×

கோடைகால பாதுகாப்பு

நன்றி குங்குமம் தோழி

மாறிவரும் காலநிலை மாற்றங்கள் வாழ்வியலுக்கு பெரும் சவாலாகவே மாறிவிட்டது. சமீப காலமாக மழை பெய்தாலும் மக்கள் பாதிக்கும் விதமாக ஒரு வருடத்திற்கான மழை ஒரே நாளில் பேய் மழையாய் கொட்டித் தீர்க்கிறது. அதேபோல கோடைகால வெயில் என்றாலும் உடம்பை சுட்டெரிக்கும் வண்ணமாக ச்சும்மா அடிச்சு நகர்த்துகிறது. மழையோ, வெயிலோ இரண்டுமே மகிழ்ச்சியை தருவதற்குப் பதிலாக நம்மை பயமுறுத்தும் விதமாகவே உள்ளது என நம்மிடம் பேச ஆரம்பித்தவர் சித்த மருத்துவ நிபுணரான மானக்சா.

முன்பெல்லாம் கோடை வெயில் வந்தால் உற்சாகம் கொப்பளிக்கும், காரணம், அப்போதுதான் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்கள். விருந்தினர் வீட்டுக்கு நாம் செல்வதும், விருந்தினர்கள் நமது வீட்டுக்கு வருவதும், விதவிதமான விளையாட்டுக்களை கூடி விளையாடுவதுமாக கோடை காலம் இனிதே கழியும். ஆனால் இப்போதெல்லாம் கோடைகாலம் குதூகலத்தை வெகுவாகக் குறைத்திருக்கிறது என்றே சொல்லலாம். கோடைகால சூரியக்கதிர்கள் தீ ஜுவாலையாக நமது உடலை சுட்டெரிக்கின்றது என்றவரிடத்தில், கோடை வெயிலால் வரும் உடல் பிரச்னைகளுக்கு சித்த மருத்துவத்தில் உள்ள தீர்வுகள் குறித்து கேட்டபோது…

கோடைகால பாதுகாப்பு குறித்து..?

கோடை வெயில் 104 F. மேல் போகும்போது வெப்ப அலை வீசும். இதனால் உடலுக்கு களைப்பு, சோர்வு, தசைப்பிடிப்பு, தலைவலி போன்றவை ஏற்படும். இந்த நேரங்களில் வெளியே செல்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். வயதானவர்கள், நாள்பட்ட நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் வெயில் நேரங்களில் வெளியே செல்வதை பெரும்பாலும் தவிர்த்தல் நலம்.

அத்தியாவசிய விஷயங்களுக்கு வெளியே செல்வதாக இருந்தால் காட்டன் மற்றும் கதர் உடைகளையே அணிய வேண்டும். இறுக்கமான ஆடைகள் உடலை சரியாக குளிர்விக்க அனுமதிக்காது. எனவே தளர்வான, இலகுரக காட்டன், கதர் ஆடைகளை அணிவதே நல்லது. கைக்குழந்தைகளுக்கு ஈரத்துணி அல்லது ஸ்பாஞ்ச் வைத்து உடலை துடைத்து விடுதல் வேண்டும்.

அகலமான விளிம்பு கொண்ட தொப்பி மற்றும் சன்கிளாஸ்களை கோடை காலத்தில் பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பானது. இள வண்ண நிறங்களில் தயாரான குடைகளை கைகளில் கொண்டு செல்லலாம். தண்ணீர் பாட்டிலை எப்போதும் கைகளில் வைத்துக் கொள்வதும் எப்போதும் நல்லது. வெளியில் செல்லும்போது முகத்திற்கு SPF ஸ்பெக்ட்ரம் சன்ஸ்கிரீம்களை பயன்படுத்தலாம்.

கோடை காலத்தில் வியர்க்குரு,தோல் அரிப்பு மற்றும் தோல் சிவப்பு போன்றவை ஏன் வருகிறது?

வியர்வைச் சுரப்பியில் இருந்து தோலின் மேற்பரப்பிற்கு செல்லும் குழாய்களை வியர்வைத் துளைகள் தடுக்கும்போது வியர்க்குரு உருவாகிறது. வெப்பத்தால் வரும் வியர்வை ஆவியாவதற்குப் பதிலாக, தோலின் அடிப்பகுதியிலேயே சிக்கி, சருமத்தில் எரிச்சல் மற்றும் புடைப்புகளை ஏற்படுத்துகிறது. இதன் வெளிப்பாடுதான் வியர்க்குரு, தோல் அரிப்பு, தோல் சிவப்பு போன்றவை.

*வியர்க்குருவுக்கு ஏராளமான பாட்டி வைத்தியங்கள் உள்ளன. இதில் சந்தனம் மிகச் சிறந்த நிவாரணி. கலப்படமில்லாத சந்தனத்தை தண்ணீர் விட்டு அரைத்து, உடல் முழுவதும் பூசிக்கொண்டு பிறகு குளிக்கலாம். சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்,சந்தனத்துடன் மஞ்சள்,வேப்பிலை சேர்த்தும் அரைத்து தடவலாம்.

*மஞ்சளும், வேப்பிலையும் சிறந்த கிருமி நாசினி என்பதால், வியர்க்குருவை கட்டுப்படுத்துவதோடு தோல் அரிப்பையும் குணப்படுத்தும்.

*வியர்க்குரு உள்ள இடங்களில் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் ‘அறுகன் தைலம்’ அல்லது ‘குப்பை மேனி’ தைலத்தை பூசலாம். உடலில் தேய்த்து குளிக்க ஆவாரம்பூ, பாசிப் பயறு, கருஞ்சீரகம், வெந்தயம், வெட்டிவேர் கலந்த பொடியை பயன்படுத்தலாம்.

*அதேபோல் சோற்றுக் கற்றாழையின் உள் பகுதியை எடுத்து தேய்த்துக் குளித்தாலும் வியர்க்குரு பிரச்னை நீங்கும்.

சருமத்தில் தேமல் மற்றும் படர்தாமரை எதனால் வருகிறது?

தோலில் ஏற்படும் வியர்வையால் எப்போதும் உடல் ஈரத்துடனே இருந்தால் டீனியா வகை பூஞ்சைகள் உடலில் தேமல் , படர்தாமரையை ஏற்படுத்தும். இது தோல் அரிப்புடன், தோலினை சொறியும்போது எரிச்சல் மற்றும் அந்த இடத்தில் கருப்பு அல்லது சிவப்பு நிற படைகளை ஏற்படுத்துகிறது. இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் தன்மை கொண்டது.

*சீமை அகத்தி என்னும் வண்டுக்கொல்லி செடியின் இலையை, எலுமிச்சை பழச்சாற்றில் அரைத்து எடுத்த சாறுடன், தேங்காய் எண்ணெய் கலந்து தேமல், படர்தாமரை மீது போட்டுவர முற்றிலும் மறைந்து விடும் அல்லது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் சீமை அகத்தி களிம்பினை பயன்படுத்தினாலும் மறையும்.

கோடை காலத்தில் ஏற்படும் தாகம் மற்றும் நீரிழப்பு குறித்து..?

கோடை வெயில் பாதிப்பிலிருந்து உடலின் வெப்பத்தை சீராக வைத்திருக்க தோல் ஏராளமான வியர்வையை வெளியேற்றுகிறது, இதனால் தாகம், நா வறட்சி, நீரிழப்பு போன்றவை ஏற்படுகிறது, இதற்கு உடனடியாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

* தண்ணீரில் வெட்டி வேரினை ஊற வைத்து குடித்தால் நாவறட்சி, தாகம் நீங்கும்.

* நீரிழப்பால் ஏற்படும் உப்புச்சத்து குறைவுக்கு, மோரில் உப்பு சேர்த்து குடிக்கலாம். ஓ.ஆர்.எஸ் கரைசலுடன் தண்ணீர் கலந்து குடிக்கலாம். நன்னாரி எலுமிச்சைப்பழ சர்பத் குடிக்கலாம், பதிமுகம் அல்லது சீரகத்தை காய்ச்சிய தண்ணீரையும் குடிக்கலாம்.

கோடை காலத்தில் ஏற்படும் நாவறட்சி, சிறுநீர் கடுப்பு, எரிச்சல் ஏற்படக் காரணம்?

கோடை காலத்தில் நாம் அருந்துகிற தண்ணீர் வியர்வையாக வெளியேறுவதால் அதற்கு ஏற்ப தண்ணீரை அதிகமாகவே அருந்த வேண்டும்.

* புளியுடன் வெல்லத்தைக் கரைத்து, எலுமிச்சை பழச்சாறு, ஏலக்காய் பொடி, சுக்குப் பொடி, உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். இதை வெயில் காலத்தில் குடித்து வந்தால் தாகம், நாவறட்சி, சிறுநீர் கடுப்பு, எரிச்சல் போன்றவை நீங்கும். உடலில் நீர் சத்து குறையாதவாறு பார்த்துக்கொள்ளும்.

* இளநீர், பதநீர், நுங்கு, வெண்பூசணி ஜூஸ், சோற்றுக் கற்றாழை ஜூஸ், தர்பூசணி ஜூஸ், முலாம் பழம் ஜூஸ் இவற்றை அதிகம் எடுக்கலாம்.

* சப்ஜா விதையினை மோரில் சேர்த்தும் குடிக்கலாம்.

* சிறிதளவு புளியுடன், 2 எலுமிச்சைப் பழம், 2 வெல்லம் தேவையான அளவு ஏலக்காய் பொடி, சுக்குப்பொடி இணைத்து பானகம் தயாரித்தும் குடிக்கலாம்.

கோடை காலத்தில் ஏற்படும் வெப்ப பக்கவாதம் (Heat stroke) குறித்து..?

உடல் 104 டிகிரி அல்லது அதற்கு மேற்பட்ட வெப்பநிலையை அடையும் போது வெப்ப பக்கவாதம் (Heat stroke) ஏற்படுகிறது. பெரும்பாலும் வெப்ப பக்கவாதம் வருவதற்கு முன்பு அதீத சோர்வு இருக்கும். இதற்கு உடனடி சிகிச்சை அளிக்கவில்லை என்றால், வெப்ப பக்கவாதத்திற்கு வழிவகுத்து, உயிருக்கே ஆபத்தை இது உருவாக்கும்.

அதிகமாக வியர்த்தல், மயக்கம், தலை சுற்றல், அதீத சோர்வு, வேகமான இதயத் துடிப்பு, தலைவலி மற்றும் குமட்டல், மாறுபட்ட பேச்சு, விரைவான சுவாசம் மற்றும் இதயத் துடிப்பு போன்றவை வெப்ப பக்கவாதத்தின் அறிகுறிகள். இதனை உடனடியாக கவனிக்காமல் விட்டால் வெப்ப பக்கவாதம் மற்றும் உயிரிழப்பு ஏற்படும்.வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரை காற்றோட்டமான இடத்தில், நிழலான பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். தண்ணீர் தெளித்து உடல் வெப்பத்தை குறைத்து முதலுதவி சிகிச்சை கொடுக்க வேண்டும். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை வழங்க வேண்டும்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post கோடைகால பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : kumkum doshi ,Dinakaran ,
× RELATED கேஸ் விலை உயர்வு… சிக்கனத்துக்கு சில வழிகள்!