×

கோடை விடுமுறைக்கு எங்கு போகலாம்?

நன்றி குங்குமம் தோழி

கோடை காலத்தில் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் விடுமுறை என்பதால், பலரும் சுற்றுலாவிற்கு பிளான் செய்திருப்பார்கள். தமிழகத்தில் இந்த காலத்தில் அதிக அளவு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனாலேயே கோடை விடுமுறையை குளுகுளுவென கழிக்க மலைப்பிரதேசங்களுக்கு செல்ல அனைவரும் விரும்புவார்கள். இதனாலேயே இந்த நேரத்தில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்கள் அதிக அளவு மக்களின் வருகையை சந்திக்கும்.

இந்த வருடம் கூட்டத்தினை கட்டுப்படுத்த அரசு இ-பாஸ் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. இதனால் அங்கு செல்ல முடியாது என்றால் கோடை விடுமுறைக்கு சுற்றுலா போக முடியாது என்றில்லை. ஊட்டி, கொடைக்கானலைத் தவிர்த்து நம்முடைய தமிழகத்தில் பல அழகான மனதுக்கு ரிலாக்ஸ் அளிக்கக்கூடிய இடங்கள் உள்ளன. அதுவும் குடும்பமாக செல்லும் போது நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இருந்து ஒரு பிரேக் கிடைக்க இந்த இடங்களுக்கு செல்லலாம்.

தேனி

பார்க்கும் இடமெல்லாம் விவசாயம், அதைத் தாண்டி மேற்குத் தொடர்ச்சி மலைகள் அணைகட்டி ரம்மியமாக இருக்கும் ஊர்தான் தேனி. இங்கு விவசாயம்தான் பிரதானம். மலைகள் அதிகமாக இருக்கும் பகுதி என்பதால் இந்த மாவட்டம் முழுவதும் மேகமலை, சுருளி அருவி ஆகியவை பொதுவாக அறியப்பட்ட இடங்களாகும். ஆனால் இதைத்தாண்டி குரங்கணி, கும்பக்கரை அருவி, டாப் ஸ்டேஷன் வியூ பாயின்ட், சேரன் வேடிக்கை பூங்கா, புலி அருவி, சோத்துப்பாறை அணை, எலிவால் அருவி என பல இடங்கள் சுற்றிப்பார்க்க ஏற்ற இடங்களாக இருக்கிறது.
தேனியில் கோடை காலத்தை இனிமையாக கழிக்க மேகமலைக்கு செல்லலாம்.

தேனிக்கு செல்ல சின்னமனூரிலிருந்து பேருந்து வசதி இருக்கிறது. 5 மலைச் சிகரங்களுக்கு நடுவே அமைந்திருக்கிறது மேகமலை. ஏராளமான அரிய வகை உயிரினங்கள், நீர் நிலைகள், குளுமையான கால நிலையம் என அனைத்தும் நிச்சயம் நம்மை குளிர்வித்து விடும். இதற்கு அடுத்து குரங்கணி மலை. இந்த மலையில் வனத்துறை அனுமதி அளித்தால் மலை ஏறலாம். இந்தப் பகுதியில் மட்டும் 6 சிற்றோடைகள் இருக்கின்றன. ஒருபக்கம் கொல்லிமலையும், மறுபக்கம் குரங்கணி மலையும் என இரண்டு மலைகளும் சுற்றிப் பார்க்க ஏற்ற இடங்கள். போடிநாயக்கனூரிலிருந்து 12 கிலோ மீட்டர் சென்றால் குரங்கணியின் அடிவாரத்தை அடைந்துவிடலாம்.

அங்கு தங்குவதற்கு ரூம்களும் ஓட்டல் வசதிகளும் உள்ளன. அங்கிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் நடந்து சென்றால் டாப் ஸ்டேஷன் வியூ பாயின்ட் வந்துவிடும். இங்கு முழுவதுமே தேயிலை தோட்டம், அடர்த்தியான மரங்கள்தான் பரந்து விரிந்திருக்கும். குழந்தைகளுக்கு ஏற்ற இடம் சேரனின் வேடிக்கை பூங்கா. குழந்தைகள் பூங்கா, படகு சவாரி என குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்த அனைத்து அம்சங்களும் இங்குள்ளது. தேனிக்கு செல்ல எல்லா ஊர்களிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது. பயணப் பிரியர் எனில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து காலை 7.15 மணிக்கு தேனி செல்லும் ரயிலில் சென்றால் தேனியின் முழு அழகையும் காணலாம். இரண்டு மலைகளுக்கு நடுவில் செல்லும் இந்த ரயிலில் ஒரு முறையாவது சென்று விடுங்கள்.

மூணாறு

தமிழ்நாட்டிலேயே மூணாறில் இருக்கிற காலச்சூழ்நிலை மற்ற மாவட்டங்களில் வராது. காலையில் இதமான வெப்பம், இரவு குளிர் என இந்த காலச்சூழ்நிலை இங்கு ரசிக்கும்படியாக இருக்கும். தேனியில் இருந்து மூணாறு இரண்டு மணி நேர பயணம்தான். மூணாறு கேரளா அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது. மூணாறில் முழுவதும் இருக்கிற சுற்றுலாப் பகுதிகளான மாட்டுப்பட்டி, குண்டளை எக்கோ பாயின்ட், குண்டளை அணைக்கட்டு, டாப் ஸ்டேஷன், தேயிலை அருங்காட்சியகம், ஆனையிரங்கல் அணைக்கட்டு, மலைக்கள்ளன் குகை, ஆரஞ்சு தோப்பு, ஸ்பைசஸ் தோட்டம், பூப்பாறை, சதுரங்கப்பாறை என பல்வேறு சுற்றுலாத்தலங்களையும் ஒரே நாளில் சுற்றிப் பார்க்கும் விதமாகவும் கேரள அரசு சார்பாக இயங்கும் அரசு பேருந்திலேயே ஒரு நாளைக்கு 300 ரூபாய் செலுத்தி மூணாறை சுற்றிப் பார்க்கலாம். மூணாறில் முக்கியமாக பார்க்க வேண்டியதென்றால் அது கொளுக்கு மலை தான். கடல் மட்டத்திலிருந்து 7130 அடி உயரத்தில் இருக்கிற இந்த மலையில் அதிகாலையில் சென்றால் மேகங்களுக்கு மேலேதான் நின்றிருப்போம். அங்கிருந்து சூரியன் உதிக்கும் காட்சி பார்ப்பதற்கே பிரமிப்பாக இருக்கும்.

காந்தளூர்

கேரளா மற்றும் தமிழகத்தின் எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதியில், மூணாறிலிருந்து உடுமலைப்பேட்டை செல்லும் வழியின் இடையே காந்தளூர் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 5000 அடி உயரத்தில் உள்ளது. உயரமானதாக இருப்பதால், காந்தளூர் குளிர்ந்த தட்பவெப்ப நிலைகள் கொண்ட பகுதியாக உள்ளது. மலைகள், நீர்வீழ்ச்சிகள், ஆறு, தேயிலைத் தோட்டங்கள், பழத் தோட்டங்கள் போன்றவை இங்கு உள்ளன.

ஆப்பிளுக்கு பெயர் பெற்ற காஷ்மீருக்கு அடுத்தபடியாக, தென் இந்தியாவில் காந்தளூரில் மட்டுமே ஆப்பிள்கள் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் ப்ளம்ஸ், ஆரஞ்சு, பிளாக்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி பழங்களும் விளைவிக்கப்படுகிறது. காந்தளூர் முழுவதும் அருவிகள் நிறைந்திருக்கிறது. முக்கியமாக இந்தப் பகுதியில் உள்ள காந்தளூர் அருவி, தூவானம் அருவி, சின்னாறு என பார்ப்பதற்கும் குளிக்கவும் பல இடங்கள் இருக்கிறது.

காந்தளூரில் தங்குவதற்கு காட்டேஜ்களும் கூடாரங்களும் பலவிதமான அமைப்புகளுடன் வாடகைக்கு கிடைக்கும். இரவில் ஜீப்பில் சவாரி செய்யும் வசதியும் ஏற்படுத்தி தருவார்கள். வனத்துறையின் அனுமதியுடன் காட்டுக்குள் டிரக்கிங் செல்லலாம். காட்டுக்குள் தங்குவது மற்றும் அருவியில் குளிப்பதற்கு என அனைத்திற்கும் கேரள வன அதிகாரிகளிடம் அனுமதி வாங்க வேண்டும். நடுத்தர உயர் நடுத்தர குடும்பங்களுக்கு ஏற்ற, செலவு குறைவான விடுமுறை கொண்டாட்டத்துக்கான இடம் காந்தளூர்.

டாப்சிலிப்

காந்தளூரில் இருந்து 86 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது டாப்சிலிப். டாப்சிலிப் முழுவதுமே மலைகளால் சூழ்ந்த பகுதி. இது வனவிலங்குகள் நடமாடும் பகுதியும் கூட. இதனால் இரண்டு சக்கர வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை. கார்களிலோ அல்லது பேருந்திலோ இங்கு செல்லலாம். டாப்சிலிப் தேக்கு மரங்கள் அதிகம் உள்ள பகுதி.

இது ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. இங்கிலாந்து ஆட்சி செய்த காலத்தில் இங்கிருக்கும் மரங்களை வெட்டி அங்கு அனுப்பியிருக்கிறார்கள். மலைகளின் மீதிருந்து மரங்களை வெட்டி அதை ஆறுகள் வழியாக கீழே கொண்டு வந்து அங்கிருந்து யானைகளை வைத்து மரங்களை வண்டிகளில் ஏற்றி இங்கிலாந்திற்கு நம்மூர் மரங்கள் பயணித்திருக்கிறது. இதனால்தான் இந்தப் பகுதிக்கு டாப்சிலிப் என பெயர் வந்ததாக சொல்வார்கள்.

அன்றைய காலக்கட்டத்தில் பெரிய பெரிய மரங்களை எடுத்துச் செல்ல யானைகள் தேவைப்பட்டன. அதனால் யானைகளை பிடித்து பழக்கப்படுத்தி, முகாம்களில் வளர்க்கப்பட்டன. அந்த வளர்ப்பு யானைகளின் முகாம்களை இன்றும் அங்கு காண முடியும். தமிழ்நாட்டில் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு அடுத்து டாப்சிலிப் யானைகள் முகாம் பெயர் பெற்றது. அடர்ந்த வனப்பகுதிக்குள் இருக்கும் டாப்சிலிப்பில் தனியார் விடுதிகள் எதுவும் இல்லை.

வனத்துறை விடுதிகளில்தான் தங்க வேண்டும். உணவு சாப்பிட வேண்டுமென்றாலும், வனத்துறை கேண்டின் ஒன்று மட்டுமே உள்ளது. ஆங்காங்கே மர வீடு, மூங்கில் வீடு உள்ளிட்ட பல்வேறு தங்குமிடங்கள் உள்ளன. அவற்றில் தங்க ஆன்லைனில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். தங்குமிடங்களுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும். யானை மீது அமர்ந்து 20 நிமிடங்கள் காட்டிற்குள் உலா வருகையில் பெரிய பெரிய மரங்களையும் காட்டின் அழகையும், பச்சை பசேலென இருக்கும் மலைகளையும் வன விலங்குகளையும் காணலாம்.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post கோடை விடுமுறைக்கு எங்கு போகலாம்? appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi ,Tamil Nadu ,Glukulu ,Dinakaran ,
× RELATED கேஸ் விலை உயர்வு… சிக்கனத்துக்கு சில வழிகள்!