×

மயிலாடுதுறையில் பட்டண பிரவேச நிகழ்ச்சி கோலாகலம்: அதிகாலையில் ஞான கொலுக்காட்சி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஞானபுரீஸ்வரர் கோயில் வைகாசி பெருவிழாவையொட்டி பட்டண பிரவேச நிகழ்ச்சி விடிய விடிய நடந்தது. அதிகாலையில் ஞான கொலுக்காட்சி நடந்தது.
மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் 16ம் நூற்றாண்டை சேர்ந்த தருமபுரம் ஆதீன திருமடம் அமைந்துள்ளது. இங்கு 1,500 ஆண்டுகள் பழமையான ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் வைகாசி பெருவிழா கொடியேற்றம் கடந்த 20ம் தேதி நடந்தது.

26ம் தேதி திருக்கல்யாண உற்சவம், 28ம் தேதி தேரோட்டம் நடந்தது. நேற்று முன்தினம் ஆதீனத்தை தோற்றுவித்த குரு ஞானசம்பந்தரின் குருவான கமலை ஞானப்பிரகாசர் குருபூஜை திருநாள் கொண்டாடப்பட்டது. நேற்றிரவு (30ம் தேதி) 10 மணிக்கு பட்டண பிரவேச நிகழ்ச்சி துவங்கியது. தருபுர ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் கயிலை மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி திருஆபரணங்கள் அணிந்து கொண்டு திருக்கூட்ட அடியவர்கள் படைசூழ சிவிகை பல்லக்கில் எழுந்தருளினார். இதையடுத்து பல்லக்கை பக்தர்கள் தூக்கி சென்றனர். நான்கு வீதிகளிலும் பூரண கும்ப மரியாதையுடன் பக்தர்கள் குருமகா சன்னிதானத்துக்கு வரவேற்பு அளித்து வழிபாடு நடத்தினர்.

முக்கிய வீதிகள் வழியாக சென்று இன்று அதிகாலை 2 மணிக்கு நிலையை பல்லக்கு வந்தடைந்தது. இதைதொடர்ந்து அதிகாலை 2.30 மணிக்கு மடத்தில் ஞான கொலுக்காட்சி நடந்தது. குருமகா சன்னிதானத்துக்கு திருப்பனந்தாள் ஆதீன இளவரசு மத் சபாபதிதம்பிரான் சுவாமிகள் பாவான அபிஷேகம், தீபாராதனை செய்து வழிபாடு நடத்தினார். காலை 6 மணி முதல் சன்னிதானம், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏடிஎஸ்பி தலைமையில் 2 டிஎஸ்பி, 5 இன்ஸ்பெக்டர் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

The post மயிலாடுதுறையில் பட்டண பிரவேச நிகழ்ச்சி கோலாகலம்: அதிகாலையில் ஞான கொலுக்காட்சி appeared first on Dinakaran.

Tags : Mayiladudhara ,Kolagalam ,Kulukadashi ,Mayiladuthura ,Entrance Ceremony ,Vaikasy Ceremony ,Gnanapuriswarar Temple ,Darumapuram Adina Thirumadam ,Gana Kolukadashi ,
× RELATED சிலர் வீடுகளில் ஸ்டிக்கர் கோலம் ஒட்டி இருப்பது சரிதானா?