 19ம் தேதி 39 நாடாளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்றத்துக்கான இடைத்தேர்தல் ஒரேகட்டமாக நடந்து முடிந்துள்ளது. ஜூன் 1ம் தேதி (இன்று) 7வது இறுதிக்கட்ட தேர்தல் நடந்து முடிந்ததும், வருகிற 4ம் தேதி (செவ்வாய்) காலை 8 மணிக்கு நாடு முழுவதும் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்க உள்ளது. முதலில் தபால் வாக்குகளை எண்ணும் பணியும், அதை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படவுள்ளன.

இதற்கான பணியில் தமிழகம் முழுவதும் 38,500 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதுதவிர வெளிமாநிலங்களை சேர்ந்த 57 ஐஏஎஸ் அதிகாரிகள் பொது பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் உதவி தேர்தல் சிறப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை, தேர்தல் முடிவுகள் அறிவிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள், சட்டம் -ஒழுங்கு தொடர்பாக சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று மாலை தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா சென்னை போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம் -ஒழுங்கு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், சென்னை மாநகர ேபாலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

The post வரும் 4ம் தேதி 39 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை சட்டம் – ஒழுங்கு தொடர்பாக தலைமை செயலாளர் ஆலோசனை: டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,DGP ,Shankar Jiwal ,CHENNAI ,Tamil Nadu ,Shiv Das Meena ,Dinakaran ,
× RELATED மகளிர் துப்பாக்கி சுடும் ஒட்டு மொத்த...