×

கோவையில் மூளைச்சாவு அடைந்த 11 மாத குழந்தையின் இதயத்தால் மற்றொரு குழந்தைக்கு மறுவாழ்வு: விமானம் மூலம் சென்னை கொண்டு வந்து பொருத்தினர்

கோவை: கோவையில் மூளைச்சாவு அடைந்த 11 மாத குழந்தையின் இதயம் கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு ஒரு வயது குழந்தைக்கு பொருத்தப்பட்டது. கோவையை சேர்ந்தவர் சரவணன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்க்கிறார். இவர்களுக்கு 11 மாதமான ஆதிரா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்த குழந்தை வீட்டில் நாற்காலியில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த குழந்தை கீழே விழுந்தது. இதில் காயம் அடைந்த குழந்தையை அவரது பெற்றோர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், குழந்தை ஆதிரா மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, உடல் உறுப்புதானம் குறித்து பெற்றோரிடம் டாக்டர்கள் விளக்கினர். இதனை ஏற்று, குழந்தையின் பெற்றோர் குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். பின்னர், டாக்டர்கள் குழந்தையின் இதயம், கிட்னி ஆகியவற்றை அறுவை சிகிச்சை செய்து எடுத்தனர். இதற்கிடையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும், ஒரு வயது பெண் குழந்தைக்கு இதயம் தேவைப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து, ஆதிராவின் இதயத்தை கோவையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் அனுப்ப முடிவு செய்தனர். அதன்படி, கோவை தனியார் மருத்துவமனையில் இருந்து குழந்தையின் இதயம் ஆம்புலன்ஸ் மூலமாக கோவை விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டது. பின்னர், அங்கிருந்து விமானம் மூலமாக சென்னை கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ஆம்புலன்சில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதனை தொடர்ந்து டாக்டர்கள் இதயத்தை சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு வயது குழந்தைக்கு பொருத்தினர். இதன் மூலம் அந்த குழந்தை உயிர் பிழைத்தது.

* அண்ணன் சிகிச்சைக்கு பணமில்லாததால் தம்பி தற்கொலை கண்கள் தானம்
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள பள்ளிவிளையைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன்கள் ஜான்சன் (22), வினோத் (19). பெற்றோர்களை இழந்த இவர்கள் இருவரும் பாட்டி ரஞ்சிதத்தின் பராமரிப்பில் இருந்து வந்தனர். இதில் ஜான்சன் கிட்னி பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் செய்து வந்தார். வினோத் மீது ராதாபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ஜான்சனின் சிகிச்சைக்காக பணமின்றி இருவரும் தவித்து வந்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த வினோத் கடந்த 22ம்தேதி விஷம் குடித்தார். நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதனையடுத்து அவரது கண்களை தானம் செய்வதாக அறிவித்து அரசு மருத்துவமனையில் அவரது அண்ணன் ஜான்சன் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து அவரது கண்களை டாக்டர்கள் பாதுகாப்பாக அகற்றி கண் வங்கிக்கு எடுத்து சென்றுள்ளனர். அவரது கண்கள் விரைவில் வேறு நபருக்கு பொருத்தப்படுகிறது.

The post கோவையில் மூளைச்சாவு அடைந்த 11 மாத குழந்தையின் இதயத்தால் மற்றொரு குழந்தைக்கு மறுவாழ்வு: விமானம் மூலம் சென்னை கொண்டு வந்து பொருத்தினர் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Chennai ,Saravanan ,
× RELATED வெளிநாட்டு பயணத்தில் இருந்து...